செவ்வாய், நவம்பர் 24, 2009

கலைஞர் தீர்க்கதரிசி

0 கருத்துகள்
இன்று நடப்பதை அன்றே தன் வசனத்தில் எழுதியிருந்தார் கலைஞர். அவர் ஒரு தீர்க்கதரிசிதானே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கலைஞரின் வசனம்

காஞ்சிபுரம் ஐயருக்கு சமர்ப்பணம் ஆக்குகிறேன்.

கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

கடவுள் பக்தர்களும் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால்.

வியாழன், அக்டோபர் 01, 2009

சிங்காரி சரக்கு

3 கருத்துகள்












சரக்கும்.. இருக்கு

நீண்ட நாட்களாக ப்ளாக்கில் எதுவும் போடவில்லையே. ஏன்? நிறைய பேர் கேட்டார்கள்.

சரக்கு இல்லாமல் எதை போடுவது என்று யோசித்திருக்கையில்....

இதோ ஒரு அறிவிப்பு

"டாஸ்மாக்' கடைகளில் இன்று (01.10.09) முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது.

58, 59, 67 ரூபாய் என்று விற்கும்போது, மீதி சில்லரையை விற்பனையாளர்கள் கொடுப்பதில்லை என்ற பிரச்னை சமாளிக்கும் வகையில் "ரவுண்ட்' செய்து விற்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும்.

" பழைய விலையும் (புதிய விலையும்)
குவார்ட்டர் ரேட்
எம்.சி., பிராந்தி ரூ.67 (70)
ஓல்டு மங்க் ரூ.59 (60)
ஹனிடே ரூ.58 (60)
ஓல்டு மாஸ்டர் ரூ.58 (60)
டாப் ஸ்டார் ரூ.58 (60)
எஸ்.என்.ஏ., ரூ.67 (70)
மேன்சன் ஹவுஸ் ரூ. 77 (80)
கார்டினல் ரூ.68 (70)

பீர்:
கல்யாணி ரூ.67 (70)
மார்க்கோ போலா ரூ.58 (60)
கிங் பிஷர் ரூ.62 (65)
பிளாக் நைட் சூப்பர் ஸ்டிராங் ரூ.58 (60)
ஓரியன் சிக்ஸ் தவுசண்ட் ரூ.61 (65)

எப்படி நம்ம சரக்கு...

புதன், ஜூலை 15, 2009

சரிசெய்யப்பட்ட இரும்பு தூண்

1 கருத்துகள்



















நேற்று கேபிள் ஓயரில் தொங்கிக்கொண்டிருந்த இரும்பு தூண் பற்றி புகைப்படம் வெளியிட்டிருந்தேன். இன்று காலை செல்லும்போது பார்த்தேன். தமிழ்நாடு மின்சார வாரியம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டு புதிய இரும்பு தூணை அமைத்ததோடு பள்ளி மாணவர்களையும், பொதுமக்களையும் பெரும் ஆபத்திலிருந்து பாதுகாத்துள்ளது. மிக வேகமாக செயல்பட்டு பழுதை சரிசெய்த மின்சார வாரியத்திற்கு நன்றி. இதுபோல் மின்வெட்டையும் சீர் செய்தால் நன்றாக இருக்கும்.

செவ்வாய், ஜூலை 14, 2009

இரும்புத் தூண்

1 கருத்துகள்
இன்று காலை நான் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மந்தவெளி ஸ்கூல் வியூ ரோட்டிலுள்ள ‘சிகப்பி ராமசாமி தொடக்கப்பள்ளி’யின் அருகில் உள்ள இரும்பு தூண் உடைந்து கேபிள் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை என் செல்போனில் படம் பிடித்தேன். (படம் கீழே) பள்ளிக்கு அருகிலுள்ள இந்த உடைந்த தூணை உடனே அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
















சனி, ஜூலை 11, 2009

என்ன கொடுமை சார்?

4 கருத்துகள்














கோபக்காரன்

ராபர்ட்.

அதிகாலையிலேயே எழுந்துவிடுவான்.

என்றும்போல அன்றும் எழுந்துவிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

உம்மென்று இருந்தான்.

கொஞ்சம் சத்தம்போட்டு பார்த்தான் அப்போதும் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. கோபம் அதிகமானது.

டட்... டட்... டட்...

பக்கத்திலிருந்த கதவைப் பிடித்து தள்ளினான். கதவு சத்தம் கேட்டும் யாரும் அவனைக் கவனிப்பதாக இல்லை. கோபம்
இன்னும் அதிகமானது.

கீழே கிடந்த கால்மிதியடியில் தன் கோபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தான்.

கால்மிதியடி அவனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டது. கடைசியில் அதை துண்டு துண்டாக கிழித்தே விட்டான்.
அப்படியும் யாரும் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா மணியை தற்செயலாகப் பார்த்தார். அவருக்கும் கோபம் வந்தது. ‘டேய்... டேய் என்னடா பண்ணுற ராஸ்கல். ஏய் மங்களம். முதல்ல இங்க வா. இங்க வந்து இவன முதல்ல கவனி அப்பதான் இவன் சும்மா இருப்பான். இல்லன்னா கத்திக்கிட்டேயிருப்பான். சீக்கிரம் வா.’

அப்பாவின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து அம்மா, ‘இதோ வந்துட்டேன். அவனுக்காகத்தான் தயார் பண்ணிட்டிருந்தேன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரம். நான் என்ன பண்ணுறது? டேய்... அம்மா வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்? ஏன் இப்படி ரகளை பண்ணுற? ஒருநாளைக்கு பொறுத்துக்க மாட்டியா என்ன?’

சத்தம் போட்டுக் கொண்டே வந்த அம்மாவைப் பார்த்ததும் செல்லமாய் சிணுங்கிக்கொண்டே படுத்தான் ராபர்ட்.

அம்மா பாலை ஊற்றினாள். ராபர்ட் அதை மடக் மடக்கென்று வாலை ஆட்டிக்கொண்டே நக்கி சாப்பிட ஆரம்பித்தான்.

மங்களம் அந்த வாயில்லா ஜீவனை தடவிக்கொடுத்தாள்.

வெள்ளி, ஜூன் 05, 2009

மலரும் நினைவுகள்

2 கருத்துகள்
தூர்தர்ஷன்

சில விஷயங்களை நாம் எவ்வளவு நினைத்தாலும் மறக்க முடியாது. நம் மனத்தில் ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கவர்ந்த இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

அந்த இசை என் மனத்தை ஏதோ செய்தது. அப்போதும், இப்போதும். அது எந்த இசை என்றால் தூர்தர்ஷன் தொடங்க இசைதான். 

ஆம் நாளுக்கு நாள் ஒரு தொலைக்காட்சி ஒன்று புதிதாக வந்துகொண்டே இருக்கும் இந்த காலத்தில், எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்திருந்தாலும், நான் முதன்முதலில் பார்த்து ரசித்தது சென்னை தொலைக்காட்சியைத்தான். 

அதிலும் தொலைக்காட்சி தொடங்கும்முன் கொய்ங்............ என்று ஒரு சத்தம் வந்துகொண்டிருப்பதில் இருந்து நான் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக தொலைக்காட்சி தொடங்குவதற்காக அந்தக் கால தூர்தர்ஷன் எம்பளம் சுழன்றுகொண்டே தொடங்க இசை வரும். அந்த இசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சிறுவயதி்ல் என் மனதை நெருடி, வருடி ஏதோ செய்தது இன்றைக்கும் என் நினைவில் இருக்கிறது. அந்த இசையை இப்போது கேட்டாலும் ஆனந்தமாகதான் இருக்கும். 

ஆனால் தூர்தர்ஷன் இப்போதெல்லாம் அந்த இசையை காண்பிப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே அந்த இசைக்காட்சியைப் பார்க்காதவர்களுக்காக, கேட்காதவர்களுக்கோ, இதோ...

வியாழன், ஜூன் 04, 2009

‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’

2 கருத்துகள்
















பைத்தியக்கார உலகம்


யாராவது உங்களைப் பார்த்து பைத்தியம் என்றால் உங்களுக்குக் கோபம் வருமா? வராதா?

அப்ப வராதா? என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக வர வேண்டும். அப்படி கோபம் வரும் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

உலகில் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் பைத்தியக்காரத்தனமானச் செயல்களைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்றவர்களும் அடங்குவர்.

உலகின் மகா கிறுக்கன்கள் சிலரைப் பற்றி பார்ப்போமா?

நாம் எதைச் சாப்பிட்டாலும் நான்கைந்து முறை மென்றுவிட்டு உணவை முழுங்கிவிடுவோம். ஆனால், ஒருவர் சாப்பிடும்போது வாய்க்கு உணவு போனவுடன் ஒரு பல்லுக்கு முறையென 32 முறை மென்றபிறகே முழுங்குவாராம். இப்படி ஒரு வாய் உணவிற்கு மட்டும் இந்தச் செயலைச் செய்ய மாட்டாராம். ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவரின் செய்கை இருக்குமாம். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தில் நான்கு முறை பிரதம மந்திரியாக இருந்த வில்லியம் கிளாடுஸ்டோன் என்பவருக்கு தான் இந்த விநோதமாக பழக்கம் இருந்திருக்கிறது.

நியுயார்க்கிலுள்ள ஓர் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஆதர்ஸ்ட் பெல்மார். இவருக்கு சிறுவயதிலிருந்தே குதிரை பைத்தியம். குதிரை என்றால் போதும் உலகையே மறந்துவிடுவாராம். தனது பிள்ளைகளைக் காட்டிலும் குதிரையின் மேல் அன்பை அதிகம் பொழிந்தாராம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்படி? குதிரைகள் தூங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே படுப்பதற்கு மெத்தை, நான்கு கால்களுக்கு தலையணை என சகல வசதிகளையும் குதிரைகளுக்கு செய்து கொடுத்திருக்கின்றார்.

பென்ரோஸ் ஒரு அமெரிக்கப் பெண்மணி. இவர் எப்படியென்றால் நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி போல எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு சமயம் அமெரிக்காவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல் என பயங்கரமான மழையில் இவரது வீடு பலத்த சேதமுற்றது. பென்ரோஸுக்கு பயங்கரமான கோபம் வந்தது. மழை நின்றவுடன் நீதிமன்றத்திற்கு நேராகச் சென்று திட்டமிட்டே தனது வீட்டை சேதப்படுத்தியதாக கடவுள்மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈடாக ஒரு லட்சம் டாலரும் கேட்டிருந்தார். 1969ம் வருடம் போடப்பட்ட இந்த கேஸ் தள்ளுபடியானது.

உலகப் புகழ் பெற்ற ஓவியர் சல்வடார் டாலி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். லண்டனில் ஒரு ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வேண்டுமென்று கண்காட்சியை நடத்துபவர்கள் இவரிடம் கேட்டிருந்தனர். இவரும் வருகிறேன் என்றார். விழா நாளும் வந்தது. கண்காட்சியை நடத்துபவர்கள் இவரை வரவேற்க வாயிலில் காத்திருந்தனர். கார் வந்தவுடன் விழாக் குழுவினர் காரினருகே வந்து வரவேற்க தயாரானார்கள். கார் கதவு திறக்கப்பட்டு, டாலி நீச்சல் உடையில் வந்திறங்கினார். எல்லோருக்கும் அதிர்ச்சியடைந்தார்கள். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத டாலி “இந்த உலகம் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்என்று சொன்னாராம்.

இதுபோல் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும், பல்வேறு விதமான பைத்தியங்கள் இருந்திருக்கிறார்கள். ‘பைத்தியக்கார உலகமடா’ என்பது சரியாகத்தான் இருக்கிறது.

சரி. இனிமேலாவது, ‘போடா லூசு’, ‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’ என்று யாராவது சொன்னால் யோசித்துக் கோபப்படுங்கள்.


செவ்வாய், மே 12, 2009

அன்னையும் அம்மாவும்

0 கருத்துகள்














அதிக பங்கு யாருக்கு?

உலகிலுள்ள சில தமிழ் அமைப்புகளால் இன்று ‘ஈழத்தாய்’ என்றழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா. இதுவரை ஈழத்திற்காகவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காகவும், ஈழத்திற்காக போராடும் புலிகளுக்காகவும் என்ன செய்துள்ளார்? என்பதை முதலில் விளக்க வேண்டும். இல்லை யோசித்து பார்க்க வேண்டும்.

இன்று நான் தனி ஈழம் வாங்கித் தருவேன் என்று முழங்கியதால் மட்டுமே அவர் ஈழத்தாய் என்றழைக்கப்பட்டது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.

ஈழப் பிரச்னையில் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்று முதலில் கூறியதே செல்வி ஜெயலலிதாதான். அதன்பின்தான் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்தது.

விடுதலைப் புலிகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் சுப்பிரமணிய சுவாமி, சோ, ஜெயலலிதா இந்த மூவரும் எப்போதும், எந்நேரமும், அவ்வளவு ஏன் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவர்களை எழுப்பிக் கேட்டாலும் ‘என்னைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருக்கின்றனர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதில் செல்வி மட்டும் தற்போது ஈழத்தை அமைத்தே தீருவேன் என்றும், அதற்காக எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவது வேடிக்கை. ஏமாற்று வேலை. மோசடி வேலை.

அப்படியே அம்மையார் 40 தொகுதியிலும் ஜெயித்தால்கூட எப்படி இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புவார்? ஏதோ பன்னீர்செல்வத்தையும் ஜெயகுமாரையும் அனுப்புவதுபோல சொல்லிக்கொள்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுக கட்சி மந்திரிசபையில் இடம்பிடித்தது. அப்போதும் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சிதான். அதனை கலைக்க வேண்டுமென்று பிரதமர் வாஜ்பாயை மிரட்டினார். ஆனால் வாஜ்பாயை மசியவில்லை. உடனே ஆதரவை வாபஸ் பெற்றார். விளைவு 11 மாதத்திலேயே அடுத்த தேர்தலை சந்தித்தது. இப்போது வெற்றி பெற்றாலும் அதுதான் நடக்கும்?

ஈழப் பிரச்னைக்காக ஒன்றும் செய்துவிட போவதில்லை. ஈழப் பிரச்னையில் இப்போது முக்கியப் பங்கு வகிப்பவராக கூறப்படும் சோனியா காந்தி. சோனியா காந்தியாவது ராஜீவ் காந்தி கொலைக்குப் பழிவாங்குகிறார் என்று அனைவரும் கூறுவதுபோல் வைத்துக்கொண்டாலும்கூட, இத்தனை நாள்கள், இத்தனை ஆண்டுகள் ஜெயலலிதா எதற்காக விடுதலைப் புலிகளையும், ஈழப் பிரச்னையையும் கண்டுகொள்ளாமல் பழிவாங்கினார் என்பதை அனைவரும் உணர தவறிவிட்டனர்.

ஈழப் பிரச்னையில் சோனியா காந்தியின் பங்கு இருக்கிறது என்று நம்பும் மக்களே, சோனியாவின் பங்கைவிட ஜெயலலிதாவின் பங்கு அதைவிட கூடுதலாகவே இருந்திருக்கிறது. இருக்கிறது. இருக்கப்போகிறது என்பதையும் நம்புங்கள்.

இதுவரை ஈழப் பிரச்னையில் துரோகம் இழைத்தவர் என்று பார்க்கும்போது அதிக பங்கு வகித்தவர் என்றால் சோனியாவைவிட ஜெயலலிதாதான் முன்னிலையில் இருப்பார்.

திங்கள், மே 11, 2009

தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

3 கருத்துகள்












புதிய அதிமுக கொ.ப.செ.கள்


சீமான் ராமேஸ்வரத்தில் இலங்கைப் பிரச்னையில் பேசியதிலிருந்து அவருடைய பேச்சை இணைய தளத்தில் தேடிக் கண்டுபிடித்து கேட்பேன். அவர் உணர்வுபூர்வமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசுவதைக் கண்டு என் ரத்தமும் உணர்வும் வெகுண்டெழும்.

பாரதிராஜா தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் தேர்தலில் இந்திரா காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள்.

சீமான் பேச்சை நேற்று நான் ஜெயா டிவியில் கேட்டேன். சீமான் இத்தனை நாள்கள் இலங்கைப் பிரச்னைகளை பேசும்போது உணர்வும் உணர்ச்சியும் இருந்த அவரது பேச்சு. நேற்று அவர் பேச்சைக் கேட்குமபோது எனக்கு ஏற்படவில்லை. காரணம் அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். பேச்சில் வரி வரிக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.

பாரதிராஜா இவர் சமீப ஆண்டுகளாக தமிழ் மேலும், தமிழினத்தின் மேலும் இவருக்கு புதுசா உணர்வு பிறந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று வாய்கிழிய என் தமிழன், என் தமிழினம் என்று பேசும் இவர் 1983 இலங்கைப் பிரச்னை நடைபெற்றபோது வாய் மூடி மவுனியாக இருந்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

இவர்கள் செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் இத்தனை வருடங்களாக விடுதலைப் புலிகளினால் எனக்கு ஆபத்து, பிரபாகரனை இங்கு அழைத்து வந்து தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று பேசியதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை போடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை இவர்களுக்கு தெரியுமா? அல்லது தெரியாதா? சாகப் போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்பதுபோல இத்தனை ஆண்டுகள் எதுவும் பேசாமல் இப்போது தீடீர் ஞானோதயம் வந்ததுபோல் தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்பது ஓட்டுக்காக என்பது பாரதிராஜா, சீமானுக்கு போன்ற சிறந்த இயக்குநர்களுக்கு விளங்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆன கதைதான் ஞாபகம் வருகிறது. இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தமிழர்களே இவர்களை மன்னியுங்கள்!

செவ்வாய், மே 05, 2009

தேர்தல் பச்சோந்திகள்

0 கருத்துகள்











அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

ஜெயலலிதாவை கலைஞர் குறை கூறுவதும், 

கலைஞர் ஜெயலலிதாவை குறை கூறுவதும் 

என்றும் மாறிவிடப் போவதில்லை. தொடர்ந்துகொண்டேதான் இருக்கப் போகிறது? இருக்கும்.

கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது கலைஞருடன் கைகோர்த்து, அதிமுகவையும், ஜெயலலிதாவையும் பாமக ராமதாஸும், இடது கம்யூனிஸ்ட் தா. பாண்டியனும் கடுமையாக விமர்சித்தனர். 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கொண்டு கலைஞரை மானவாரியாக திட்டி தீர்க்கின்றனர். இவர்களை தான் நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, தேர்தல் பச்சோந்திகள். 

தேர்தலுக்கு தேர்தல் தங்களது நிறத்தை, கூட்டணியை மாற்றிக் கொள்(ல்)வார்கள். கேட்டால் எங்களது கொள்கையிலிருந்து நாங்கள் மாறவில்லை என்பார்கள். இவர்களது உண்மையான கொள்கை என்பதே தேர்தலில் வெற்றி பெறும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வதுதான். ஏனென்றால் இவர்களெல்லாம் தனித்து நின்றால் டெபாசிட் இழந்து தோற்றுவிடுவார்கள். அந்த பயம்தான் காரணம். இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டலாம்.

தா. பாண்டியன் திமுகவுடன் சென்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஏன் தெரியுமா? அவர் தனியாகக் கட்சியை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஏற்கெனவே குடை பிடித்தவர்தான். அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்னை பற்றி இவரும் சரி, அம்மையார் ஜெயலலிதாவும் சரி பேசியதே இல்லை. இப்போது இருவருமே வாய்கிழிய பேசுகிறார்கள்.

ராமதாஸ் தமிழக அரசும், மத்திய அரசும் இலங்கைப் பிரச்னையில் ஒன்றும் செய்யவில்லை என்று ஆறு மாதங்களுக்கு மேலாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கேட்டால் திமுகவை குறைகூறுகிறார். இவரும் தானே மத்திய அரசில் பங்கு வகித்தார். ஆனால் இவருடைய கட்சி அமைச்சர்கள் இலங்கைப் பிரச்னையில் எதுவும் செய்ய மாட்டார்களாம். திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம். இது எந்தவிதத்தில் நியாயம்? தனது மகனுக்காக அதிமுகவிடம் புதுவை ராஜ்யசபா பதவி வாங்க நினைத்தார் ராமதாஸ். ஏமாந்தார். அதன்விளைவு திமுக பக்கம் ஓடிவந்தார். கலைஞர் சொன்னதை செய்தார். மகிழ்ந்தார் ராமதாஸ். மகனுக்கு அமைச்சர் பதவியும் வாங்கிக்கொண்டார். இப்போது இவரும் இவரது மகனும் ராஜ்யசபா பதவி திமுக கொடுத்ததல்ல என்று பேசுகிறார்கள். கலைஞரும் ஜெயலலிதாவைபோல் ஏமாற்றியிருக்க வேண்டும். இதுதவிர கம்யூனிஸ்ட் கிடைக்க வேண்டிய பதவியையும் இவர் கேட்டார். யாருக்காக தெரியுமா? தனது உறவினரான காடுவெட்டி குருவுக்கு. காடுவெட்டி குரு இவரெல்லாம் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்? மரம் வெட்டவா போகிறார்? தமிழைப் பற்றி பேசும் இவர், தொடர்ந்து தமிழில் திக்காமல் பேசச் சொல்லுங்கள். இவருடைய மகனையும் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். சரி போகட்டும் விடுங்கள். இவரது கூட்டணித் தலைவியையாவது எழுதி வைக்காமல் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது.

நன்கு பேசத் தெரிந்த ஒரே ஒருவர் வைகோதான். அவரையும் இவர்கள் அசிங்கப்படுத்தி, அவமதித்து அடக்கிவிட்டனர். பாவம் வைகோ. சிங்கம் போல் கர்ஜிப்பவர் இன்று பூனை போல் சத்தமிடுகிறார்.

கலைஞர் ஜெயிக்கட்டும், ஜெயலலிதாவும் ஜெயிக்கட்டும் , ஏன் விஜயகாந்த் கூட ஜெயிக்கட்டும். ஆனால் ராமதாஸ், தா. பாண்டியன் போன்றோர்கள் ஜெயிக்கலாமா? பச்சோந்திகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

திங்கள், மே 04, 2009

பேருந்து கட்டணம் - சரியா? தவறா?

3 கருத்துகள்














மாத்தி யோசியுங்க!

பேருந்து கட்டண விவகாரம் வரலாற்று மோசடி என்று பாமக நிறுவனர் டாக்டரய்யா கூறியிருக்கிறார்.

டாக்டரய்யா அவர்களே!  இது ஏமாற்று வேலை என்று சொல்கிறீர்கள்? 

அதனாலென்ன? 

இருந்துவிட்டு போகட்டும். எத்தனையோ முறை தேர்தலில் வாக்களித்து ஏமாறவில்லையா? அதுபோல் எண்ணிக் கொள்கிறோம்.

ஓட்டுக்காக பேருந்து கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்?

தேர்தல் நேரத்தில் கிடைத்த இந்தச் சலுகை என்றாலும் ஏழை, நடுத்தர  மக்களுக்கு உபயோகமான, பயனுள்ள சலுகையாக இருக்கிறது. இது தங்களைப் போன்று குளுகுளு காரில் செல்லும் தலைவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை?

இப்போது அமைதியாய் இருந்துவிட்டு, தேர்தல் முடிந்தபின்பு மீண்டும் பேருந்து கட்டணத்தை ஏற்றும்போது நீங்களும், உங்கள் கூட்டணித் தலைவர்களும் குரல் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஓட்டுக்காக ஏழை, நடுத்தர மக்களுக்கு வழங்கிய சலுகையினை வெட்டவெளிச்சமாக்கி சலுகை கிடைக்காமல் செய்துவிட்டீர்கள். 

இனியாவது மாத்தி யோசியுங்க!

சனி, மே 02, 2009

பெண்ணே கவனம்

4 கருத்துகள்



















இறைவனே கூறு

புண்ணிய பூமியிது
புனித பூமியிது - இன்று
புண்ணியமும் இல்லை
புனிதமும் இல்லை

பாலில் தண்ணீர்
சர்க்கரையில் ரவை
அரிசியில் கல் - போலிகள்
களைபோல் வளர்ந்து
ஆல்போல் நிற்கிறது

தேன் கூட்டிற்கு நெருப்பாய்
மான் கூட்டத்தில் நரியாய்
சிவபூஜையில் கரடியாய்
இவர்கள் நுழைந்தார்களோ?

வார்த்தை ஜாலங்கள்
வண்ண வண்ண மலர்கள்
வசதியான ஆசனங்கள்
வசீகரமான பார்வைகள்

கடவுளின் சீடரென்றும்
கடவுளே தானென்றும் - இதில்
பொய்யில்லை யென்பார்
புரட்டுமில்லை யென்பார்
பொழுது சாய்கையிலோ
புரட்டி எடுத்திடுவார்
கன்னிப் பெண்களை
கடவுளின் பெயரால்

சிறியப் பெண்ணைப் பார்க்கையில்
சிங்காரமாய் சிரித்திடுவார்
மந்திரம் என்ற 
தந்திரச் சொல்லைக் கூறி
மஞ்சத்தில் கிடத்தி
நெஞ்சத்தில் அணைத்திடுவார்

பெண்களே!
இறைவனின் பெயர் சொல்லி
அழைப்பவர்களிடம்
இதயத்தை பறிகொடுத்து
இரக்கமற்ற பாவிகளிடம்
இழந்துவிடாதீர்கள் கற்பை

இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாறுவீர்கள் பெண்களே
இனியாவது விழித்திடுங்கள்
இறைவன் மனதில் இருக்கிறான்
மனதை ஆழப்படுத்திப் பார்
மகத்தான ஒளியில் தெரிவான்

இறைவனுக் கெதற்கு
ஏஜென்ட்?

இனியாவது
எச்சரிக்கையா யிருங்கள்
சாமியார்களிடம்

இவ்விஷயத்தில் மட்டும்
மதங்களின் ஒற்றுமை
ஏன்?

இறைவனே 
பதில் கூறு

வியாழன், ஏப்ரல் 30, 2009

முதலைகள்

0 கருத்துகள்
நிஜ முதலைகள்

இலங்கைப் பிரச்னை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் செய்திகள், கலைஞரின் உண்ணாவிரதம், ஜெயலலிதாவின் ஈழம் இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி தொலைக்காட்சியில் பார்த்து மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றியது.

இனி தமிழ் சேனல்களைப் பார்க்கக் கூடாது. (தேர்தல் முடியும் வரைதான்) என்று எண்ணி சேனல்களை மாற்றத் தொடங்கினேன். டிஸ்கவரி சேனல் வந்தது. சரி இதையும்தான் பார்க்கலாமே என்று எண்ணி, சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். முதலை எப்படி வாழ்கிறது என்பதைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்கும்போது முதலைகள் தனது உணவிற்காக தண்ணீர் பாய்ந்து ஓடும் நதியில் செல்கின்றன. அங்கே பாறைகளிலிருந்து கொட்டி கொண்டிருக்கும் நீருக்கு அருகில் சென்று காத்துக் கொண்டிருக்கின்றன. வேகமாக வரும் தண்ணீரில் மிதந்து வரும் மீன்கள் துள்ளிக் குதிக்கும்போது அதனை லாகவமாகப் பிடித்து, கடித்து சாப்பிடுகின்றன. மீன்களைப் பிடிக்கும் முதலைகள் மீன்கள் துள்ளி மீண்டும் தண்ணீரில் குதிக்காமல் எப்படி சாப்பிடுகின்ற காட்சி பார்த்து ரசித்தேன்.
தான் இடும் முட்டைகளை மண்ணைத் தோண்டி பள்ளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன முதலைகள். முட்டையை உடைத்துக் கொண்டு வரும் குட்டி முதலைகள் (முட்டையிலிருந்து வந்தால் காக்கா குஞ்சு, கிளிக் குஞ்சு என்கிற முதலைக் குஞ்சு ஏன் சொல்லக்கூடாதா?) வரும் நேரத்தை கணித்து அங்கும் வரும் பெரிய முதலை மண்ணைச் சீரமைக்கின்றது. பின்னர் முதலைக் குட்டி பெரிய முதலையின் வாயருகில் வந்ததும், குட்டி முதலையை தன் வாயில் கவ்வி (பற்கள் படாமல்) தூக்கிச் சென்று தண்ணீரில் விடுகின்றன. இப்படியாக ஒவ்வொரு குட்டிகளாக எடுத்துச் செல்கின்ற முதலை. உடையாத முட்டைகளை ஒவ்வொன்றாக தன் வாயில் கவ்வி தண்ணீருக்கு செல்கின்றது. நீரில் இறங்கிவுடன் முட்டை உடையாமல் முட்டையை சுத்தமாக கழுவுகின்றது. இதற்கு பிறகுதான் நிகழ்வதுதான் ஆச்சர்யமாக இருக்கின்றது. டாக்டர்கள் சிசேரியன் செய்து குழந்தைகளை எடுப்பதுபோல, முதலை வாயில் இருக்கும் முட்டையை உடைக்கின்றது. உள்ளேயிருக்கும் குட்டிக்கு எதுவும் ஆகாமல் உடைக்கின்றது. முட்டை உடைந்ததும் அதனுள்ளே இருக்கும் குட்டியை தண்ணீரில் மிதக்க விடுகின்றது. இதனைப் பார்க்க பார்க்க சிலிர்த்து போனேன்.


அரசியல் முதலைகளை காணும் இந்த நேரத்தில் நிஜ முதலைப் பற்றித் தெரிந்துகொண்டது மனதுக்கு மகிழ்ச்சியளித்தது.

செவ்வாய், ஏப்ரல் 21, 2009

எது இன்பம்?

0 கருத்துகள்













இலக்கிய இன்பம்

இன்பத்துள் இன்ப மெது இன்பம் -இவ்
வையத்து பிறப்ப தென்பது பேரின்பம்
குழந்தை பருவ மதுவே ஆனந்தம்
குமரனா னதும் கன்னியி னின்பம்
கடவுளை காண்ப தென்பது பக்தின்பம்
கண்டதும் கேட்பது வரமென் னுமின்பம்
நித்திரையி லிருப்பதே ஒருவகை இன்பம்
நிலாமுகத் தாளருகினில் சுகம் இன்பம்
பச்சை புற்களில் படுப்பது தனியின்பம்
பருவத்தால் நாணுவது வெட்க மின்பம்
கல்லூரி படிப்பி னிடையில் காதலின்பம்
கற்பனைக் கெட்டிய வரையவளே இன்பம்
முத்தத்தால் பசித்தோம் சுவை யின்பம்
முடிவினிலே கிடைத்த தென்னவோ தனியின்பம்
இங்ஙனம் இன்பத்துள் இன்பம் வந்தாலும்
இலக்கியமே இன்பம்

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

எதிரிகள் ஜாக்கிரதை

4 கருத்துகள்













காலில் விழுந்தது ஏன்?

திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தை கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்.

கூட்டத்தில் பார்வர்டு பிளாக் சந்தானம், திருப்பூர் அல்தாப், பசீர் அகமது, எஸ்ரா சற்குணம், பு.தா. இளங்கோவன்,  பொன். குமார், ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசினார்கள். அனைவரும் அருமையாக பேசினார்கள். பொன். குமாரும், பசீர் அகமதும் இத்தனை ஆண்டுகள் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். நேற்றுதான் திமுகவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொன். குமார் பேசும்போது தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு வந்ததற்கு காரணமே கடந்த முறை ஆண்ட அதிமுகதான். காரணத்தையும் அவரே சொன்னார். ‘அதிமுக ஆட்சியில் மின்சார உற்பத்தி திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வந்ததில்லை என்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் இணைப்புதான் கொடுத்தென்றும், தற்போதைய திமுக ஆட்சி வந்த பிறகு ஒரு ஆண்டு 5 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஆக மூன்றாண்டுகளில் 15 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தபடி நிறைய தொழிற்சாலைகள் உருவாகின. இதனால் தான் மின்சார தட்டுபாடு ஏற்பட்டது. இனி கவலை வேண்டாம் வடசென்னை, உடன்குடி, தூத்துகுடி போன்ற மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன மின்சார தட்டுபாடு வராது. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டு வந்த இந்திய பிரஸ் குழுவின் தலைவர் ரே ‘தமிழ்நாடு போல எல்லா மாநிலங்களும் கருத்துரிமை சுதந்திரம் கொடுத்தால் இந்தியா மேலும் முன்னேறலாம்’ என்று கூறினார் என்று பேசினார்.

சுப. வீரபாண்டியன் பேசும்போது இலங்கைத் தமிழருக்காக உண்மையான உணர்வுடன் இருப்பவர் கலைஞர். அவரால் மட்டும்தான் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் பேசும்போது, அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு அண்ணாவின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

கி. வீரமணி அதிமுகவின் சென்ற முறை தேர்தல் அறிக்கையையும் இந்த தேர்தல் அறிக்கையையும் கையில் வைத்துக்கொண்டு பேசினார். ஜெயலலிதா ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒன்றைச் சொன்னார். இப்போது ஒன்றை சொல்வார். நாளை ஒன்றை கூறுவார். திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தான் இப்போது இந்தியா பின்பற்றுகிறது என்று கூறினார்.

கூட்டத்தில் ‘வெற்றி நமதே’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது. அதிலுள்ள எட்டு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

ஒன்று ‘அழகிய திருமகன்’ படத்தில் வரும் ‘உன்னால் முடியும் உன்னால் முடியும் வாடா’ பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. மற்றொன்று ‘நாக்கு முக்கா’ பாடல் மெட்டில் அமைந்திருந்தது. இரண்டாவது பாடலுக்கு தொண்டர்களிடையே பலத்த வரவேற்பு. நிறைய தொண்டர்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர். வயதான கிழவர் ஒருவரும், பெண்மணியும் கூட எழுந்து ஆட ஆரம்பித்தார்கள். நாக்கு முக்கா மெட்டுப் பாடலைக் கேட்டு மேடையில் மு.க. அழகிரி அருகில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் சிரித்துக்கொண்டே ரசித்தார்.

பின்னர் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் பேசும்போது, இன்றைக்கு தலைவர் கலைஞரின் தேர்தல் அறிக்கையைத்தான் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் காப்பியடிக்கின்றது. ஆந்திராவில் புதிய கட்சித் தொடங்கிய சீரஞ்சிவிகூட தலைவர் கலைஞரின் அறிக்கையைத்தான் பின்பற்றுகிறார். ஒரு ரூபாய் இந்தியா முழுதும் பேசுவதற்கு வழிவகுத்தது மன்மோகன் சிங் அரசு. எல்லோருடைய கையிலும் வாட்ச் இருக்கிறதோ இல்லையோ? கண்டிப்பாக செல் இருக்கும். எனவே உதயசூரியன், கை சின்னத்திற்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் சிதம்பரம்தொகுதியின் வேட்பாளருமான தொல். திருமாவளவன் பேச வந்தார். ‘அதிமுக தலைவர் ஜெயலலிதா கூட்டணி தலைவர்கள் வந்தால் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் கூட மதிப்பதில்லை. திருமாவளவன் தவறான கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்று சொல்லும் பாமக நிறுவனர் அய்யா அவர்கள், செல்வி ஜெயலலிதாவை பார்க்க சென்றார். ஜெயலலிதா வெளியில் நின்று வணக்கம் சொல்வார். இவரும் பதிலுக்கு வணக்கம் சொல்வார். இருவருக்குமிடையே இடைவெளி அதிகம் இருக்கும். பக்கத்தில் நிற்க முடியாது. நின்றால் அவ்வளவுதான். ஆனால் தலைவர் கலைஞர் அப்படியில்லை. எழுந்து வந்து வரவேற்று, நலம் விசாரித்து, தேநீர் கொடுத்து உபசரிப்பார். இதோ கலைஞருக்கு அருகில் எப்போதும் அமர்ந்திருக்கும் அன்பழகனார் போல் கூட்டணித் தலைவர்கள் அமரலாம். ஆனால் அங்கு? தொகுதியில் பங்கீட்டில் 21 வயதான இளைஞன் 2 குழந்தைகள் பெற்று 16 செல்வங்களோடு சிறப்பாக வாழ்வதுபோல தொகுதியைப் பங்கீட்டுள்ளார். 21 வயது இளைஞன் திமுக, 2 குழந்தைகள் விடுதலை சிறுத்தைகள், 16 செல்வங்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள், முஸ்லிம் லீக் 1 ஒரு தொகுதி கொடுத்ததற்கு விளக்கம் தந்தார். ஈழத் தமிழரின் பிரச்னைகள் இந்தக் கூட்டணியில் தான் ஒருமித்த கருத்து இருக்கிறது. திமுகவும் சரி, விடுதலை சிறுத்தைகளும் சரி, காங்கிரஸும் சரி ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும் என விரும்புகின்றனர். அந்தக் கூட்டணியில் ஆளுக்கொரு கருத்தைக் கொண்டுள்ளனர். நாங்கள் ஒன்றும் புதிதாக ஈழத்தைப் பற்றி பேசவில்லை. என்று பேசினார்.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுபேசியபோது, கலைஞரை நம்பியவர்களை கைவிட மாட்டார். அதுபோலத்தான் அன்னை சோனியாவும் நம்பியவர்களை கைவிட மாட்டார். பாமக தலைவர் ராமதாஸ் காங்கிரஸும் அவரோடு வந்துவிடும் என எண்ணினார். ஆனால் கலைஞர் அவர்களே நாங்கள் 35 பேரும் உங்களை கைவிட மாட்டாம். அன்னை சோனியா கைவிடமாட்டார். அதனால்தான் எங்கள் சின்னம் ‘கை‘யாக உள்ளது என்று பேசினார்.

மதசார்பற்ற ஆட்சி, தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கும் ஆட்சி, ஏழைகளுக்கு உதவும் ஆட்சி எது என்று யோசித்துப்பாருங்கள். குறிப்பாக மசூதியை இடிக்க நினைப்பவர்களுக்கு, இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட நினைப்பவர்களுக்கு உங்கள் ஒட்டு போக வேண்டுமா? நல்லாட்சி தொடர்ந்திட உதயசூரியன், கை சின்னத்தில் ஒட்டளியுங்கள் என்று திமுக பொதுச் செயலாளரும் தமிழக நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் பேசினார்.

இறுதியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் பேசினார். கூட்டணி கட்சிகளை மதிக்க வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தினார். அது பெரியக் கட்சியாக இருந்தாலும், சரி சிறிய கட்சியாக இருந்தாலும் சரி அவர்களை நாம் மதிக்கவேண்டும் என்றவர் 2006ம் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தினால் தமிழ்நாட்டு நன்மை என்று சொன்ன அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்கள் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். பெரியார் கண்ட கனவை, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை, பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவை முடக்கி போட வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? எந்த தைரியத்தில் வந்தது. இலக்கியத்தில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது இருக்கிறது. நமக்கு இனியவை நாற்பதுதான் என்று பேசினார்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியபோது முதன்முதலில் திருவள்ளுர் பெண் வேட்பாளரை மு.க. ஸ்டாலின் அழைக்க அதன்பின் ஒவ்வொருவராக அழைத்தவர். வேட்பாளர்களில் கூட்டத்தினரை அதிகம் கவர்ந்தவர்கள் என்று பார்த்தால் தயாநிதி மாறன், மு.க. அழகிரி, நெப்போலியன், ரித்தீஷ் ஆகியோருக்கு கைதட்டல், விசில்கள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர்களில் ப. சிதம்பரத்தை தவிர அனைவரும் வந்திருந்தார்கள்.

ஆனால் திமுக கூட்டத்தில் இதுவரை நடைபெறாத ஒன்று மேடையில் நடைபெற்றது. வேட்பாளர்கள் அனைவரும் கலைஞரின் காலைத் தொட்டு வணங்கினார்கள். இது மனதுக்கு வேதனையளிக்கக் கூடிய செயலாக எனக்கு பட்டது.

சனி, ஏப்ரல் 18, 2009

மௌன சாமியார் வைகோ?

3 கருத்துகள்
மௌனம் ஏன்?

‘தமிழர்களின் 150 வருட கனவான சேதுசமுத்திர திட்டத்திற்காக நான் பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசியிருக்கிறேன். சேதுசமுத்திரத் திட்டம் குறித்து அதிகம் பேசியவன் நான்தான்.’ 

இப்படி சேதுசமுத்திரத் திட்ட தொடக்க விழாவில் பேசியவர் வேறுயாருமல்ல நம்ம தன்மான சிங்கம் வைகோதான்.

அவர் மட்டுமல்ல இந்திய கம்யூனிஸ்ட் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் வரதராஜன், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வரவேற்று, நிறைவேற போகும் சந்தோசத்தில் பேசியதை நாம் மறந்திருக்க மாட்டோம்.

ஆனால் 2 நாள்களுக்கு முன்பு அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடபட்டது. வெளியிட்டவர் ஜெயலலிதா. பெற்றுக்கொண்டவர் பிரகாஷ் காரத். அறிக்கையில் நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களுக்கு சேதுசமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பாமக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காதது. மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

நான்தான் இந்தத்திட்டம் நிறைவேற காரணமானவன் என்று தொடக்கவிழாவில் சேதுசமுத்திரத் திட்டம் தோன்றியதிலிருந்து தொடக்க விழா வரை பேசிய வைகோ. இப்போது மௌனம் காப்பது ஏன்? 
கூட்டணியில் இருக்கும் மற்றக் கட்சிகளை விடுங்கள். வைகோ இதையறிந்த பின்னும் சும்மா இருக்கலாமா? சிங்கம் போல சீறியெழும் வைகோ இதுபற்றி வாய்திறக்காது ஏன்? தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ததிலிருந்து வைகோவின் மௌனம். அவரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களை மட்டுமல்ல. நம்மையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏன் இந்த மௌனம்?

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

என்ன கொடுமை வைகோ?

8 கருத்துகள்
அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்








அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றதை ஜெயா டிவியில் கண்டுகளிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

நான் பார்க்கும்போது சிம்மகுரலோன் வைகோ பேசிக் கொண்டிருந்தார். எப்போதும் போல உணர்ச்சிகரமாக, வீராவேசமாக அனல் பறக்கின்ற வார்த்தைகளைக் கொட்டி பேசினார். ஆனால் கூட்டத்தினரிடம் இருந்து எவ்வித பிரதிபலிப்பும் தென்படவில்லை.

அடுத்ததாக வந்தது புரட்சித் தலைவியின் அண்ணன் ராமதாசு பேச வந்தார். தவளைப் போல ஙொய் ஙொய் என்று ஏதோ ஏதேதோ பேசினார். நாற்பதும் நமதே என்றார் இறுதியில். கூட்டத்தினர் இப்போது அமைதி காத்தனர்.

அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் ராஜா பேசினார். தமிழை தட்டுதடுமாறி பேசினார் என்றே சொல்லலாம். அவருக்குப்பின் ஏ.பி. பரதன் பேசினார். கூட்டம் அமைதி காத்தது-

பிரகாஷ் காரத் பேசும்போது அருமையாக பேசினார். ஆனால் கூட்டத்தினர் அமைதி காத்தனர்.

இவர்களெல்லாம் பேசி முடித்தபோது ஒருவருக்கும் கைதட்டலே கிடைக்கவில்லை. 

இறுதியாக புரட்சித் தலைவி பேச வந்தார். என்றும்போல எழுதி வைத்தே பேசினார், பேசினார், பேசிக்கொண்டேயிருந்தார். உணர்ச்சி வேகத்திலும், குரலை உயர்த்தியும் பேசினார். என்ன அதிசயம் . புரட்சித் தலைவி பேசியும் கூட கூட்டம் கைதட்டவில்லை. ஆரவாரம் செய்யவில்லை. அது ஒரு கூட்டமாகவே தெரியவில்லை. 

கூட்டத்தில் அதிமுகவினரை தவிர மற்றக்கட்சிகளின் தொண்டர் ஒருவரையும், கொடியையும் நான் பார்க்கவில்லை ஜெயா தொலைக்காட்சியில்.
இதைவிட மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் முகத்தில் ஏதோ கவலையில் இருப்பதுபோல தோன்றினார்கள்.

வேட்பாளர்களை ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைத்தார். பாவம் வைகோ. ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். 

என்ன கொடுமை சார்?




வியாழன், ஏப்ரல் 16, 2009

தேர்தல் தலைவர்கள்

3 கருத்துகள்
















நம் நாட்டு ராஜாக்கள்

பாலென்பார் தேனென்பார்
பாசமே இது தானென்பார்
நானென்பார் நீயென்பார்
அண்ணன் தம்பி நாமென்பார்
பாரென்பார் படியென்பார்
பக்க பலம் நானென்பார்
காயென்பார் கனியென்பார்
காவல்காரன் நானேதானென்பார்
வாயென்பார் தாயென்பார்
உரிமையுடனே அழைத்திடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே ஒடி வந்திடுவார்
தேர்தல் முடியும் வரை
முடிந்த பின்போ
பதவி கிடைத்து விட்டால்
பாராமல் சென்றிடுவார்
மந்திரி பதவி கிடைத்தாலோ
மறுதேர்தல் வரை வரமாட்டார்
அண்ணன் என்றே சென்றால்
அனுமதியில்லை என்பார்
தம்பி என்று  சென்றோ
தடியன்கள் தடுத்திடுவார்
உரிமையுடன் போனாலோ
உதறி தள்ளிவிடுவார்
உங்கள் தொகுதி என்றாலோ
உடனே தப்பியோடிடுவார்
இவர்களே நம் நாட்டு ராஜாக்கள்

திங்கள், ஏப்ரல் 13, 2009

நாமம் போடும் ராமதாஸ்

8 கருத்துகள்
வைகோ - 3

இந்தத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே இருதலைக் கொள்ளியாக தவித்தவர் யார் தெரியுமா?

வைகோ.

ஒவ்வொரு முறையும் வைகோவை பின்னுக்குத் தள்ளுபவர் யார் தெரியுமா?

நன்றாக யோசித்துப் பார்த்தால் டாக்டரண்ணன்தான் முதலில் நிற்பார்.

கூட்டணியில் முதலில் போய் சேருபவராக வேண்டுமானால் வைகோவாக இருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் கடைசியாக தான் இருப்பார்.

அன்பு சகோதரியால் பொடா சட்டத்தில் உள்ளே சென்றவர். அனைவரது முயற்சியாலும் வெளியில் வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் தான் நிற்காமல் அரசியல் துறவியாக மாறி, சிப்பிபாறை ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கினார். ஆனால் இந்த முறை விருதுநகரில் போட்டியிடுகிறாராம். மானத்தின் சின்னம், தன்மான சிங்கம் என்றெல்லாம் போற்றபட்ட வைகோ. தன்னை பொடா சட்டத்தில் சிறைக்குள் தள்ளியவரின் தயவில் விருதுநகரில் போட்டியிடுகிறார். வேடிக்கையாக இருக்கிறது வைகோ செயல்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ திமுகவிடம் கேட்டதோ 25 இடம். கலைஞர் தருவதாக சொன்னதோ 22 இடம். 3 இடங்களுக்காக வைகோ சிறையிலிருக்கும்போது ஜெயலலிதாவை சகட்டுமேனிக்குத் திட்டி தீர்த்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் திமுகவை விட்டு அதிமுகவுக்கு செல்லலாம் என சொன்னதைக் கேட்டு அதிமுக சென்று, 35 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை ஜெயலலிதா நம்பிக்கைக்குரிய ஆளானார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வைகோ அதிமுகவிடம் 7 இடங்களைதான் கேட்டது. ஆனால் 3 இடங்கள்தான் தருவோம் என கூறி, இறுதியில் 4 இடங்களைத் தந்திருக்கிறார்கள். 

அப்போதும், இப்போதும் வைகோவுக்கு கிடைக்கவேண்டியதை கிடைக்கவிடாமல் செய்தவர் யார்? அன்பு சகோதரியின் டாக்டரண்ணன்தான்.

பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்ற பழமொழி வைகோ, ராமதாஸ் இருவருக்குமே பொருத்தமாக இருக்கிறது.

இப்போது வைகோ இழந்ததும் 3 இடங்கள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் வைகோவுக்கு ராமதாஸ் நாமம் போட்டுவிடுகிறார். இதெல்லாம் எப்போதுதான் 
வைகோவுக்கும் மதிமுக சகோதரர்களுக்கும் புரியப் போகிறதோ? 

திங்கள், ஏப்ரல் 06, 2009

திருடர்கள் ஜாக்கிரதை

0 கருத்துகள்
எச்சரிக்கையாக இருப்போம்

‘தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் துணிகர கொள்ளை’ 

அடிக்கடி நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நாமும் அதை ஒற்றைவரிச் செய்தியாக மேம்போக்காகப் படித்துவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். உண்மையில் இந்தக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். 

சரி. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களைப் பாது காத்துக் கொள்வது எப்படி?  கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

வீட்டில் இருக்கும் பெண்கள் தனியாக இருக்கும்போது வீட்டின் கதவைகளை நன்றாக பூட்டிவிட்டு  பின்னர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு வீட்டின் இரண்டு கதவுகளையும் விரிய திறந்து வைத்துக்கொண்டு, டிவியின் சத்தத்தையும் அதிகமாக வைத்துக்கொண்டு, சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். அப்படியிருந்தால் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று எப்படித் தெரியும்?

சில வருடங்களுக்கு முன்புகூட, ஒரு தெருவில் இருப்பவர்களில் இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசி வரை இருக்கும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகுவார்கள். ஒன்றுக்குள் ஒன்றாக சொந்தங்கள் போல் உறவாடுவார்கள். நல்லது, கெட்டது அனைத்திலும் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. நம்மை விழுங்கும் நகர வாழ்வின் இயந்திரத்தனம் இந்த உறவுகளை எல்லாம் ஒரு அடி தள்ளியே வைக்க நம்மை நிர்பந்திக்கிறது. குறிப்பாக ப்ளாட்டுகளில் வசிப்பவர்கள் இப்போதெல்லாம் தனித் தீவாக ஆகிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

சென்னை நகரில் ப்ளாட்டுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ப்ளாட்டுக்குள் நுழைந்ததும் இறுக்கிச் சாத்தியக் கதவோடு அவர்கள் உலகம் சுருங்கிப் போய்விடுகிறது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. இது தவறுதானே? அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுங்கள். நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் உடனே அவர்கள் ஓடி  வருவார்கள். நாம் வெளியூர் செல்லும்போது அவர்கள் நம் வீட்டைப் பார்த்துக் கொள்வார்கள். 

பெரும்பாலான ப்ளாட்டுகளில் காவலில் இருக்கும் காவலாளியை பால் கார்டு, டெலிபோன் பில், எலெக்ட்ரிக் பில் கட்ட அனுப்புவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. காவலாளியை வெளியில் அனுப்புவது என்பது தவறான செயலாகும். இதனால் காவலாளி ஒழுங்காக வேலைக்கு செய்யாமல் இருக்க நாமே வாய்ப்பை தருகிறோம். அதுமட்டுமல்லமல் காவலாளி இல்லாத சமயம், சமூக விரோதிகள் ப்ளாட்டுக்குள் நுழையவும் கூடும். 

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடமும், முதியோர்களிடமும் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், தற்காப்பு நடிவடிக்கைகளில் ஈடுபடவும், பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டுமென்பதற்காகவும் சென்னை மாநகரக் காவல் துறையும் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த பிரசுரங்கள் போலீஸ் நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

· வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டின் முன்புற கதவில் கண்டிப்பாக ‘லென்ஸ்’ பொருத்த வேண்டும். மரகதவுகளுக்கு முன்பு கிரில் கதவுகளை பொருத்தியிருந்தால் நல்லது.

· தனியாக இருக்கும் பெண்கள் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு வீட்டு வேலைகளை செய்வது நல்லது.

· பெண்கள் ஷாப்பிங் மற்றும் மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்களுடன் பழகினால் அவர்களை உடனே வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். அதே நேரத்தில் புதிய நண்பர்களிடம் தாங்கள் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும், தங்கள் வீட்டு ஆண்கள் வெளியூர் சென்றிருக்கும் விஷயத்தையும் கண்டிப்பாக கூறக்கூடாது.

· வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை அவசியம் கற்று வைத்திருக்க வேண்டும்.

· வீடுகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்தால் அவர்களின் முகத்தில் மிளகாய் பொடி போன்றவற்றை தூவியும் தப்பிக்கலாம்.

· முதியவர்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை வைப்பதை தவிர்த்து, வங்கி லாக்கரில் வைக்க வேண்டும்.

· அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்புடன் பழக்கம் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்து நேரங்களில் அவர்கள் உதவியாக இருப்பார்கள்.

· ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்களை வாங்குபவர்கள் போன்ற நபர்கள் வந்தால் அவர்களை எக்காரணத்தை கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

· இதேபோல வீட்டிற்கு வழக்கமாக வரும் பால்காரர், பேப்பர் போடுபவர்கள், காய்கறி விற்பவர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சமையல் கியாஸ் சப்ளை செய்பவர்கள், சலவை செய்பவர்கள் போன்றவர்களின் பெயர் விலாசத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவர்களையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

· அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக காவலாளிகளை நியமிக்க வேண்டும். காவலாளிகள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை பார்க்க வருபவர்களின் பெயரையும் மற்றும் முகவரியையும் எழுத வேண்டும். இதற்காக பார்வையாளர் குறிப்பேடு ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

· வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களும், முதியோர்களும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண், தீயணைப்புத்துறை தொலைபேசி எண், அவசர போலீஸ் தொலைபேசி எண் ஆகியவற்றை எளிதில் பார்ப்பதற்கு வசதியாக குறித்து வைத்திருக்க வேண்டும்.

இவையனைத்தையும் நாம் நம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

(27.03.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

வெள்ளி, ஏப்ரல் 03, 2009

யானை, பூனை வளர்க்கலாம் வாங்க

1 கருத்துகள்
பிராணிகளைத் தத்தெடுக்கலாம் வாங்க

எனது அலுவலகத்தின் மேலதிகாரியின் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அப்போது அவர் தான் வளர்க்கும் நாயுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார். என் மனதில் ‘என்னடா இவரு நாய்கூடவெல்லாம் பேசுறாருன்னு’ கேள்வி எழுந்தது. அதை அவரிடமே கேட்டும் விட்டேன்.

‘என்ன சார் நாயோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?’ 

‘சார், பப்பின்னு சொல்லுங்க. நாய்ன்னு சொல்லாதீங்க.  ப்ளீஸ். இந்த பப்பியும் எங்க வீட்டுல ஒரு மெம்பர்தான்’ என்றார்.

இப்படி நம்மில் சிலர் வீட்டு விலங்குகளிடம் மிகவும் அன்பாக பழகிக்கொண்டு தானிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நாய் பிடிக்கும். ஒரு சிலருக்கு பூனை பிடிக்கும். வேறு சிலருக்கு இவைகளை விட்டு கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

நாய், பூனை வளர்ப்பவர்கள் அதனை விலங்குகளாக பார்ப்பதில்லை. தன் வீட்டுப் பிள்ளையாகத்தான் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரே பூனைக் கூட்டமாகதான் இருக்கும். எந்நேரமும் அந்த வீட்டிலிருந்து ‘மியாவ்’ சத்தம்தான் அதிகம் வரும். அந்த வீட்டுப் பெண்மணிக்கு பூனையென்றால் அவ்வளவு ஆசையாம்.

ஒரு சிலர் இதற்கும் மேலே போய்விடுவதும் உண்டு.  போட்டோ ஸ்டூடியோவில் ஒருவர் நாயின் சின்னப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ‘சார், இத தயவு செய்து பெரிசு பண்ணி தாங்க. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. போட்டோவ பெரிசாக்கித்தாங்க. இத நாய்ன்னு நெனைக்காதீங்க. எம்புள்ள சார்.’ என்றபடி அழுதுவிட்டார்.

நம் நாட்டில் செல்லப் பிராணிகளாக கருதப்படுபவை நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்றவை. குதிரையை வியாபாரத்திற்காக  சிலர் வளர்த்து வருகிறார்கள். பசுவை நாம் தெய்வமாக எண்ணி சில வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். கோயில்களில் பசுக்களையும், வளர்க்கிறார்கள். சில கோயில்களில் யானைகளும் சேர்த்து வளர்ப்பார்கள்.

வெளிநாடுகளில் சிலர் காட்டு வாழும் விலங்குகளை தன் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதையும், அவைகளுக்கு வீட்டிலேயே தனி அறையை ஒதுக்கி, சகலவசதியும் கொடுத்திருப்பதையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். இதனைப் பார்க்கும்போது நாமும் இதுபோல் காட்டு மிருகங்களை வளர்க்க முடியாதா? என்ற ஏக்கம் நமக்கு தோன்றும். 

கடவுளாக விலங்குகளை நாம் வழிபட்டாலும், நம்மால் வீட்டில் வனவிலங்குகளை வளர்க்க முடியாது. ஏனென்றால் நம் நாட்டு (இந்தியா) சட்டம் அதற்கு இடம் தராது. 

ஆனால் நம்முடைய ஏக்கம் நீண்ட நாள் நீடிக்காமல், நமது ஆசையை நிறைவேற்ற போகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா. எப்படி? இந்தப் பூங்காவில் இருந்துதான் நாம் மிருகங்களை தத்து எடுத்து வளர்க்கப் போகிறோம். 

ஏற்கெனவே மைசூர் உள்ளிட்ட சில உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை பொதுமக்கள் தத்து வளர்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் மிருகங்களைத் தத்து எடுப்பதற்கு அனுமதியளிக்க இப்பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

1855ல் தேற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். சென்னையிலிருந்து 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்காவில் 170க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது. இந்தத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என நிர்வாகம் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது இத்திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தனிப்பட்ட ஒருவருக்கு எத்தனை நாள்களுக்கு தத்து கொடுப்பது என்பது பற்றி ஓர் முடிவுக்கு வந்துள்ளது பூங்கா நிர்வாகம்.

இந்த புதிய திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை ஒருவர் ஓராண்டு வரை தத்து எடுத்துக்கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் விலங்குக்கு ஆகும் செலவுக்கு அவர் பொறுப்பு ஏற்கலாம். அதிகபட்சமாக ஓராண்டும், குறைவாகக் கூட மாதக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ கூட தத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான கட்டணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. 

இதுபோன்ற திட்டம் ஒன்று புளூகிராஸ் நிறுவனத்தில் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. நம் வீட்டில் நாய், பூனை, கிளி போன்றவை வளர்க்க ஆசைப்பட்டு, அது வளர்ந்த பின்னர் ஏதோ ஒரு சூழ்நிலையில் வளர்க்க முடியாமல் போனால், புளூகிராஸ் நிறுவனத்தில் நாம்வளர்த்த பிராணியை வளர்ப்பதற்கு, பராமரிப்பதற்கு வசதிகள் இருக்கின்றது. அவர்கள் அந்தப் பிராணியை பராமரிப்பதோடு, அது எப்படி இருக்கிறது என்பதையும் நமக்குத் தெரிவிப்பார்கள்.

ஆனால் இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நாம் நம்பலாம்.

மிருகங்களைத் தத்து எடுக்கும் அமுலுக்கு வந்தவுடனே நாம் ஆளுக்கொரு மிருகத்தைத் தத்து எடுக்கலாம். அதனைப் பெருமையாகவும் சொல்லிக் கொள்ளலாம். நான் நாய் வளர்க்கிறேன். பூனை வளர்க்கிறேன். கிளி வளர்க்கிறேன் என்பதுபோல நான் சிங்கம் வளர்க்கிறேன், புலி வளர்க்கிறேன் என்றும் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

யானைக் கட்டிப் போரடிக்க முடியுமா? என்று எண்ணியிருந்த காலம் போய் இந்தத் திட்டத்தால் நாம் பூனையும் வளர்க்கலாம், யானையும் வளர்க்கலாம்.

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க? வண்டலூருக்கா?


(30.03.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

புதன், ஏப்ரல் 01, 2009

பொங்கியெழு வைகோ!

3 கருத்துகள்



இன்னுமா யோசனை?

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன். அதன்பின் எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற அமர்க்களம் முடிந்தது. தமிழ்நாட்டில் கூட்டணி காட்சியில் மிக சிறப்பாக பங்காற்றியவர்கள் விஜயகாந்தும், ராமதாஸும்தான். இவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை இதோ, அதோ என்று போக்குக் காட்டியது திரைப்படத்தில் வரும் சேஸிங் சீனை விட விறுவிறுப்பாக இருந்தது என்றே சொல்லலாம்.

அடுத்து தொகுதி பங்கீடு.

விஜயகாந்த் தனித்துப் போட்டி என்பதால் பிரச்னையே இல்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் மிகச் சுலபமாக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.

பாஜக கூட்டணி என்று ஒன்று உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் டாக்டரண்ணனுக்கு லம்ப்பா 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதிமுகவே கதி என்றிருந்த மதிமுக எத்தனை தொகுதி? என இதுவரை இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக கூறவில்லை. ஜெயலலிதா மதிமுகவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்? ஏழா? ஐந்தா? நான்கா? மூன்றா? இரண்டா? போதும் போதும் இதற்குமேல் என்ன சொல்ல.

‘பொறுத்தது போதும் பொங்கியெழு!’

கலைஞர் வசனம்தான் என்றாலும் தற்போது ‘வைகோ’வுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.

வைகோ சிறந்த பேச்சாளர், சிறந்த தொண்டன். ஆனால் சிறந்த தலைவரா என்றால் மறுப்பவர்கள் அதிகம்.

கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்லும் திறமை வைகோவிடம் இல்லை. வைகோ பின்னால் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வந்துவிட்டார்கள். ஒருத்தர் பின் ஒருத்தராக சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். கேட்டால் மதிமுக உடைக்க கலைஞர் சதி செய்கிறார் என்பார்?

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதில் எவ்வித உபயோகமும் இல்லை. ஆனால் வைகோ திரும்ப திரும்ப அரைத்துக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவருக்கு அரசியல் தெரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். வைகோ வாய் சொல்லில் வீரனாக மட்டுமே இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

நேற்று முளைத்த தேமுதிக தனித்து நிற்கிறது. சமக (சரத்குமார் கட்சி) புத்திசாலித்தனமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. எப்படியும் 15 தொகுதிகளில் நிற்கலாம் என தெரிகிறது. பிறந்து 15 மாதங்கள் ஆகாத கட்சிகள்கூட புத்திசாலித்தனமாக இருக்கிறது.

மதிமுக பிறந்து இந்த மே மாதம் வந்தால் 15 வயது பூர்த்தியாகப் போகிறது. ஆனால் ஆரம்பித்தபோது இருந்த நிலையைவிட தற்போது அதிக அளவு தேய்ந்து, தளர்ந்து காணப்படுகிறது.

மதிமுகவை காப்பாற்றுவாரா வைகோ?

செவ்வாய், மார்ச் 31, 2009

மரமண்டைகள்

0 கருத்துகள்
சாலையோர மரங்களைச் சீர் செய்வோம்!

சென்னையில் சில சாலைகளில் திரும்ப திரும்ப போக தூண்டும். நம்மில் சிலர் அந்தச் சாலைகளில் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்வதற்கும் ஏதுவாக இருக்கும். அமைதியாகவும், காற்றோட்டமாகவும், நல்ல மன ஒட்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அந்த சாலைகள் இருக்கும். அது எந்த மாதிரியான சாலை தெரியுமா? அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள்தான் அவை.

சென்னையில் மயிலாப்பூர், போர்ட் கிளப் சாலை, போயஸ் கார்டன், மந்தவெளி, அடையாறு, பெசண்ட் நகர், கே.கே. நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இப்படி அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படுகிறது. அமைதியான சாலையாகவும், காற்றோட்டமான சாலையாகவும், அடிக்கடி பறவைகள் கூவுகின்ற ஒலிகளும் இங்கு கேட்பதால் இந்த ரம்மியமான சாலையில் செல்ல அனைவரும் விருப்பப்படுவார்கள்.

இந்தப் பகுதிகளிலெல்லாம் எப்பொழுது இந்த மரங்கள் நடப்பட்டன என்றால் அந்தப் பகுதி மக்களுக்குக் கூட தெரியாது என்று சொல்லலாம். அத்தனை வருடங்கள் இந்த மரங்கள் அந்தப் பகுதி மக்கள் வெயிலில் வாடாமல் காத்து வருகிறது. சொல்லப்போனால் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகிறது என்று கூறலாம்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் மரத்தை நட்டார் என்று படித்திருக்கிறோமே தவிர அந்தப் பருவத்தில் மரத்தின் பயன்கள் பற்றி அறிய வாய்ப்பு குறைவு. அதன் பயன் இப்போது புரிகிறது. மரங்கள் வெயில் காலங்களில் நல்ல நிழல், குளிர்ந்த காற்று கிடைக்கிறது என்றாலும் சில இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒருநாள் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று என் தலையில் ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்தேன். காய்ந்த சிறிய மரக்கிளை. நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருந்தேன். தலைக்கு வந்தது ஹெல்மேட்டோடு போச்சு. எதனால் இப்படி?

சமீப காலத்தில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மிகவும் குறைவுதான். மரங்களெல்லாம் நடப்பட்டு, வளர்ந்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால், மரங்களுக்கும் வயதாகி விட்டது.

நீண்டு, நெடிய மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சாலையிருக்கும் விளக்குகளின் வெளிச்சம் சாலையில் சரிவர தெரிய மறுக்கின்றது. அதேசமயம் மரங்களின் மேல்தான் கேபிள் ஓயர்கள் அதிகம் செல்கின்றன.

மழைக் காலங்களில் சில மரங்கள் வேரோடும் சாய்ந்து விடுகின்றன. சில இடங்களில் மரங்களின் கிளைகளும் ஓடிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, ஆமை வேகத்தில் வாகனங்கள் செல்வது வாடிக்கை. அன்றைய தினம் அந்த வழியாகச் செல்லும் அத்தனை பேரும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

இலையுதிர் காலத்தில் மரங்களிலுள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து, சருகாகி சாலையில் விழுந்து குப்பையாகி, வீதிகளைக் குப்பையாக்குவதோடு நில்லாமல் காற்றில் பறந்து அந்தப் பகுதியையும் அந்த பகுதியிலுள்ள வீடுகளும் குப்பையாகின்றன. உதிர்ந்த சருகுகளால் கால்வாய்களும் அடைத்துக் கொள்கின்றன. இதனால் சாக்கடையில் நீர் போக வழியில்லாமல் நிரம்பி வழிவதோடு, கொசுக்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மழைக் காலங்களில் வேகமாக அடிக்கின்ற காற்றில் முதிர்ந்த மரங்கள் வேரோடு கீழே சாய்கின்றன. அப்படி சாயும்போது மரத்திற்கு அருகிலிருக்கும் வீடுகள், கடைகள், வாகனங்கள் போன்றவை சேதமுறுகின்றன. மரங்கள் சாய்ந்து விழும்போது, கேபிள் ஓயர்களும், டெலிபோன் ஓயர்களும், சில சமயம் மின்சார கம்பியும் அறுந்து கீழே விழுகின்றன. ஓயர்கள் அறுந்துகிடப்பதை அறியாத ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் மின்õசரத்துக்கு பழியாக நேரிடுகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

என் நண்பர் ஒருவர் வீட்டுக் காம்பவுண்ட் சுவருக்கு அருகில் இரண்டு மரங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தின் கிளை அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் செல்கிறது. இதனால் சமூக விரோதிகள் மரத்தின் வழியாக நுழைந்து விடுவார்களோ? என்று பயப்படுகிறார். அவர் பயப்படுவதும் நியாயம் தானே?

இன்னொரு நண்பரின் புலம்பல் வேறுவிதமாக உள்ளது. ‘தண்ணி வரலேன்னு கொஞ்சம் கொஞ்சம் அதிக ஆழத்தில் ஃபோர் போட்டிருக்கேன். இப்பப் பாத்தா வெளியில இருக்கிற மரத்தோட வேர் குறுக்கே போகுது. என்ன பண்ணுறது?’ என்கிறார்.

சில சாலைகளில் மரங்கள் வளைந்தும் நெளிந்தும் வளர்ந்திருக்கின்றனர். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் தலை மரத்தில் மோதுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வளைந்து நெளிந்து செல்லும் மரங்களை சீர்படுத்தினால் நன்றாக இருக்கும். சில சாலைகளில் மாநகர் பேருந்துகளே செல்வதற்குத் தடையாக இருக்கிறது மரங்கள்.

இவற்றையெல்லாம் சென்னை மாநகராட்சி கண்டறிந்து சீரமைப்பது அவசியமாகிறது. அதுபோல சில மரங்கள் இலைகளே இல்லாமல் பிரம்மாண்டமாக நிற்கின்றன. சில மரங்களில் இலைகள் இல்லாத கிளைகள் இருக்கின்றன. இவ்விரண்டையும் சரி செய்தால் ஓரளவு தீர்வு காணமுடியும்.

சில மாதங்களுக்கு முன் பாண்டி பஜார், பனகல் பார்க் போன்ற சில இடங்களில் சென்னை மாநராட்சி தேவையற்ற மரங்களை வெட்டி இருக்கிறார்கள். மரம் வெட்டுவதைக் கண்டவர்கள் ‘ஐயோ இப்படி மரங்கள வெட்டுகிறார்களே’ என்று கூறியவர்கள் அதிகம்தான்.

நாம் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன், ஒரு மரத்தை நடவேண்டும் என்று அரசு கூறுகிறது. அதே சமயத்தில் தேவையற்ற மரங்களை அகற்றுவதை தவறு என்று சொல்ல முடியாது. சரி தேவையற்ற மரங்கள் என்றால் எவை? முதிர்ந்த மரங்கள், இலைகளே இல்லா மரங்கள், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து நிற்கும், கிளைகள் போன்றவைதான். இவைகளை அகற்றுவதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே நீண்ட காலமாக சாலையோரங்களில் இருக்கும் மரங்களை தேவையானால் அகற்றுவதும், சரியாக பராமரிக்க வேண்டியதும் இப்போதைய உடனடித் தேவை.
0
(26.03.2009 அன்று ஆல் இண்டியா ரேடியோ “நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்டது.)

செவ்வாய், மார்ச் 24, 2009

ஐ.பி.எல்.

1 கருத்துகள்
தேர்தல் Vs ஐ.பி.எல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தாமல் வெளிநாடுகளில் நடத்துவதற்கு சச்சின், யுவராஜ், மோடி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் நடத்துவதால் என்ன பயன்?

வெளிநாடுகளில் நடத்துவதால் இளம்வீரர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடு களில் மைதானங்களிலும் விளையாடுவதால் நல்ல அனுபவம் கிடைக்கும் அதனால் வெளிநாடுகளில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது என்பது தவறில்லை. இளம் வீரர்களுக்கு நன்மைதான் என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஒருவர்.

இன்றைய ‘தினமணி’ நாளிதழில் இதைப் பற்றி ‘தேசமா? லாபமா?’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்துள்ளது. அருமையான அந்தத் தலையங்கம் உங்களுக்காக...

ஐ.பி.எல். நடத்தும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்காக, ஏலத்தில் விளையாட்டு வீரர்கள் விலை கோரப்படுவது குறித்து கருத்து மாறுபாடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது, ஐ.பி.எல். மேற்கொள்ளும் முடிவுகளைப் பார்த்தால் அது, ‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற பெயருக்கே பொருத்தம் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தினால், அதனை எப்படி ஐ.பி.எல். என அழைப்பது பொருத்தமாக இருக்க முடியும்?

பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் எங்களால் போதுமான பாதுகாப்பு அளிக்க முடியாது; உங்கள் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசு சொல்வதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

லாகூரில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகுதான், இந்திய அரசு இத்தகைய தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியதாயிற்று என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இருப்பவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். எந்த நாட்டு வீரர் மீதும் தீவிரவாதிகள் குறி வைப்பார்கள். எப்படி நிகழும் என்பதை யாரும் முன்னதாகவே தீர்மானிக்க முடியாது. யாரை வேண்டுமானாலும் தாக்குவார்கள். அப்படியொரு தாக்குதல் நிகழுமானால், தற்போது பாகிஸ்தானைப் போலவே, இந்திய அரசும் உலக நாடுகளின் முன்பாகத் தலைகுனிந்து நிற்க வேண்டியதாகிவிடும். இதற்கு அச்சப்பட்டுத்தான், தேர்தல் நேரத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க இயலாது என்று இந்திய அரசு கூறி வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்ள முடியுமா என்பதையும் ஐ.பி.எல். யோசிக்கத் தயங்கவில்லை. குண்டு துளைக்காத 200 கார்களை வாங்குவதற்கு முயற்சி செய்யும் அளவுக்கு அவர்களது திட்டங்கள் அமைந்தன.

திட்டமிட்டபடி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடக்க வேண்டும் என்பதில் ஐ.பி.எல். குறியாக இருந்தது. பிரதமரையும் நேரில் சென்று பேசிப் பார்த்தார்கள். எல்லா முயற்சிகளும் எடுபடாத நிலையில், தேதிகளை மாற்றுவதில் விருப்பமின்றிச் செயல்பட்டு வந்தார்கள். தற்போது, இந்திய அரசு மிகத் தெளிவாக, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில், போட்டிகளை வெளிநாட்டில்-ஆப்பிரிக்கா அல்லது இங்கிலாந்தில் நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர்.

நம் நாட்டில் 15-வது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பொதுத் தேர்வுகள்கூட இதைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே நடத்தப்பட்டன. இப்படியிருக்கையில், தேர்தலைப் பற்றிய எண்ணமே இல்லாமல், தன்னிச்சையாக விளையாட்டுப் போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்துவிட்டு, ஓர் அரசாங்கம் அதற்கேற்ப தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது எந்த வகையிலாவது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துவதோ எந்த வகையிலும் நியாயமில்லை.

இந்த அளவுக்கு இந்திய அரசிடம் ஐ.பி.எல். எதிர்பார்க்கக் காரணம், ஐ.பி.எல். நிர்வாகத்தினர் அரசியல் தலைவர்களிடம் கொண்டுள்ள நெருக்கம் தந்த தைரியம் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்?

இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவோம் என்று தீர்மானிப்பார்கள் என்றால், அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மதிக்கவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். அவர்களுக்கு இந்தப் போட்டியை எங்கு நடத்தினாலும், அதற்கான தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் கொள்ளை லாபம் கிடைத்துவிடும்.

இந்த கிரிக்கெட் போட்டிகள் இந்திய ரசிகர்களுக்காக அல்ல என்றால், தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் பணத்துக்காக மட்டும்தான் என்றால், அதை வெளிநாட்டில் நடத்தினால் என்ன, எந்த வனாந்திரத்தில் நடத்தினால்தான் என்ன?

ஐ.பி.எல்-க்கு இந்திய தேசம் பெரிதல்ல. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதல்ல. லாபம் மட்டுமே பெரிது எனும்போது, இப்படி ஒரு போட்டியே தேவைதானா? இந்தப் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பையே தடை செய்தால்தான் என்ன?

அப்படி எதுவும் நடக்காது. புரள இருப்பது பல கோடிகள். விளையாட்டைப் பின்னால் இருந்து இயக்குவது சூதாட்டம். இதற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது நமது அரசியல் தலைவர்களும், கட்சிகளும். அவர்கள் தேசமா, லாபமா என்று பூவா தலையா போட்டா பார்க்கப் போகிறார்கள்...

(நன்றி: தினமணி)

சனி, மார்ச் 14, 2009

எனிட் பிளைட்டன்

2 கருத்துகள்

இலக்கியம் படைப்பது என்பதே எளிதான விஷயமல்ல. அதிலும் குழந்தைகள் இலக்கியமென்றால் அப்பப்பா....! அதைப் படைப்பதற்கு தனி திறமைதான் வேண்டும்.

ஆம்! பெரியவர்களுக்கு நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதி விடலாம். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி எழுத முடியாது. நாளைய உலகத்தினைப் பற்றி தீர்மானிக்கப் போகிறவர்கள் அவர்கள். கதையானாலும் சரி, கட்டுரைகளானாலும் சரி, பாடல்களானாலும் சரி அவர்கள் மனத்துக்கு எளிதில் புரியும்படி, அவர்கள் ரசிக்கும்படி எழுத வேண்டும்.

அப்படி குழந்தைகள் மனத்தைக் கவரும்படி எழுதியவர்களை விரல் விட்டு எண்ணி
விடலாம். அதிலும் வெற்றி பெற்றவர்கள் மிக சிலர்தான். அவர்களில் மிக முக்கியமானவர் எனிட் பிளைட்டன். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பெண்மணி. இவர் குழந்தைகளுக்காகவே 600க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருக்கிறார்.

1897ம் ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி அன்று இங்கிலாந்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாகப் பிறந்தார் எனிட் பிளைட்டன். இவருக்கு 13 வயதிருக்கும்போது இவர்களை விட்டு இவரின் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். பிளைட்டன் தனது 13வயதில் பாடசாலை ஒன்றில் தங்கிக் கல்வி பயின்று, ஆசிரியர் பயிற்சி பெற்று, ஓராண்டு ஆசிரியராகவும், நான்காண்டு குழந்தைகளைப் பராமரிப்பவராகவும் பணியாற்றினார்.

அப்படி குழந்தைகளைப் பராமரிக்கும்போதுதான் மிகுந்த ஈடுபாட்டுடன் இவர் குழந்தைகளுக்காக தீவிரமாக எழுத ஆரம்பித்தார். எனிட் பிளைட்டன் அதற்கும் முன்பாக சிறுமியாக இருந்த போது தன்னுடைய 14 வயதிலேயே கவிதை எழுதியவர். அது சிறுவர்களுக்கான இதழ் ஒன்றில் வெளிவந்தது.

சைல்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) என்னும் இதழில் 1922 - ல் பிளைட்டனின் முதல் கவிதை பிரசுமானது. அதுமுதல் இவர் தொடர்ந்து குழந்தைகளுக்காக கவிதை, கதைகள் எழுதுவதில் தீவிரமானார்.

‘டீச்சர்ஸ் ஜெரால்டு’ என்ற பத்திரிகையில் சிறுவர், சிறுமிகளுக்காக தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவந்தார் பிளைட்டன். அதன்மூலம் குழந்தைகளிடம் இவரது செல்வாக்கும் மிகவும் அதிகமானது.

‘மாடர்ன் டீச்சிங்’, ‘பிராக்டிகல் சஜஷன்ஸ் ஃபார் ஜூனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்’- எனிட் பிளைட்டன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் மிகவும் பிரபலமடைந்தன. அதன்பின்னர் குழந்தைகளுக்காகவே தொடங்கப்பட்ட சன்னி ஸ்டோரிஸ் (Sunny Stories) இதழில் ‘விஷ்ஷிங் சேர்’ என்ற தொடரைக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் வீரதீரமாக எழுதத் தொடங்கினார் எனிட் பிளைட்டன். கதைகள் நல்ல நெறிகளைச் சொல்லக்கூடியனவாகவும் இருந்தன.

1950-ல் இங்கிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகள் தங்களது நூலகங்களுக்கு பிளைட்டனின் படைப்புகளை வாங்கமறுத்தனர். இதனால், இவரின் கதைகளை நூலகங்களில் ஆர்வத்துடன் எடுத்துப் படித்து வந்த குழந்தைகள் பெரிதும் கவலைப்பட்டனர். ஆனாலும் பிளைட்டனின் எழுதின்மீதும், கதைகளின்மீதும் கொண்ட ஆர்வத்தினால் ஆசையினால் சிறுவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அவர்கள் தங்கள் பெற்றோர்கள் தங்களின் கைச்செலவிற்காக தந்த பணத்தினைக் கொண்டு புத்தகங்களை காசு கொடுத்துக் கடைகளில் வாங்க ஆரம்பித்தனர். பிளைட்டனின் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.

எனிட் பிளைட்டனின் புக் ஆஃப் பேர்ஸ், மிஸ்டர் கெஸ்லியானோஸ் சர்க்கஸ், த நாட்டியஸ்ட் கேர்ள் இன் த ஸ்கூல், ஃபைன் ஆன் ஏ டிரஷர் ஐலண்ட், த சீக்ரெட் செவன் போன்ற புத்தகங்கள் உலகில் மிகவும் பிரபலமானவை.

‘த பேமஸ் ஃபைவ்’ என்ற புத்தகம் மட்டும் கோடிக்கணத்தில் விற்பனையானது. இதுதவிர இங்கிலாந்து மற்றும் உலகிலுள்ள நாற்பது பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்தது என்பது அடுத்த ஆச்சரியமான விஷயம்.

தன்னிடம் சேர்ந்த பெரும் பணத்தைக் கொண்டு ‘கிரின் ஹெட்ஜஸ்’ என்ற மாளிகையைக் கட்டி குடிபெயர்ந்தார் எனிட் பிளைட்டன். அதில் காகம், புறா, ஆமை, சேவல், வாத்து, முள்ளம்பன்றி போன்ற பலவகையான மிருகங்களையும் பறவைகளையும் செல்லமாக வளர்த்து வந்த பிளைட்டன் தனது 71 வயதில் (28.11.1968) மறைந்தார்.

1922 முதல் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கிய எனிட் பிளைட்டன் படைத்த குழந்தை இலக்கியங்கள் இன்றும் உயிர்வாழ்க்கின்றன.

(ப்ராடிஜியின் ‘மேதை’ இதழில் வெளியானது.)

திங்கள், மார்ச் 09, 2009

1 கருத்துகள்
கலைச்செல்வி

வெள்ளி, மார்ச் 06, 2009

0 கருத்துகள்
குடிகாரர்கள் ஓட்டு யாருக்கு?

சாலையில் ஒருவர் நின்று கொண்டு யாரையோ சரமாரியாக வசைப்பாடிக் கொண்டிருந்தார். போவோர் வருவோர் எல்லாம் கண்டும் காணாமலும் சென்றனர்.

மெல்ல மெல்ல என் அருகில் வந்தார் அந்த நபர். போதை நெடி என்னையும் தாக்கியது. தள்ளாடிதான் போனேன்.

என்னருகில் வந்தார்.

‘எங்க கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். அவன் பேசாம சொல்லிட்டான். இவரு கேட்டுட்டாரு.’

‘யார் அந்த அவன்? யார் அந்த இவரு?’ எனக்கு ஒன்றும் புரியல.

‘இன்னாபா பிரியல.’

நான் புரியவில்லையென்று தலையாட்டினேன்.

‘அதாம்ப்பா, நம்ம ராமதாசு. சும்மாயில்லாம மதுக்கடய மூடுன்னு போராட்டம் நடத்துனா. கலைஞரு சரின்னு கடை நேரத்த கொறச்சுட்டாரு.’

‘அதனால இப்ப என்ன?’ கொஞ்சம் பயந்துதான் கேட்டேன்.

‘காத்தால 10 மணிக்கு தொறந்து நைட்டு 10 மணிக்கு கடைய மூடுறான். அப்படி மூடுன்னா. அதுக்கு மேல எவனும் குடிக்கமாட்டான்னு நெனப்பு. அதானில்ல. பத்து மணிக்கும் அப்புறம் ப்ளாக்குல வாங்கி குடிக்கிறான் தெரியுமா? ப்ளாக் விக்கிறதுக்குன்னு ஆளு இருக்கு. டூப்ளிகேட் சரக்கு. அதுவும் 65 ரூவா சரக்க 100 ரூபாய்க்கு விக்கிறானுங்கோ. இதனால என்னாச்சு தெரியுமா? எங்களுக்கு 35 ரூவா கூடுதல் செலவுதானே? நீ சொல்லு.

நான் எதுவும் பேசவில்லை.

அதுமட்டுமா. கவர்மெண்ட்டுக்கு எவ்வளவு லாசு (நஷ்டம்). இதெல்லாம் தெரியாம கடைய மூடுன்னு இவர் சொல்வாராம். அவரு கேட்பாராம். அதனால குடிகாரனுங்க எல்லாம் இந்த தபா கண்டிப்பா ராமதாசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்.’

அவர் அந்த இடத்தைவிட்டுச் சென்றபின்னும் நெடி போகவில்லை. நான் போய்விட்டேன் வீட்டுக்குள்ளே.

தேர்தலில் ராமதாசுக்கு ஓட்டு விழுமா? விழாதா?

இவர்களும் அதை நிர்ணயிப்பவர்கள்தானே?

வியாழன், மார்ச் 05, 2009

1 கருத்துகள்
திண்டுக்கல்லு... திண்டுக்கல்லு...

‘சார் இப்ப என்னசார் பண்ணுறது?’ - அலுவலகத்தில் தவறு செய்த ஒருவர் தன் முதலாளியிடம் கேட்டான்.

‘நேராக திண்டுக்கல்லுக்குப் போ. ஒரு பெரிய பூட்டா பார்த்து வாங்கிவிட்டு வா. ரெண்டு பேரும் சேர்ந்து பூட்டிட்டு போவோம்.’

இதுபோன்ற பேச்சுக்கள் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் முதலாளி, தொழிலாளிக்கிடையில் சாதாரணமாக நடைபெறுகிற ஒன்றாகும்.

‘சரி, பூட்டு வாங்கிட்டு வா என்று சொன்னால் போதாதா? அதென்ன திண்டுக்கல் பூட்டு?’ இப்படி ஒரு கேள்வி உங்கள் மனத்தில் தோன்றுகிறதல்லவா? அதற்கு ஒரு காரணம் இருகிறது. விசேஷமும் முக்கியத்துவமும் இருக்கிறது.

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார். வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.
டிலோ பூட்டு

திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

பெல் லாக்

இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

லண்டன் லாக்

ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

திண்டுக்கல்லில் மட்டுமல்லாது அதனையொட்டிய நாகல்நகர், நல்லாம்பட்டி, மேட்டுப்பட்டி, கம்மாளப்பட்டி, குடைபாறைபட்டி, பெருமாள்கோவில்பட்டி, வேப்பம்பட்டி போன்ற இடங்களிலும் திண்டுக்கல் பூட்டுகள் செய்யப்படுகின்றன.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?

22 கிலோ!

(ப்ராடிஜியின் ‘மேதை’ இதழில் வெளியானது.)

புதன், மார்ச் 04, 2009

0 கருத்துகள்
வெற்றி நடைபோடும் தேர்தல் நாடகம்

தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டது.

இனி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பதிலும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டு கொடுப்பதிலும் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கும்.

எப்போதும் போல பொதுமக்கள் ‘ஆ’ வாயைத் தொறந்து என்ன நடக்கப் போகிறது? என்று தினசரிகளை வைத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

இன்னும் சில நாட்களில் இந்த நாடகங்கள் அரங்கேற போகிறது. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்வரை இந்நாடகம் தினமும் வெற்றி நடைபோடும்.

வெள்ளி, பிப்ரவரி 27, 2009

0 கருத்துகள்
கண்காணிப்புக் கேமராக்கள் உஷார்!

என் நண்பர் ஒருவருக்கு சிறு விபத்து நடந்திருந்தது. அவரைப் போய்ப் பார்த்த நான், பொதுவாக சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘என்னங்க ஆச்சு?’ என்று கேட்டேன்.

‘வண்டில போய்க்கிட்டு இருந்தேன். சிக்னல்ல சிவப்பு விளக்கு எரியறதைப் பாத்ததும் வண்டியை நிறுத்திட்டேன். பின்னால வேகமா வந்த ஒரு வண்டிக்காரர் என்னை இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டார்.’ என்றார் நண்பர்.

பாவம் என் நண்பர். காலில் அடிபட்டு இருபது நாட்களாக அலுவலகத்துக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்.

சென்னை நகரைப் பொறுத்தவரை, சாலைவிதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கைக் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் சிக்னல்களில் நடக்கிற அத்துமீறல்களைக் கேட்கவே வேண்டாம்.

சிக்னலில், சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்த வேண்டுமென்பதும், மஞ்சள் விளக்கு எரிந்தால் வாகனம் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் தயாராக வேண்டும் என்பதும், பச்சை விளக்கு எரிந்தால் வாகனம் செல்லலாம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் இதனை மதிப்பவர்கள் எத்தனை பேர்?

நான் ஒரு நாள் ஆழ்வார்ப்பேட்டை சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் வேகமாக வந்துகொண்டிருந்தன. அந்த வாகனங்களை நிற்கச் சொல்லும் மஞ்சள் விளக்கு சிக்னலில் எரிந்தது. ஆனால் யாரும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அதே சமயம் எனக்கு பின்னால் இருந்த பேருந்து ஒட்டுநர் என் காது செவிடாகும்படி ஹாரனை அடித்துக்கொண்டிருந்தார். அவர் அழுத்திப்பிடித்த ஆக்ஸிலேட்டரில் பேருந்து உறுமியபடி நகர ஆரம்பித்திருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ‘போ, போ!’ என சைகை செய்தபடி என் வாகனத்தை இடிப்பதுபோல பேருந்தை ஓட்டினார் அந்த ஓட்டுனர். நான் சுதாரித்துக்கொண்டு என் வாகனத்தை விரட்டவேண்டியதாயிற்று.

பெரும்பாலும் பேருந்துகளும், ஆட்டோக்களும் சிக்னலில் அத்து மீறுகின்றன என்பது என் கருத்து. எல்லைகோட்டை தாண்டி நிற்பதை ஒரு ஸ்டைலாக நினைக்கிறார்கள் சிலர். சைக்கிள் ஒட்டுபவர்கள் இவை எல்லாவற்றையும்விட ஒரு படி அதிகம். அவர்கள் சிக்னல் என்பதை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு சிக்னலைக் கடந்துவிடுகின்றனர்.

அதே போல அதிகாலையிலும், இரவு நேரத்திலும் சிக்னல் என்ற ஒன்று இருப்பதை எல்லா வாகன ஒட்டுநர்களும் மறந்தே போய்விடுகிறார்கள். தப்பிதவறி யாராவது ஒருவர் போக்குவரத்து விதிகளை மதித்து, சிக்னலில் நின்றால், அவரைக் கடந்து செல்பவர்கள் ஒருமாதிரியாக பார்த்துவிட்டுச் செல்வார்கள். ஒரு சிலர் பக்கத்தில் வந்து ‘போயேன்யா’ என்று திட்டிவிட்டுப் போவதும் நடக்கும்.

இரவு பத்து மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரைக்கும் சில சிக்னல்களில் சிவப்பு விளக்கும், சில சிக்னல்களில் மஞ்சள் விளக்கும் மின்னிக் கொண்டேயிருக்கும். ஆனால் அதனை யாரும் பொருட்டுபடுத்துவதே இல்லை. ஒரு முறை நானும் எனது நண்பரும் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கருகில் ஒரு பைக் வந்து நின்றது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். குடிபோதையில் வேறு இருந்தனர். அவர்களில் ஒருவன் எனது நண்பர் அணிந்திருந்த ஹெல்மெட்டை தட்டி, ‘என்ன சந்திர மண்டலத்துக்கா போற?’ என்று கிண்டல் செய்து சிரித்தனர்.

சிக்னல் இருக்கும் இடங்களில் டிராபிக் போலீஸ்காரர் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், சிக்னலை மதித்து வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு சிக்னலுக்கும் ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

தற்போது போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தவதற்காகவும் கண்டுபிடிப்பதற்காகவும் சென்னையில் கூடுதலாக 20 புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

ஏற்கெனவே, சென்னையில் 14 இடங்களில் போக்குவரத்து விதிகள் மீறலை தடுப்பதற்காக, சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்காக காவல்துறை நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

போர் நினைவு சின்னம், தலைமை செயலக வெளி-வாயில், வீல்ஸ் இந்தியா, வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை, பெரியார் சிலை, எஸ்.என்.செட்டி சாலை, கத்திப்பாரா சந்திப்பு, மத்திய கைலாஷ், ஆல்டா, ராஜ்பவன், வடபழனி நூறடிசாலை, போரூர் ரவுண்டானா, அண்ணாநகர் ரவுண்டானா, விமான நிலையம், கிரீன்வேஸ் சாலை, அசோக் பில்லர் போன்ற 20 இடங்களில் உள்ள சாலை சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதுதவிர குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டு பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள் தரப்பட்டு உள்ளன.

விபத்து அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட-விருக்கிறது.

அதிக அளவிலான வாகனங்கள் ஒடுவதால், சில சிக்னல் காட்டும் கருவிகள் மீது அழுக்குப் படிந்து விடுகின்றன. இதனால் வயதானவர்கள் வாகனம் ஒட்டும்போது என்ன விளக்கு எரிகிறதென்றே தெரிவதில்லை. அவ்வபோது சிக்னல்களை சுத்தம் செய்தால் விளக்குகளும் பளிச்சென்று எரியும். வாகனம் ஒட்டுபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

சாலை விதி என்பது பாதுகாப்பான ஒன்று. அதைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். சாலைவிதிகளை கடைபிடித்தால் நாம் விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கையில், நமக்காக ஒரு விதியைக் கடைபிடித்து வாழும் நாம் சாலை விதிகளையும் சற்று கடைபிடிப்பது நல்லது.
நகரின் முக்கிய சாலைகளில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதால், சாலை விதிகளை மீறுபவர்கள் இனிமேல் சரியாகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

(13.02.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

வியாழன், பிப்ரவரி 26, 2009

1 கருத்துகள்
திமுக Vs 356

ஆட்சிக் கலைப்புக்கும் கழக ஆட்சிக்கும் ஏதோ ஜென்மத் தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட கட்சிகளிலேயே ஆட்சியில் இருக்கும்போதே இரண்டுமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தடவையும் கலைஞர் தலைமையிலான திமுக தான் ஆட்சியில் இருந்தது.

1967ல் முதல் திமுக ஆட்சி வந்தது. 1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்தபின், முதல்வரான கலைஞர் திடீரென ஆட்சியைக் கலைத்துவிட்டார்.

1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது கலைஞர் தலைமையிலான திமுக அரசை 356ஐ பயன்படுத்திக் கலைக்கப்பட்டதுதான் முதல் தடவை.

1991ல் அதிமுக வற்புறுத்தியதால் பிரதமராக இருந்த சந்திரசேகர் 356ஐ பயன்படுத்தி கலைஞர் தலைமையிலான திமுக அரசு இரண்டாவது தடவையாகக் கலைத்தார்.

1997ல் ஐக்கிய முன்னணியில் திமுகவும் ஓர் அங்கம் வகித்து வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கியதாக கூறப்பட்டிருந்ததால், திமுக ஆட்சியைக் கலைக்குமாறும், திமுகவின் மத்திய அமைச்சர்களை நீக்குமாறும் கோரிக்கை வைத்தது, குஜ்ரால் அரசுக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ். காங்கிரஸ் தொடுத்த நெருக்கடியை ஏற்க மறுத்ததால் குஜ்ரால் பதவி விலகினார். அதன்பின்னர் வந்த பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்ல, வாஜ்பாய் அரசு மறுத்தது, விளைவு மீண்டும் ஒரு நடாளுமன்றத் தேர்தல்.

2006ம் ஆண்டு ஐந்தாம் முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்று தற்போது மூன்று வருடங்கள் ஆக போகின்றது. இன்னும் என்னடா திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லையே? என எண்ணிக் கொண்டிருக்கையில்...

இதோ மீண்டும் 356ஐ கேட்டுவிட்டது அதிமுக.

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கலைக்க உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் ஜெயக்குமார்.

என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.