சனி, பிப்ரவரி 14, 2009

1 கருத்துகள்
காதலென்பது...

காலை 6 மணி.

வீட்டை விட்டு வெளியே வந்தான் அவன்.

ரோட்டில் நடமாட்டம் அதிகம் இல்லை. சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கேட்டின் அருகில் நின்றான். இரண்டு வீடுகள் தள்ளி எதிர்புறமுள்ள வீட்டை உற்று நோக்கினான்.

யாரும் நிற்பதாக தெரியவில்லை. தலையைக் குனிந்து கொண்டான்.

‘க்ரீரீ..................ரீச்’ 

கதவு திறக்கப்படும் சத்தம்.

சத்தம் வந்த பக்கத்தைப் பார்த்தான். அந்த வீடுதான். மெல்ல மெல்ல தலை வெளியே தெரிந்தது.

உள்ளுக்குள் அவனுக்கு சந்தோஷம் பெருகெடுத்து ஓடியது. துள்ளிக் குதித்து ஒடணும்போல தோன்றியது. இருந்தாலும் ஏதோ முனங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வீட்டிலிருந்து மெல்ல அவள் வெளியே வந்தாள். அவனைப் போலவே அங்குமிங்கும் பார்த்தாள்.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரும் தென்படவில்லை.  தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். 

சிறிது தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தாள்.

அவனும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். 

சில அடிகளில் அவளை நெருங்கிவிடுவான்.

நெருங்கிவிட்டான்.

வெட்கத்தில் அவள் கொஞ்சம் விலகி சென்றாள். அவன் விடவில்லை. பின்தொடர்ந்தான்.

ஒரு வீட்டின் முன்புறமுள்ள மரத்தின் அடியில் நின்றார்கள்.

இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ஏய்... ச்சூ... போ...’ வீட்டுக்காரர் விரட்டினார்.

அந்த இரண்டு நாய்களும் ஓடி தங்களின் வீட்டுக்குள் புகுந்து கொண்டன.

இதுவும் காதல் தானே?

வெள்ளி, பிப்ரவரி 13, 2009

1 கருத்துகள்
கல்யாண போதை

கல்யாணப் பத்திரிகை கொடுப்பதென்பது சுகமான அனுபவம் என்பதை மணமகன், மணமகளிடம் கேட்டால் தான் தெரியும்.

‘இன்னும் இத்தனை சொந்தக்காரங்களுக்குக் கொடுக்க ணும் நேரம் வேற இல்லை’ என்று பெற்றோர்கள்கூட அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள்.

ஆனால், மணப்பெண்ணோ, மணமகனோ சிறிதும் சலிக்காமல் நேரம் காலம் பார்க்காமல், நெருங்கிய நண்பர்கள், இந்நாள், முந்நாள் அலுவலக நண்பர்கள், நண்பர்கள் மூலம் அறிமுகமான நண்பர்கள், தனக்குத் தெரிந்த அத்தனைப் பேருக்கும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுபோல திருமண அழைப்பிதழை கொடுப்பார்கள். 

‘எனக்கு கல்யாணம்’ (‘சின்னத்தம்பி’ ஞாபகம்கூட வரும்.) என்று அழைப்பிதழைக் கொடுக்கும்போது அவர்களிடம் தோன்றும் வெட்கம், ஒருவித அசட்டு சிரிப்பு, சிறு புன்னகை என எல்லாவற்றையும் ரசிக்கத்தான் தோன்றும். சிலர் எல்லைமீறி அட்வைஸ் என்ற பேரில் அறுத்துத்தள்ளுவர். அதனையும் இவர்கள் கேட்டுத்தான் தீரவேண்டும். வேறு வழியில்லை. சிலர் என்ன கேள்விகேட்டாலும் இவர்களுக்கு காதிலேயே விழாது. சிந்தனையெல்லாம் அவளை சுற்றியும், அவனை சுற்றியும் இருக்கும்.

முன்பெல்லாம் மணப்பெண்ணும், மணமகனும் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ளமாட்டார்கள். சந்தர்ப்பமில்லை. ஆனால் இப்போது செல்போன் ஒன்றுபோதும். செல்போனை எடுத்தால் கீழே வைக்கவே மனம் வராது. செல்போன் சார்ஜே தீர்ந்துபோய்விடும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவார்களும் இருக்கிறார்கள். சிலர் சார்ஜரைத் தேடி அலைவார்கள். அப்படி அவர்கள் அலையும்போது போதைப்பொருளுக்கு அலைபவர்களை நினைவூட்டும்.

கல்யாணம் என்பதும் ஒருவித போதை தானே? அதைப் போகப் போக புரிந்துகொள்வார்கள். புது மணப்பெண்ணும், மணமகனும். என்ன நான் சொல்வது?

புதன், பிப்ரவரி 11, 2009

1 கருத்துகள்
பூஜாவா? பாவனாவா?

‘நான் கடவுள்’ பாலா படம். 

படம் அருமையாக இருக்கு, பயங்கரமா இருக்கு, பரவாயில்ல, வேஸ்ட் என்று பலரும் பலவிதமாய் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெயமோகன் நாவல் போல் படம் இல்லை என்கிறார்கள். நானும் அந்த நாவலை படித்ததில்லை. படிக்க வேண்டும்.

‘நல்லவேள தல தப்பிச்சுட்டாரு. இல்லன்னா...’ என்று பெருமூச்சு விடுகிறார்களாம் அஜீத் ரசிகர்கள் .


எனக்கென்னவோ பாலா படங்களில் ஒரு படமும் பிடிக்கவில்லை. ஏனென்று கேட்டால் தெரியாது. பாலா படத்திலெல்லாம் ‘கஞ்சா’வுக்கு முக்கியத்துவம் தருவதாக என் மனத்துக்கு படுகிறது.

ஆர்யா அரைமணி நேரம் தான் வருகிறாராம். இதற்காகவா மூன்று வருடங்கள் மெனக்கெட்டு நடித்தார்.

படத்தின் நாயகி பூஜா அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு அவார்டு கண்டிப்பாக உண்டு என்று ச.ந. கண்ணன் அடித்து சொல்லுகிறார். காத்திருப்போம்.

பூஜா என்றவுடன்தான் எனக்கு ஞாபகம் வருகிறது?

நேற்று தற்செயலாக ‘நான் கடவுள்’ பாடல்களைக் கேட்பதற்காக, தமிழ்பீட். காம்-விற்குச் சென்றேன். ‘நான் கடவுள்’ படத்தின் ஸ்டில்லை கண்டேன். அதில் ஆர்யாவுடன் பூஜாவிற்குப் பதிலாக பாவனா இருக்கிறார். 




ஒருவேளை படம் பூஜை போட்ட நிலையிலேயே இருக்கிறது என்று நினைத்திருக்கிறார்களோ என்னவோ?

இதற்குப் பின்னாவது மாற்றுவார்களா?

திங்கள், பிப்ரவரி 09, 2009

3 கருத்துகள்


இக்பால் 
(இந்தித் திரைப்படம்)

என்னடா எல்லாரும் புதுசா ரிலீஸான ‘நான் கடவுள்’ பத்தி எழுதுறாங்கன்னா.  நீ மட்டும் என்ன பழைய இந்திப் படத்தைப் பற்றி எழுதுற என்று நினைக்காதீங்க.
ஏன்னா...

·

சனிக்கிழமை தோறும் தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் இந்திப் படம் பார்ப்பேன். சில நேரங்களில் நல்லப் படங்களையும், சில நேரங்களில் குப்பையான படங்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறது.

இந்த வார சனிக்கிழமை ‘இக்பால்’ என்ற படத்தினை பார்த்தேன் இரண்டாவது முறையாக.

கிரிக்கெட் சம்பந்தமான படம். பிறவிலேயே காது கேளாத, பேசவும் முடியாத இக்பாலுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். சாதாரண கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்த இக்பால் எப்படி இந்தியக் கிரிக்கெட் டீமில் இடம் பெறுகிறான் என்பதே கதை.

இக்பாலாக நடித்த பையன் அருமையாக நடித்திருக்கிறான். நஷருதீன் ஷா, கிரீஷ் கர்னாட் இருவரில் ஷா பேரை தட்டிச் சென்றுவிடுகிறார். 


இக்பாலின் தங்கை நடித்த சிறுமி, தாயாக நடித்த பெண், தந்தையாக நடித்தவர்கள் தங்களின் பங்கை சிறப்பாக செய்திருந்தனர்.
 
இந்த ஆறுபேரைச் சுற்றிதான் கதை நடக்கிறது. திரைக்கதையில் எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகள் யாவும் மனதைத் தொடுகின்றன. 

எனக்கு இந்தி தெரியாவிட்டாலும் இத்திரைப்படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அனைவரும் இந்த படத்தினை பார்க்கலாம்.
 
சூப்பர் இக்பால்!