திங்கள், ஏப்ரல் 06, 2009

திருடர்கள் ஜாக்கிரதை

0 கருத்துகள்
எச்சரிக்கையாக இருப்போம்

‘தனியாக வீட்டில் இருந்த பெண்ணிடம் துணிகர கொள்ளை’ 

அடிக்கடி நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நாமும் அதை ஒற்றைவரிச் செய்தியாக மேம்போக்காகப் படித்துவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். உண்மையில் இந்தக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். 

சரி. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களைப் பாது காத்துக் கொள்வது எப்படி?  கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

வீட்டில் இருக்கும் பெண்கள் தனியாக இருக்கும்போது வீட்டின் கதவைகளை நன்றாக பூட்டிவிட்டு  பின்னர் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு வீட்டின் இரண்டு கதவுகளையும் விரிய திறந்து வைத்துக்கொண்டு, டிவியின் சத்தத்தையும் அதிகமாக வைத்துக்கொண்டு, சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். அப்படியிருந்தால் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று எப்படித் தெரியும்?

சில வருடங்களுக்கு முன்புகூட, ஒரு தெருவில் இருப்பவர்களில் இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசி வரை இருக்கும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பேசிப் பழகுவார்கள். ஒன்றுக்குள் ஒன்றாக சொந்தங்கள் போல் உறவாடுவார்கள். நல்லது, கெட்டது அனைத்திலும் பங்கேற்பார்கள். ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. நம்மை விழுங்கும் நகர வாழ்வின் இயந்திரத்தனம் இந்த உறவுகளை எல்லாம் ஒரு அடி தள்ளியே வைக்க நம்மை நிர்பந்திக்கிறது. குறிப்பாக ப்ளாட்டுகளில் வசிப்பவர்கள் இப்போதெல்லாம் தனித் தீவாக ஆகிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

சென்னை நகரில் ப்ளாட்டுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ப்ளாட்டுக்குள் நுழைந்ததும் இறுக்கிச் சாத்தியக் கதவோடு அவர்கள் உலகம் சுருங்கிப் போய்விடுகிறது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது தெரியாது. இது தவறுதானே? அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பேசுங்கள். நம் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்னை என்றால் உடனே அவர்கள் ஓடி  வருவார்கள். நாம் வெளியூர் செல்லும்போது அவர்கள் நம் வீட்டைப் பார்த்துக் கொள்வார்கள். 

பெரும்பாலான ப்ளாட்டுகளில் காவலில் இருக்கும் காவலாளியை பால் கார்டு, டெலிபோன் பில், எலெக்ட்ரிக் பில் கட்ட அனுப்புவது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. காவலாளியை வெளியில் அனுப்புவது என்பது தவறான செயலாகும். இதனால் காவலாளி ஒழுங்காக வேலைக்கு செய்யாமல் இருக்க நாமே வாய்ப்பை தருகிறோம். அதுமட்டுமல்லமல் காவலாளி இல்லாத சமயம், சமூக விரோதிகள் ப்ளாட்டுக்குள் நுழையவும் கூடும். 

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடமும், முதியோர்களிடமும் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும், தற்காப்பு நடிவடிக்கைகளில் ஈடுபடவும், பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்கவேண்டுமென்பதற்காகவும் சென்னை மாநகரக் காவல் துறையும் துண்டு பிரசுரங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த பிரசுரங்கள் போலீஸ் நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

· வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் வீட்டின் முன்புற கதவில் கண்டிப்பாக ‘லென்ஸ்’ பொருத்த வேண்டும். மரகதவுகளுக்கு முன்பு கிரில் கதவுகளை பொருத்தியிருந்தால் நல்லது.

· தனியாக இருக்கும் பெண்கள் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு வீட்டு வேலைகளை செய்வது நல்லது.

· பெண்கள் ஷாப்பிங் மற்றும் மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்களுடன் பழகினால் அவர்களை உடனே வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம். அதே நேரத்தில் புதிய நண்பர்களிடம் தாங்கள் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும், தங்கள் வீட்டு ஆண்கள் வெளியூர் சென்றிருக்கும் விஷயத்தையும் கண்டிப்பாக கூறக்கூடாது.

· வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை அவசியம் கற்று வைத்திருக்க வேண்டும்.

· வீடுகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்தால் அவர்களின் முகத்தில் மிளகாய் பொடி போன்றவற்றை தூவியும் தப்பிக்கலாம்.

· முதியவர்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை வைப்பதை தவிர்த்து, வங்கி லாக்கரில் வைக்க வேண்டும்.

· அடுக்குமாடி மற்றும் தனி வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்புடன் பழக்கம் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஆபத்து நேரங்களில் அவர்கள் உதவியாக இருப்பார்கள்.

· ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்களை வாங்குபவர்கள் போன்ற நபர்கள் வந்தால் அவர்களை எக்காரணத்தை கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது.

· இதேபோல வீட்டிற்கு வழக்கமாக வரும் பால்காரர், பேப்பர் போடுபவர்கள், காய்கறி விற்பவர்கள், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், சமையல் கியாஸ் சப்ளை செய்பவர்கள், சலவை செய்பவர்கள் போன்றவர்களின் பெயர் விலாசத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவர்களையும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

· அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக காவலாளிகளை நியமிக்க வேண்டும். காவலாளிகள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை பார்க்க வருபவர்களின் பெயரையும் மற்றும் முகவரியையும் எழுத வேண்டும். இதற்காக பார்வையாளர் குறிப்பேடு ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

· வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களும், முதியோர்களும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் தொலைபேசி எண், தீயணைப்புத்துறை தொலைபேசி எண், அவசர போலீஸ் தொலைபேசி எண் ஆகியவற்றை எளிதில் பார்ப்பதற்கு வசதியாக குறித்து வைத்திருக்க வேண்டும்.

இவையனைத்தையும் நாம் நம் நினைவில் வைத்துக்கொண்டால் போதும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

(27.03.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)