சனி, மே 02, 2009

பெண்ணே கவனம்

4 கருத்துகள்



















இறைவனே கூறு

புண்ணிய பூமியிது
புனித பூமியிது - இன்று
புண்ணியமும் இல்லை
புனிதமும் இல்லை

பாலில் தண்ணீர்
சர்க்கரையில் ரவை
அரிசியில் கல் - போலிகள்
களைபோல் வளர்ந்து
ஆல்போல் நிற்கிறது

தேன் கூட்டிற்கு நெருப்பாய்
மான் கூட்டத்தில் நரியாய்
சிவபூஜையில் கரடியாய்
இவர்கள் நுழைந்தார்களோ?

வார்த்தை ஜாலங்கள்
வண்ண வண்ண மலர்கள்
வசதியான ஆசனங்கள்
வசீகரமான பார்வைகள்

கடவுளின் சீடரென்றும்
கடவுளே தானென்றும் - இதில்
பொய்யில்லை யென்பார்
புரட்டுமில்லை யென்பார்
பொழுது சாய்கையிலோ
புரட்டி எடுத்திடுவார்
கன்னிப் பெண்களை
கடவுளின் பெயரால்

சிறியப் பெண்ணைப் பார்க்கையில்
சிங்காரமாய் சிரித்திடுவார்
மந்திரம் என்ற 
தந்திரச் சொல்லைக் கூறி
மஞ்சத்தில் கிடத்தி
நெஞ்சத்தில் அணைத்திடுவார்

பெண்களே!
இறைவனின் பெயர் சொல்லி
அழைப்பவர்களிடம்
இதயத்தை பறிகொடுத்து
இரக்கமற்ற பாவிகளிடம்
இழந்துவிடாதீர்கள் கற்பை

இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாறுவீர்கள் பெண்களே
இனியாவது விழித்திடுங்கள்
இறைவன் மனதில் இருக்கிறான்
மனதை ஆழப்படுத்திப் பார்
மகத்தான ஒளியில் தெரிவான்

இறைவனுக் கெதற்கு
ஏஜென்ட்?

இனியாவது
எச்சரிக்கையா யிருங்கள்
சாமியார்களிடம்

இவ்விஷயத்தில் மட்டும்
மதங்களின் ஒற்றுமை
ஏன்?

இறைவனே 
பதில் கூறு

வியாழன், ஏப்ரல் 30, 2009

முதலைகள்

0 கருத்துகள்
நிஜ முதலைகள்

இலங்கைப் பிரச்னை, தேர்தல் பிரச்சாரம், தேர்தல் செய்திகள், கலைஞரின் உண்ணாவிரதம், ஜெயலலிதாவின் ஈழம் இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி தொலைக்காட்சியில் பார்த்து மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்றே தோன்றியது.

இனி தமிழ் சேனல்களைப் பார்க்கக் கூடாது. (தேர்தல் முடியும் வரைதான்) என்று எண்ணி சேனல்களை மாற்றத் தொடங்கினேன். டிஸ்கவரி சேனல் வந்தது. சரி இதையும்தான் பார்க்கலாமே என்று எண்ணி, சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார்கள். முதலை எப்படி வாழ்கிறது என்பதைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். நான் பார்க்கும்போது முதலைகள் தனது உணவிற்காக தண்ணீர் பாய்ந்து ஓடும் நதியில் செல்கின்றன. அங்கே பாறைகளிலிருந்து கொட்டி கொண்டிருக்கும் நீருக்கு அருகில் சென்று காத்துக் கொண்டிருக்கின்றன. வேகமாக வரும் தண்ணீரில் மிதந்து வரும் மீன்கள் துள்ளிக் குதிக்கும்போது அதனை லாகவமாகப் பிடித்து, கடித்து சாப்பிடுகின்றன. மீன்களைப் பிடிக்கும் முதலைகள் மீன்கள் துள்ளி மீண்டும் தண்ணீரில் குதிக்காமல் எப்படி சாப்பிடுகின்ற காட்சி பார்த்து ரசித்தேன்.
தான் இடும் முட்டைகளை மண்ணைத் தோண்டி பள்ளத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கின்றன முதலைகள். முட்டையை உடைத்துக் கொண்டு வரும் குட்டி முதலைகள் (முட்டையிலிருந்து வந்தால் காக்கா குஞ்சு, கிளிக் குஞ்சு என்கிற முதலைக் குஞ்சு ஏன் சொல்லக்கூடாதா?) வரும் நேரத்தை கணித்து அங்கும் வரும் பெரிய முதலை மண்ணைச் சீரமைக்கின்றது. பின்னர் முதலைக் குட்டி பெரிய முதலையின் வாயருகில் வந்ததும், குட்டி முதலையை தன் வாயில் கவ்வி (பற்கள் படாமல்) தூக்கிச் சென்று தண்ணீரில் விடுகின்றன. இப்படியாக ஒவ்வொரு குட்டிகளாக எடுத்துச் செல்கின்ற முதலை. உடையாத முட்டைகளை ஒவ்வொன்றாக தன் வாயில் கவ்வி தண்ணீருக்கு செல்கின்றது. நீரில் இறங்கிவுடன் முட்டை உடையாமல் முட்டையை சுத்தமாக கழுவுகின்றது. இதற்கு பிறகுதான் நிகழ்வதுதான் ஆச்சர்யமாக இருக்கின்றது. டாக்டர்கள் சிசேரியன் செய்து குழந்தைகளை எடுப்பதுபோல, முதலை வாயில் இருக்கும் முட்டையை உடைக்கின்றது. உள்ளேயிருக்கும் குட்டிக்கு எதுவும் ஆகாமல் உடைக்கின்றது. முட்டை உடைந்ததும் அதனுள்ளே இருக்கும் குட்டியை தண்ணீரில் மிதக்க விடுகின்றது. இதனைப் பார்க்க பார்க்க சிலிர்த்து போனேன்.


அரசியல் முதலைகளை காணும் இந்த நேரத்தில் நிஜ முதலைப் பற்றித் தெரிந்துகொண்டது மனதுக்கு மகிழ்ச்சியளித்தது.