அடையாளம் கண்டு கொள்ளுங்கள்
ஜெயலலிதாவை கலைஞர் குறை கூறுவதும்,
கலைஞர் ஜெயலலிதாவை குறை கூறுவதும்
என்றும் மாறிவிடப் போவதில்லை. தொடர்ந்துகொண்டேதான் இருக்கப் போகிறது? இருக்கும்.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது கலைஞருடன் கைகோர்த்து, அதிமுகவையும், ஜெயலலிதாவையும் பாமக ராமதாஸும், இடது கம்யூனிஸ்ட் தா. பாண்டியனும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கொண்டு கலைஞரை மானவாரியாக திட்டி தீர்க்கின்றனர். இவர்களை தான் நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவர்கள் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, தேர்தல் பச்சோந்திகள்.
தேர்தலுக்கு தேர்தல் தங்களது நிறத்தை, கூட்டணியை மாற்றிக் கொள்(ல்)வார்கள். கேட்டால் எங்களது கொள்கையிலிருந்து நாங்கள் மாறவில்லை என்பார்கள். இவர்களது உண்மையான கொள்கை என்பதே தேர்தலில் வெற்றி பெறும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வதுதான். ஏனென்றால் இவர்களெல்லாம் தனித்து நின்றால் டெபாசிட் இழந்து தோற்றுவிடுவார்கள். அந்த பயம்தான் காரணம். இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டலாம்.
தா. பாண்டியன் திமுகவுடன் சென்ற தேர்தலில் கூட்டணி வைத்துக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஏன் தெரியுமா? அவர் தனியாகக் கட்சியை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஏற்கெனவே குடை பிடித்தவர்தான். அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்னை பற்றி இவரும் சரி, அம்மையார் ஜெயலலிதாவும் சரி பேசியதே இல்லை. இப்போது இருவருமே வாய்கிழிய பேசுகிறார்கள்.
ராமதாஸ் தமிழக அரசும், மத்திய அரசும் இலங்கைப் பிரச்னையில் ஒன்றும் செய்யவில்லை என்று ஆறு மாதங்களுக்கு மேலாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார். கேட்டால் திமுகவை குறைகூறுகிறார். இவரும் தானே மத்திய அரசில் பங்கு வகித்தார். ஆனால் இவருடைய கட்சி அமைச்சர்கள் இலங்கைப் பிரச்னையில் எதுவும் செய்ய மாட்டார்களாம். திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம். இது எந்தவிதத்தில் நியாயம்? தனது மகனுக்காக அதிமுகவிடம் புதுவை ராஜ்யசபா பதவி வாங்க நினைத்தார் ராமதாஸ். ஏமாந்தார். அதன்விளைவு திமுக பக்கம் ஓடிவந்தார். கலைஞர் சொன்னதை செய்தார். மகிழ்ந்தார் ராமதாஸ். மகனுக்கு அமைச்சர் பதவியும் வாங்கிக்கொண்டார். இப்போது இவரும் இவரது மகனும் ராஜ்யசபா பதவி திமுக கொடுத்ததல்ல என்று பேசுகிறார்கள். கலைஞரும் ஜெயலலிதாவைபோல் ஏமாற்றியிருக்க வேண்டும். இதுதவிர கம்யூனிஸ்ட் கிடைக்க வேண்டிய பதவியையும் இவர் கேட்டார். யாருக்காக தெரியுமா? தனது உறவினரான காடுவெட்டி குருவுக்கு. காடுவெட்டி குரு இவரெல்லாம் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்? மரம் வெட்டவா போகிறார்? தமிழைப் பற்றி பேசும் இவர், தொடர்ந்து தமிழில் திக்காமல் பேசச் சொல்லுங்கள். இவருடைய மகனையும் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். சரி போகட்டும் விடுங்கள். இவரது கூட்டணித் தலைவியையாவது எழுதி வைக்காமல் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். முடியாது.
நன்கு பேசத் தெரிந்த ஒரே ஒருவர் வைகோதான். அவரையும் இவர்கள் அசிங்கப்படுத்தி, அவமதித்து அடக்கிவிட்டனர். பாவம் வைகோ. சிங்கம் போல் கர்ஜிப்பவர் இன்று பூனை போல் சத்தமிடுகிறார்.
கலைஞர் ஜெயிக்கட்டும், ஜெயலலிதாவும் ஜெயிக்கட்டும் , ஏன் விஜயகாந்த் கூட ஜெயிக்கட்டும். ஆனால் ராமதாஸ், தா. பாண்டியன் போன்றோர்கள் ஜெயிக்கலாமா? பச்சோந்திகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.