செவ்வாய், மார்ச் 24, 2009

ஐ.பி.எல்.

1 கருத்துகள்
தேர்தல் Vs ஐ.பி.எல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் நடத்தாமல் வெளிநாடுகளில் நடத்துவதற்கு சச்சின், யுவராஜ், மோடி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் நடத்துவதால் என்ன பயன்?

வெளிநாடுகளில் நடத்துவதால் இளம்வீரர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடு களில் மைதானங்களிலும் விளையாடுவதால் நல்ல அனுபவம் கிடைக்கும் அதனால் வெளிநாடுகளில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது என்பது தவறில்லை. இளம் வீரர்களுக்கு நன்மைதான் என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் ஒருவர்.

இன்றைய ‘தினமணி’ நாளிதழில் இதைப் பற்றி ‘தேசமா? லாபமா?’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளிவந்துள்ளது. அருமையான அந்தத் தலையங்கம் உங்களுக்காக...

ஐ.பி.எல். நடத்தும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்காக, ஏலத்தில் விளையாட்டு வீரர்கள் விலை கோரப்படுவது குறித்து கருத்து மாறுபாடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது, ஐ.பி.எல். மேற்கொள்ளும் முடிவுகளைப் பார்த்தால் அது, ‘இந்தியன் பிரீமியர் லீக்’ என்ற பெயருக்கே பொருத்தம் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டில் நடத்தினால், அதனை எப்படி ஐ.பி.எல். என அழைப்பது பொருத்தமாக இருக்க முடியும்?

பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் எங்களால் போதுமான பாதுகாப்பு அளிக்க முடியாது; உங்கள் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசு சொல்வதில் நியாயம் இருக்கவே செய்கிறது.

லாகூரில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகுதான், இந்திய அரசு இத்தகைய தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியதாயிற்று என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட இருப்பவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். எந்த நாட்டு வீரர் மீதும் தீவிரவாதிகள் குறி வைப்பார்கள். எப்படி நிகழும் என்பதை யாரும் முன்னதாகவே தீர்மானிக்க முடியாது. யாரை வேண்டுமானாலும் தாக்குவார்கள். அப்படியொரு தாக்குதல் நிகழுமானால், தற்போது பாகிஸ்தானைப் போலவே, இந்திய அரசும் உலக நாடுகளின் முன்பாகத் தலைகுனிந்து நிற்க வேண்டியதாகிவிடும். இதற்கு அச்சப்பட்டுத்தான், தேர்தல் நேரத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்க இயலாது என்று இந்திய அரசு கூறி வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாங்களே செய்துகொள்ள முடியுமா என்பதையும் ஐ.பி.எல். யோசிக்கத் தயங்கவில்லை. குண்டு துளைக்காத 200 கார்களை வாங்குவதற்கு முயற்சி செய்யும் அளவுக்கு அவர்களது திட்டங்கள் அமைந்தன.

திட்டமிட்டபடி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடக்க வேண்டும் என்பதில் ஐ.பி.எல். குறியாக இருந்தது. பிரதமரையும் நேரில் சென்று பேசிப் பார்த்தார்கள். எல்லா முயற்சிகளும் எடுபடாத நிலையில், தேதிகளை மாற்றுவதில் விருப்பமின்றிச் செயல்பட்டு வந்தார்கள். தற்போது, இந்திய அரசு மிகத் தெளிவாக, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில், போட்டிகளை வெளிநாட்டில்-ஆப்பிரிக்கா அல்லது இங்கிலாந்தில் நடத்துவது என்று தீர்மானித்துள்ளனர்.

நம் நாட்டில் 15-வது மக்களவைக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். பொதுத் தேர்வுகள்கூட இதைக் கருத்தில் கொண்டு முன்னதாகவே நடத்தப்பட்டன. இப்படியிருக்கையில், தேர்தலைப் பற்றிய எண்ணமே இல்லாமல், தன்னிச்சையாக விளையாட்டுப் போட்டிகளுக்கான தேதிகளை அறிவித்துவிட்டு, ஓர் அரசாங்கம் அதற்கேற்ப தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது எந்த வகையிலாவது பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துவதோ எந்த வகையிலும் நியாயமில்லை.

இந்த அளவுக்கு இந்திய அரசிடம் ஐ.பி.எல். எதிர்பார்க்கக் காரணம், ஐ.பி.எல். நிர்வாகத்தினர் அரசியல் தலைவர்களிடம் கொண்டுள்ள நெருக்கம் தந்த தைரியம் என்பதைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்?

இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய போட்டிகளை வெளிநாட்டில் நடத்துவோம் என்று தீர்மானிப்பார்கள் என்றால், அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் மதிக்கவில்லை என்பதுதான் அதற்குப் பொருள். அவர்களுக்கு இந்தப் போட்டியை எங்கு நடத்தினாலும், அதற்கான தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் கொள்ளை லாபம் கிடைத்துவிடும்.

இந்த கிரிக்கெட் போட்டிகள் இந்திய ரசிகர்களுக்காக அல்ல என்றால், தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் பணத்துக்காக மட்டும்தான் என்றால், அதை வெளிநாட்டில் நடத்தினால் என்ன, எந்த வனாந்திரத்தில் நடத்தினால்தான் என்ன?

ஐ.பி.எல்-க்கு இந்திய தேசம் பெரிதல்ல. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதல்ல. லாபம் மட்டுமே பெரிது எனும்போது, இப்படி ஒரு போட்டியே தேவைதானா? இந்தப் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பையே தடை செய்தால்தான் என்ன?

அப்படி எதுவும் நடக்காது. புரள இருப்பது பல கோடிகள். விளையாட்டைப் பின்னால் இருந்து இயக்குவது சூதாட்டம். இதற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது நமது அரசியல் தலைவர்களும், கட்சிகளும். அவர்கள் தேசமா, லாபமா என்று பூவா தலையா போட்டா பார்க்கப் போகிறார்கள்...

(நன்றி: தினமணி)