நீங்களும் தயாரா?
தினமும் இரவு 8 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது என் வழக்கம். அப்படிதான் அந்த சனிக்கிழமையும் மக்கள் செய்தியைப் பார்த்து கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளை வந்தது. கைவிரல் எல்லோரையும்போல் ரிமோட்டுக்கு சென்று சேனலை மாற்றியது. சேனல் மாறிக் கொண்டே வந்தது.
மெகா டிவியில் வந்து நின்றது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசுகிறார்? என்று ஆவலுடன் பார்த்தேன் மெகா டிவியை.
தான் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களின் பிறந்த, வளர்ந்த , உருவானதைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்ததும் அங்கு அமர்ந்திருக்கும் இசைக்குழுவினரால் அந்தப் பாடல் பாடப்படும்.
எம்.எஸ்.வி.யைப் பேட்டி எடுப்பவர் ஆதவன். ‘யார்?’ என்று கேட்பீர்கள். ‘கோலங்கள்’ தொடரில் தோழர் பாலகிருஷ்ணனாக வருபவர் (பார்த்திருப்பீர்களா!).
சில பாடல்கள் பாடும்போது, பாடிய முடிக்கும்போது ஆதவன் உணர்ச்சிவசப்பட்டு அழுதே விடுகிறார். எம்.எஸ்.வி., கண்ணதாசனைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்படுகிறார் கண்ணீர் சிந்துகிறார். கர்சீப்புகள் நனைகின்றன. பார்க்கும் சிலருக்கும்தான்.
மனதுக்கு அமைதியான, ஆறுதலான, மென்மையான, நிறைவான, மகிழ்வான, சோகமான இசையை கேட்பதற்கு நீங்கள் தயாரா?
‘மெகா டிவி’யில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கும் ‘என்றும் எம்எஸ்வி’ என்ற இந்த நிகழ்ச்சியைக் கடந்த சில வாரங்களாக பார்க்கும் நான், மெய் மறந்தேன் என்றே சொல்லலாம். நீங்களும் தயாரா?