வெள்ளி, பிப்ரவரி 27, 2009

0 கருத்துகள்
கண்காணிப்புக் கேமராக்கள் உஷார்!

என் நண்பர் ஒருவருக்கு சிறு விபத்து நடந்திருந்தது. அவரைப் போய்ப் பார்த்த நான், பொதுவாக சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘என்னங்க ஆச்சு?’ என்று கேட்டேன்.

‘வண்டில போய்க்கிட்டு இருந்தேன். சிக்னல்ல சிவப்பு விளக்கு எரியறதைப் பாத்ததும் வண்டியை நிறுத்திட்டேன். பின்னால வேகமா வந்த ஒரு வண்டிக்காரர் என்னை இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டார்.’ என்றார் நண்பர்.

பாவம் என் நண்பர். காலில் அடிபட்டு இருபது நாட்களாக அலுவலகத்துக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்.

சென்னை நகரைப் பொறுத்தவரை, சாலைவிதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கைக் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் சிக்னல்களில் நடக்கிற அத்துமீறல்களைக் கேட்கவே வேண்டாம்.

சிக்னலில், சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்த வேண்டுமென்பதும், மஞ்சள் விளக்கு எரிந்தால் வாகனம் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் தயாராக வேண்டும் என்பதும், பச்சை விளக்கு எரிந்தால் வாகனம் செல்லலாம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் இதனை மதிப்பவர்கள் எத்தனை பேர்?

நான் ஒரு நாள் ஆழ்வார்ப்பேட்டை சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் வேகமாக வந்துகொண்டிருந்தன. அந்த வாகனங்களை நிற்கச் சொல்லும் மஞ்சள் விளக்கு சிக்னலில் எரிந்தது. ஆனால் யாரும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அதே சமயம் எனக்கு பின்னால் இருந்த பேருந்து ஒட்டுநர் என் காது செவிடாகும்படி ஹாரனை அடித்துக்கொண்டிருந்தார். அவர் அழுத்திப்பிடித்த ஆக்ஸிலேட்டரில் பேருந்து உறுமியபடி நகர ஆரம்பித்திருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ‘போ, போ!’ என சைகை செய்தபடி என் வாகனத்தை இடிப்பதுபோல பேருந்தை ஓட்டினார் அந்த ஓட்டுனர். நான் சுதாரித்துக்கொண்டு என் வாகனத்தை விரட்டவேண்டியதாயிற்று.

பெரும்பாலும் பேருந்துகளும், ஆட்டோக்களும் சிக்னலில் அத்து மீறுகின்றன என்பது என் கருத்து. எல்லைகோட்டை தாண்டி நிற்பதை ஒரு ஸ்டைலாக நினைக்கிறார்கள் சிலர். சைக்கிள் ஒட்டுபவர்கள் இவை எல்லாவற்றையும்விட ஒரு படி அதிகம். அவர்கள் சிக்னல் என்பதை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு சிக்னலைக் கடந்துவிடுகின்றனர்.

அதே போல அதிகாலையிலும், இரவு நேரத்திலும் சிக்னல் என்ற ஒன்று இருப்பதை எல்லா வாகன ஒட்டுநர்களும் மறந்தே போய்விடுகிறார்கள். தப்பிதவறி யாராவது ஒருவர் போக்குவரத்து விதிகளை மதித்து, சிக்னலில் நின்றால், அவரைக் கடந்து செல்பவர்கள் ஒருமாதிரியாக பார்த்துவிட்டுச் செல்வார்கள். ஒரு சிலர் பக்கத்தில் வந்து ‘போயேன்யா’ என்று திட்டிவிட்டுப் போவதும் நடக்கும்.

இரவு பத்து மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரைக்கும் சில சிக்னல்களில் சிவப்பு விளக்கும், சில சிக்னல்களில் மஞ்சள் விளக்கும் மின்னிக் கொண்டேயிருக்கும். ஆனால் அதனை யாரும் பொருட்டுபடுத்துவதே இல்லை. ஒரு முறை நானும் எனது நண்பரும் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கருகில் ஒரு பைக் வந்து நின்றது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். குடிபோதையில் வேறு இருந்தனர். அவர்களில் ஒருவன் எனது நண்பர் அணிந்திருந்த ஹெல்மெட்டை தட்டி, ‘என்ன சந்திர மண்டலத்துக்கா போற?’ என்று கிண்டல் செய்து சிரித்தனர்.

சிக்னல் இருக்கும் இடங்களில் டிராபிக் போலீஸ்காரர் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், சிக்னலை மதித்து வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு சிக்னலுக்கும் ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

தற்போது போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தவதற்காகவும் கண்டுபிடிப்பதற்காகவும் சென்னையில் கூடுதலாக 20 புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

ஏற்கெனவே, சென்னையில் 14 இடங்களில் போக்குவரத்து விதிகள் மீறலை தடுப்பதற்காக, சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்காக காவல்துறை நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

போர் நினைவு சின்னம், தலைமை செயலக வெளி-வாயில், வீல்ஸ் இந்தியா, வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை, பெரியார் சிலை, எஸ்.என்.செட்டி சாலை, கத்திப்பாரா சந்திப்பு, மத்திய கைலாஷ், ஆல்டா, ராஜ்பவன், வடபழனி நூறடிசாலை, போரூர் ரவுண்டானா, அண்ணாநகர் ரவுண்டானா, விமான நிலையம், கிரீன்வேஸ் சாலை, அசோக் பில்லர் போன்ற 20 இடங்களில் உள்ள சாலை சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதுதவிர குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டு பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள் தரப்பட்டு உள்ளன.

விபத்து அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட-விருக்கிறது.

அதிக அளவிலான வாகனங்கள் ஒடுவதால், சில சிக்னல் காட்டும் கருவிகள் மீது அழுக்குப் படிந்து விடுகின்றன. இதனால் வயதானவர்கள் வாகனம் ஒட்டும்போது என்ன விளக்கு எரிகிறதென்றே தெரிவதில்லை. அவ்வபோது சிக்னல்களை சுத்தம் செய்தால் விளக்குகளும் பளிச்சென்று எரியும். வாகனம் ஒட்டுபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

சாலை விதி என்பது பாதுகாப்பான ஒன்று. அதைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். சாலைவிதிகளை கடைபிடித்தால் நாம் விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கையில், நமக்காக ஒரு விதியைக் கடைபிடித்து வாழும் நாம் சாலை விதிகளையும் சற்று கடைபிடிப்பது நல்லது.
நகரின் முக்கிய சாலைகளில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதால், சாலை விதிகளை மீறுபவர்கள் இனிமேல் சரியாகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

(13.02.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

வியாழன், பிப்ரவரி 26, 2009

1 கருத்துகள்
திமுக Vs 356

ஆட்சிக் கலைப்புக்கும் கழக ஆட்சிக்கும் ஏதோ ஜென்மத் தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட கட்சிகளிலேயே ஆட்சியில் இருக்கும்போதே இரண்டுமுறை கலைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு தடவையும் கலைஞர் தலைமையிலான திமுக தான் ஆட்சியில் இருந்தது.

1967ல் முதல் திமுக ஆட்சி வந்தது. 1969ல் பேரறிஞர் அண்ணா மறைந்தபின், முதல்வரான கலைஞர் திடீரென ஆட்சியைக் கலைத்துவிட்டார்.

1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தபோது கலைஞர் தலைமையிலான திமுக அரசை 356ஐ பயன்படுத்திக் கலைக்கப்பட்டதுதான் முதல் தடவை.

1991ல் அதிமுக வற்புறுத்தியதால் பிரதமராக இருந்த சந்திரசேகர் 356ஐ பயன்படுத்தி கலைஞர் தலைமையிலான திமுக அரசு இரண்டாவது தடவையாகக் கலைத்தார்.

1997ல் ஐக்கிய முன்னணியில் திமுகவும் ஓர் அங்கம் வகித்து வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு வழங்கியதாக கூறப்பட்டிருந்ததால், திமுக ஆட்சியைக் கலைக்குமாறும், திமுகவின் மத்திய அமைச்சர்களை நீக்குமாறும் கோரிக்கை வைத்தது, குஜ்ரால் அரசுக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ். காங்கிரஸ் தொடுத்த நெருக்கடியை ஏற்க மறுத்ததால் குஜ்ரால் பதவி விலகினார். அதன்பின்னர் வந்த பாஜக அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த அதிமுக, திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்ல, வாஜ்பாய் அரசு மறுத்தது, விளைவு மீண்டும் ஒரு நடாளுமன்றத் தேர்தல்.

2006ம் ஆண்டு ஐந்தாம் முறையாக கலைஞர் முதல்வராக பதவியேற்று தற்போது மூன்று வருடங்கள் ஆக போகின்றது. இன்னும் என்னடா திமுக ஆட்சியைக் கலைக்கச் சொல்லி யாரும் கேட்கவில்லையே? என எண்ணிக் கொண்டிருக்கையில்...

இதோ மீண்டும் 356ஐ கேட்டுவிட்டது அதிமுக.

உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கலைக்க உத்தரவிடவேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் சட்ட அமைச்சர் ஜெயக்குமார்.

என்ன நடக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்.

புதன், பிப்ரவரி 25, 2009

1 கருத்துகள்
சென்னையில் மெட்ரோ ரயில்

சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆங்காங்கே அரசும், மாநகராட்சியும் இணைந்து பாலங்கள் பல கட்டியிருந்தாலும், பெரும்பாலான பாலங்கள் இருப்பதென்னவோ தென்சென்னையில் தான். தென்சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களால் ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது என்று தென்சென்னைவாசிகள் கூறுகின்றனர். 

ஆனால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தினமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. சைக்கிள், ரிக்ஷா, மீன்பாடி வண்டி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார்கள், கால் டாக்சிகள், வேன்கள், டெம்போ, லாரிகள், பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள் எனப் பலவிதமான வாகனங்கள் தினமும் வந்து போகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது, ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதற்குகூட இடமில்லாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

போக்குவரத்து நெரிசலால் ஒருவருக்கு அதிக நேரச் செலவு, பெட்ரோல் விரயம், டென்ஷன், அலைச்சல், உடல் வலி போன்றவை ஏற்படுகின்றது.

‘வடசென்னையில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுதான் விடிவு?’ என்று அங்கலாய்க்காதவர்களே இருக்கவே முடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரு திட்டத்தின் மூலமாகக் கூடிய விரைவில் முடிவு ஏற்படப் போகிறது. 

அந்தத் திட்டத்தின் பெயர் சென்னை மெட்ரோ ரயில் திட்டம். 

2006-ம் ஆண்டு தமிழக அமைச்சரவைக் கூடி சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என முடிவெடுத்தது. இதற்கான அறிக்கையை தயார் செய்யும் பணி டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையும் தயாரானது. சில நாட்களுக்கு முன்புதான் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. சென்னை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க இத்திட்டம் ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம்.

இந்தத் திட்டத்திற்காகும் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஜப்பான் இண்டர்நேஷன் கார்ப்பரேஷன் ஏஜென்சி நிதியுதவியாக வழங்க இருக்கிறது. இதற்கான ஓப்பந்தத்தில் மத்திய அரசும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன. மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் கொடுக்கின்றன.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சென்னையில் முதலில் இரண்டு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. சுரங்கப் பாதையாகவும்,  தற்போது இருக்கும் பறக்கும் ரயிலைப் போன்ற இன்னொரு பாதையாகவும் அமைய உள்ள இந்த வழித்தடங்களின் மொத்த நீளம் 45 கி.மீ. இதில் 24 கி.மீ. சுரங்கப் பாதை. 21 கி.மீ. மேலே செல்லும் பாதையாக இருக்கும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் ஆரம்பித்து சென்னைத் துறைமுகம், எழும்பூர், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி சாலை, கிண்டி, மீனம்பாக்கம் வழியாக சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்படும். இதன் மொத்த நீளம் 23.1 கி.மீ. ஆகும்.

இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் ஆரம்பித்து வேப்பேரி, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, கே.கே. நகர், சிட்கோ, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை அமைக்கப்படும். இதன் மொத்த நீளம் 22 கி.மீ. ஆகும்.

இந்தத் திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு,  2015ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் இருப்பது போலவே, மத்திய அரசும் மாநில அரசும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சம பங்கு வகிக்கும்.

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 10 ஏக்கம் நிலம் தேவைப் படுகிறது. திட்டத்தின் செலவு சுமார் 14,600 கோடி ரூபாய்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாலை போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 20 சதவீதம் மட்டுமே இருந்தால் போதுமானதாக இருக்கும். 

மேலும் இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல், அதிக நேரச் செலவு போன்றவைகளைத் தவிர்ப்பதோடு, வாகனத்திலிருந்து வரும் புகைகளினால் ஏற்படும் மாசு குறையவும் வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழலும் பாதுகாப்பாக இருக்கும். சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மற்றும் தனியார் பேருந்துகள், புறநகர் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தத் திட்டத்தில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் வசதிக்கேற்ப எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பயண நேரமும் மிகவும் குறையும். சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகருக்கு 14 நிமிஷங்களிலும், மண்ணடியில் இருந்து விமான நிலையத்துக்கு 44 நிமிஷங்களிலும் செல்ல முடியும்.

6 பெட்டிகள் கொண்ட ஓரு மெட்ரோ ரயில், நெரிசல் நேரத்தில் 16 பஸ்கள், 300 கார்கள், 600 இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக அமையும்.

முக்கிய இடங்களில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, நகரும் பாதை, லிப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தி.நகர் வழியாக திருவான்மியூர் வரையிலும், போரூரிலிருந்து காமராஜர் சாலை வரையிலும், ரிங் ரோடு, ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வழியாக என்.எச். 5 வரையிலும் என வருங்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.

நீண்ட நாட்களாகவே சென்னை மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் சென்னை நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நீண்டகாலத் தீர்வாக அமையும் என நம்பலாம்.

0
(12.02.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

செவ்வாய், பிப்ரவரி 24, 2009

4 கருத்துகள்

எழுத்து ஆளர்?

மேலே படத்திலுள்ளவர் யார்? என்று நீங்கள் கேட்கலாம்.

சொல்கிறேன்.

அவர் யார்?

என்ன பேர்?

எந்த ஊர்?

என்ன செய்கிறார்?

என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் எனக்குத் தெரியாது.

ஆனால் சமீபத்தில் அவரை நான் கண்டது கோவை எக்ஸ்பிரஸில் தான். காலை 6.20 மணிக்கு ரயில் கிளம்பும் முன் ஏறி எனது இருக்கைக்கு எதிரேதான் அவர் அமர்ந்தார். வந்தவுடன் பையிலிருந்து பேப்பர்களை எடுத்தார். எழுத ஆரம்பித்தார்.
எழுதினார்.

எழுதினார்.

எழுதினார்.

எழுதிக்கொண்டேயிருந்தார். குனிந்த தலை நிமிரவே இல்லை. டிபன், காபி ஏன் தண்ணீர்கூட குடிக்கவே இல்லை. எழுதினார் எழுதினார் அப்படி எழுதிக்கொண்டேயிருந்தார்.

ரயிலில் தனக்கு எதிரில் யார் இருக்கிறார்கள். பக்கத்தில் யார் இருக்கிறார்கள்? என்றுகூட அவர் கவனித்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
இடையில் ஒரு தடவை மட்டும் இயற்கை உபாதைக்காக எழுந்து சென்றார். வந்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார்.

காட்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் கடந்து சென்றன. அவர் இறங்கவும் இல்லை. எழுதுவதை நிறுத்தவும் இல்லை. ரயில் சென்ற வேகத்திற்கு அவரும் எழுதித்தள்ளிக்கொண்டேயிருந்தார். எழுத்தாளர்கள்கூட இந்தளவிற்கு எழுதுவார்களா? என்பது சந்தேகம்தான். இன்றைக்கு எத்தனை எழுத்தாளர்கள் பேனா பிடித்து எழுதுகிறார்கள்?

அப்படி என்னதான் எழுதுகிறார்? என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது எனக்கு?

அவர் எதிரில் சென்று அமர்ந்தேன். அவர் என்னை சிறிதும் கவனிக்கவில்லை. நான் எட்டிப் பார்த்தேன்.

அவர் எழுதிக் கொண்டிருந்தது இதுதான்.

‘ராம ராம ராம.’


திங்கள், பிப்ரவரி 23, 2009

0 கருத்துகள்
ஜெயிச்சோமுங்கோ...


ஆஸ்கர் விருது.

இது நம்முடைய ஏக்கமாகவே இருந்துவந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இப்போது அந்த ஏக்கம் போய்விட்டது ஏ.ஆர். ரகுமான் மூலம்.

‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார் ரகுமான். அதுவும் இரண்டு. சிறந்த இசைக்கான விருதையும், சிறந்தப் பாடலுக்கான (ஜெய் ஹோ) விருதையும் பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

நடிகர் திலகம், உலக நாயகன் என்ற இரண்டு மாபெரும் நடிகர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும், கிடைக்கும், கிடைக்குமென எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒவ்வொரு தடவையும் நாம் ஏமாந்ததுதான் மிச்சம்.

ஆனால் இந்த முறை ஏமாற்றமடையாமல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ரகுமான். பெருமையான, மகிழ்ச்சியான விஷயம்தான்.

ஒருபக்கம் இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கின்றதைக் கண்டு வேதனைப்பட்ட உலகத் தமிழர்களுக்கு இது, புண்பட்ட மனத்தை மயிலிறகால் வருடியதுபோல் உள்ளது.

’ஜெய் ஹோ.... ஜெயிச்சோமுங்கோ....’