வெள்ளி, டிசம்பர் 31, 2010

எந்தக் கவிப் பாடினாலும்

1 கருத்துகள்
நீண்ட நாள் ஆகிவிட்டது பிளாக் எழுதி. இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதிக்குள் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

டிசம்பர் 31. மதியம் 3.00 மணிக்கு.

டிசம்பர் மாதம் வந்தாலே இசை விழாக்கள்தான். நினைவுக்கு அந்த இசையைப் பற்றி ஏதாவது எழுதிவிடலாமா? அதன் விளைவுதான் இப்பதிவு.
மதுரை என். சோமசுந்தரம் என்கிற சோமு என்று சொன்னால் இப்போது எத்தனைப் பேருக்குத் தெரியுமோ? தெரியவில்லை. ‘மருதமலை மாமணியே முருகைய்யா’ என்ற பாடலைச் சொல்லி அவர்தான் மதுரை சோமு என்று சொன்னால், ‘ஒ... ’ அவரா என்பார்கள். அந்தப் பாடலைக் கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம்.

அவர் பாடிய மற்றொருப் பாடல்தான்‘எந்தக் கவிப் பாடினாலும்’. இந்தப் பாடலை தற்போது பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணாசாய்ராம் மட்டுமே இப்போது பாடுகிறார். ஆனாலும் மதுரை சோமு குரலில் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, அருணாசாய்ராம் குரலில் பாடலைக் கேட்கும்போது நிறைய வித்தியாசங்களை அறிந்தேன்.

மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது மனதை ஏதோ நெருடுவதை உணந்தேன்.

அருணா சாய்ராம் பாடலிலும் மனம் உருகினாலும், அவர் வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுவதால் கேட்பதற்கு கொஞ்சம் சிரமமாய் இருக்கிறது.

உதாரணமாக சோதனையோ என்ற வார்த்தையை, ஸோ..... தனை.....யா... என்றும்,

முருகா என்பதை முருகா... முருகா... என்றும்

அன்னையும் அறிய... வில்லை

இதுபோன்று சில வார்த்தைகளை உடைத்து உடைத்து பாடுகிறார் அருணா சாய்ராம். எனவே நெருடல் ஏற்படுகிறது என்று எண்ணுகிறேன்.
மதுரை சோமு பாடியதைக் கேட்கும்போது இதுபோன்ற எவ்விதத் தவறும் எனக்கு தெரியவில்லை.

இதோ உங்களுக்காக அவர்கள் பாடிய பாடல். கேளுங்கள்.

மதுரை என். சோமு
அருணா சாய்ராம்இரண்டு பாட்டையும் கேளுங்கள். மகிழுங்கள்.

புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - நேர்மையான தலையங்கம்

0 கருத்துகள்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி பலர் பலவிதமாய் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில் இன்றைய தினமணியில் (23.06.2010) தலையங்கத்தைப் படித்தேன். அருமையாக இருந்தது. அத்தலையங்கம் உங்களுக்காக.


தலையங்கம்: ஊர் கூடித் தமிழ்த் தேர்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் இருந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி,​​ கோவையில் இன்று முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு காண இருக்கிறோம்.

உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்தவுடன் 'உலகளாவிய உவகை' என்று தலையங்கம் தீட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தோம்.​ அறிவிப்பே உலகளாவிய உவகையைத் தருமானால்,​​ மாநாடு எத்தகைய இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்க வேண்டுமா,​​ என்ன?

ஈழத் தமிழர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாநாடு தேவைதானா என்றும்,​​ அரசியல் ரீதியாகத் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சியால் கூட்டப்படும் மாநாடுதானே இது என்றும் கேள்விகளை எழுப்பி எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

வீட்டில் ஒரு திருஷ்டி விழுந்துவிட்டது என்பதற்காக,​​ குழந்தை பிறந்தால் பெயரிடாமலா இருந்து விடுகிறோம்?​ இப்படி ஒரு மாநாடு கூட்டித் தமிழர்கள் ஓரணியில் நிற்பதன் மூலம்தானே உலகுக்குத் தமிழர்தம் ஒற்றுமை உணர்வையும்,​​ பலத்தையும் எடுத்துரைக்க முடியும்!

கடந்த 20 ஆண்டுகளாக,​​ குறிப்பாக,​​ பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் முன்னுரிமை பெற்றது முதல்,​​ தமிழினுடைய முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.​ எல்லா தளங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,​​ இல்லையென்றால்,​​ பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

படித்தாலும், ​​ ஏன்,​​ பேசினாலும்கூட மரியாதை இல்லை என்கிற வசை தமிழுக்கு எய்திடலாமோ?​ நடைமுறையில் அதுதானே உண்மை நிலை.​ தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே.​ வீடுகளில் பெற்றோர் தங்கள் செல்வங்கள் ஆங்கிலத்தில் மழலைமொழி பேசுவதைக் கேட்டு குதூகலிக்க விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு ஆத்திசூடியும்,​​ கொன்றைவேந்தனும்,​​ திருக்குறளும்,​​ நாலடியாரும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டதே...

தமிழனுக்கு அடிக்கடி தமிழின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.​ அதுமட்டுமல்ல.​ பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யக் களம் ஒதுக்கித் தரவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.​ உலகளாவிய அளவில் இதுபோலத் தமிழ் மாநாடு கூட்டப்பட்டால்,​​ சாமானியனுக்குத் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த மாதிரியும் இருக்கும்.​ தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வழிகோலுவதால்,​​ மொழியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதாகவும் இருக்கும்.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேளையில்,​​ அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழ்ச் சிந்தனை மட்டுமே பரவிக் கிடக்கும் சூழலில்,​​ தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

நமக்குள்ளே,​​ உற்றார் உறவினரோடு,​​ நண்பர்களோடு பேசும்போது இயன்றவரை தமிழில் மட்டுமே பேசுவது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்களேன்.​ நம் வீடுகளில் குழந்தைகள் 'டாடி,​​ மம்மி' என்று பெற்றோரை அழைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்.

அரசியல் கலப்பு என்பது இன்றைய இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாதது.​ ஆனால்,​​ என்ன அதிசயம்?...​ செம்மொழி மாநாட்டுக்காக விழாக் கோலம் பூண்டிருக்கும் கோவை மாநகரில் பார்வைபடும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறப்பது மாநாட்டின் இலச்சினை தாங்கிய வண்ணக் கொடிகளே தவிர,​​ பெயருக்குக் கூட ஒரு கட்சிக் கொடி கிடையாது.​ ​

குறைந்தபட்சம் எங்காவது முதல்வரின் படமோ,​​ துணை முதல்வரின் படமோ ​ காணப்படுகிறதா என்றால்,​​ ஊஹும்.​ ஆளும் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டியில் வந்து குவிந்துவிடுவர் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

ஆய்வரங்க நிகழ்ச்சியில்,​​ அமைச்சர் பெருமக்களும்,​​ ஆளும் கட்சிப் பிரமுகர்களும் ​ முன்னுரிமை பெற்றிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

எள்ளளவும் அரசியல் கலவாத,​​ தரத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுகின்றன.​ சமயம் புறக்கணிக்கப்படும் என்று பயந்தவர்கள் இப்போது அரசியல் முற்றிலுமாக ஆய்வரங்கங்களில் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

நாங்கள் முறையாக அழைக்கப்படவில்லை என்று சிலருக்கு மனக்குமுறல்.​ எங்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்று இன்னும் சிலரின் முணுமுணுப்புகள்.​ எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம்.​ தமிழின் பெயரால் நடத்தப்படும் ஒரு கோலாகலத் திருவிழாவில் நமது பங்களிப்பு என்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டியவர்கள்,​​ மரியாதையை எதிர்பார்த்துக் காத்திருப்பது அவர்களது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.

இத்தனை பண விரயத்தில் எதற்காக இப்படி ஒரு செம்மொழி மாநாடு என்று கேட்பவர்கள்,​​ தமிழகத்தின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதே அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும்தான் என்ன என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கூட்டப்படும் இந்த வேளையில்,​​ தமிழின் சிறப்பையும்,​​ தமிழர் தம் மேன்மையையும் நமக்கு நாமே மீண்டும் உயர்த்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.​ பட்டி தொட்டியெல்லாம்,​​ தமிழ்,​​ தமிழ் மாநாடு என்கிற முழக்கத்தால்,​​ உறங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும் என்று நம்பலாம்.

மனமாச்சரியங்களைக் களைந்து,​​ குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது.​ குறுகிய அரசியல் கண்ணோட்டத்தினால்,​​ தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த கோலாகல விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது,​​ சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தும் முயற்சியாகத்தான் முடியும்!

இதற்கு முன்னால் நடந்த மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களின் மனசாட்சி சொல்லும் இதுபோல அரசியல் கலவாத மாநாடு நடந்ததில்லை என்று.​ அதைச் சாதித்துக் காட்டிய முதல்வரின் சாதனைக்குத் தலைவணங்குகிறோம்!

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றும்,​​ 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்றும் முழங்கிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் கூட்டப்படும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!

நன்றி - தினமணி

வியாழன், ஜூன் 17, 2010

புறக்கணிப்போம்.... இறுதிப் போட்டியை

4 கருத்துகள்

இதைப் பற்றி இனியும் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். எப்பொழுது தேன் போன்ற குரலினால் என்னைப் போன்றவர்களை மயக்க வைத்த ஸ்ரீநிஷாவின் திறமையை மதிக்காமல், வெளியேற்றிவிட்டு, மலையாளிகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

இன்று மாலை 6 மணிக்கு அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விஜய் டிவியில் நேரடியாக ஒளிப்பரப்ப படுகிறதாம். ஏற்கெனவே முடிவு செய்துபின் இப்படியொரு கண்துடைப்பு இறுதிப்போட்டி எதற்கு?

இறுதிப் போட்டியில் பாடும் குழந்தைகளின் திறமையை நான் குறை கூறவில்லை. ஆனாலும் அவர்களையெல்லாம் விட ஒருபடி மேலே ஸ்ரீநிஷா பாடுவதாக எண்ணுகிறேன். அனைத்துவிதமான பாடல்களும் அந்தச் சின்னக் குரலில் அபாரமாக வெளிப்படுத்தி லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தாள். இதுப்பற்றி அண்ணாச்சி முகில் ...

கே.வி. மகாதேவன், எம்எஸ்வி., இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்றவர்கள் இசையமைத்த அத்தனை வகையான பாடல்களையும் பாடத் திறமை படைத்த ஒரே சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாதான்.

அப்படிப்பட்ட ஸ்ரீநிஷா பங்கேற்காத விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதிப் போட்டியை நான் பார்க்காமல் புறக்கணிக்கப்போகிறேன்.

அதுபோல் ஸ்ரீநிஷாவின் ரசிகர்கள் அத்துணை பேரும் புறக்கணிப்போம்.

உண்மையான திறமையை மதிக்காத, ஏற்கெனவே வெற்றியாளரை முடிவு செய்த அந்த இறுதிப் போட்டியை புறக்கணிப்போம்.

செவ்வாய், மே 25, 2010

சுசிவாஜா

1 கருத்துகள்

தலைப்பைப் பார்த்து என்னை திட்டாதீங்க.

சுசீலா, சித்ரா, வாணி ஜெயராம், ஜானகி போல பிரபலப் பாடகி நம் தமிழ் உலகிற்கு வேண்டுமல்லவா? சின்ன சுசீலா, சின்ன ஜானகி, சின்ன சித்ரா என்று பலரையும் தன்னுள் வைத்திருக்கும் ஒரு சிறுமிதான் ஸ்ரீநிஷா.

இவள் யார்? எந்த ஊர்? என்ன படிக்கிறாள்? பெற்றவர்கள் யார்? என்று இவளைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனாலும் ஸ்ரீநிஷாவைத் தெரியும். நல்ல தமிழ் உச்சரிப்பு, ஸ்ருதி, தாளம், பாவம் என்று ஒரு பாட்டு என்னென்ன வேண்டுமோ? அத்தனை இவளிடம் இருக்கிறது. இவளைப் பற்றி நான் அறிந்துகொண்டதே ஒரு கதைதான்.

விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 2’ நிகழ்ச்சி தொடங்கியபோது ‘ஆரம்பிச்சிட்டாங்கய்யா...’ என்று சொன்னவர்களில் நானும் ஒருவன்.

ஒருநாள், ‘அண்ணாச்சி, அல்கா என்ற பெண் பாடுவதை கேட்டீங்களா?’ என்று முகில் அண்ணாச்சிதான் என்னைப் பார்க்க வைத்தார். அதுவரை விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 2’ நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.

அல்காவின் குரலைக் கேட்பதற்காக பார்க்க ஆரம்பித்தேன். அல்கா நன்றாகப் பாடினாலும், அன்றைய நிகழ்ச்சியில் என்னை வெகுவாக கவர்ந்தது. ஸ்ரீநிஷா (SSJ 16) என்ற சிறுமியின் குரல்தான். இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகி பாடிய பாடலைப் பாடினாள். அசந்துபோனேன். ஸ்ரீநிஷா (SSJ 16)வுக்காக தொடர்ந்து பார்த்தேன். ஒவ்வொரு வாரமும் தன் குரலினால் என்னை அவளுடைய தீவிர ரசிகனாகிவிட்டாள். பி. சுசீலா, எஸ். ஜானகி பாடிய மெலடி பாடல்களைத்தான் அதிகம் பாடுவாள் ஸ்ரீநிஷா (SSJ 16).

வேற்று மொழிப் பாடல் பாட வேண்டிய நிகழ்ச்சியில் ஆர்.டி. பர்மன் இசையில் ஆஷா ஃபோன்ஸ்லே பாடிய காலத்தால் அழிக்க முடியாத பாடலான ‘தம் மேரே தம்’ பாடலை அசாதாரணமாகப் பாடினாள். இந்தச் சின்ன வயதில் இந்தப் பாடலை இவ்வளவு அழகாக பாட முடியுமா என்று? ஆச்சரியப்பட்டேன். அடுத்தவாரம் கே.பி. சுந்தராம்பாள் குரலில் பாடி அசத்தினாள்.

ஸ்ரீநிஷா (SSJ 16) வைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு அழகாக அந்தச் சின்னப் பெண் பாடுகிறாள். அவளுடைய திறமையைப் பற்றி மேலும் அறிய முகில் தன்னுடைய இணையத் தளத்தில் மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்போது வைடுகாட் ரவுண்ட் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் எஸ்எம்எஸ் மற்றும் இணையத் தளம் வழியாக போடும் ஓட்டுகளில் அதிகம் ஓட்டுக்களை வாங்கும் குழந்தை தான் இறுதிச் சுற்றுக்குச் செல்ல முடியும் என்பது போட்டியின் விதி.

எனவே ஸ்ரீநிஷா (SSJ 16) வின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதைப் படிப்பவர்கள் ஸ்ரீநிஷாவுக்கு ஓட்டளித்து அவளை இறுதிச் சுற்றில் பாட வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் ஒட்டளிக்க வேண்டிய இணையத் தளம் http://vijay.indya.com/jss09/vote/vote.asp

SMS அனுப்ப வேண்டிய முறை SSJ 16 to 57827.

ஸ்ரீநிஷா (SSJ 16) பாடிய பாடல்கள் இதோ சில உங்களுக்காக....

http://www.youtube.com/watch?v=1Fxk136dkh8

http://www.youtube.com/watch?v=jpCESvo8sIc&feature=related

http://www.youtube.com/watch?v=9QFJJgWc85E

http://www.youtube.com/watch?v=N2OFTqYWobY

http://www.youtube.com/watch?v=N2OFTqYWobY

http://www.youtube.com/watch?v=tkgQhUQmWs0&feature=related

வியாழன், மே 20, 2010

சூப்பர் ஜோடிங்கோ........

1 கருத்துகள்

சென்னையை ஒருநாள் முழுவதும் கும்மிருட்டாக்கிய சூப்பர் ஜோடி

லைலாவும்.... ஆற்காட்டாரும்

லைலா (புயல்)வும் ஆற்காட்டாரும் (மின்சாரம்)

எப்படி?

சனி, ஏப்ரல் 10, 2010

குழந்தைகளுக்கு முதலிடம் தாருங்கள்...

3 கருத்துகள்
எத்தனையோ விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் போயிருப்போம். குறிப்பாகக் குழந்தைகள் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குழந்தையின் நிலையிலிருந்து, குழந்தைக்கேயான இயல்பான சிக்கல்களை நாம் பார்த்திருக்கிறோமா என்பதை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இந்த விஷயத்துக்குள் ஆழமாகப் போவதற்கு முன்னால் ஒரு சிறு சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.

சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆடிட்டோரியங்களில் ஒன்று அது. அங்கே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவில் பல பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்தன. விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். இரண்டரை மணிக்கே பள்ளி மாணவர்கள் எல்லாம் வந்திருந்து வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். வந்திருந்த மாணவர்களில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் நிறையபேர் இருந்தார்கள். கூடவே, அவர்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். என்னென்னவோ காரணங்களால், மூன்றரை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்பாக, மேடையில் பேசப் போகிறோமே, பாடப் போகிறோமே, ஆடப் போகிறோமே என்கிற பயம் கொஞ்சம்கூட இல்லாமல் அந்த மாணவர்கள், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் அம்மாவின் மடியைவிட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தார்கள். சில குழந்தைகள் பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மூன்றரை மணிக்கு அறிவிப்பாளர் வந்தார். முதல் நிகழ்ச்சியாக குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடைபெறும், அதன்பின் முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள், இறுதியாக பாராட்டு விழாவும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று சொன்னார். அவர் கூறியபடியே குழந்தைகளின் கலைநிகழ்ச்சி முதலில் தொடங்கியது. அது முடிந்ததும் குழந்தைகள் மேடைக்கு அருகிலேயே அமர வைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு, முக்கிய விருந்தினர்களும் விழா அமைப்பாளர்களும் மாறி மாறிப் பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்குத் தங்கள் பேச்சைக் கேட்க எதிரே ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்கிறதே என்கிற உற்சாகம். குழந்தைகளால் எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல், ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி பேச்சில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்துகொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் வந்திருந்தவர்களுக்கு ஒரு கப் டீ கூட கொடுக்கவில்லை நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

எல்லோரும் பேசி முடித்தபோது மணி ஐந்தரை. அதற்குப் பிறகு முக்கிய விருந்தினர்களை அமைப்பாளர்கள் பாராட்டி, விருதுகளும் பரிசுகளும் கொடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஒரு குழந்தையின் தந்தை விழா அறிவிப்பாளரிடம் போனார்.

‘சார், குழந்தைகளெல்லாம் ஒரு மணிக்கு சாப்பிட்டுட்டு வந்தாங்க. இப்போ மணி அஞ்சரைக்கும் மேல ஆகுது. முதல்ல அவங்களுக்கு பரிசைக் குடுத்து அனுப்புங்க. அதுக்கப்புறம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துங்களேன்!’ என்று சொல்லிப் பார்த்தார்.

‘அதெல்லாம் முடியாது சார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்சபிறகுதான் குடுக்க முடியும். இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா, உங்க குழந்தையைக் கூட்டிட்டுப் போங்க!’ என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார். எங்கே, எல்லாக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் போய்விட்டால், கூட்டம் குறைந்துவிடுமே என்கிற பயம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு.

அறிவிப்பாளரிடம் பேசியவருக்குக் கோபம் வந்துவிட்டது. சட்டென்று தன் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போனார். அவரைத் தொடர்ந்து நிறையபேர், தங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போக ஆரம்பித்தார்கள்.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. பொதுவாகவே கலை நிகழ்ச்சி என்றாலே எல்லோரும் ரசிக்கிற ஒன்று என்று அர்த்தம். அதிலும் குழந்தைகள் பங்கேற்கிற கலை நிகழ்ச்சி என்றால் சொல்லவே வேண்டாம். பங்கேற்கும் குழந்தைகளின் குடும்பத்திலுள்ள எல்லோருமே ஆர்வத்தோடு நிகழ்ச்சியைக் காண வந்துவிடுவார்கள். சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் மட்டுமல்ல; எந்தக் குழந்தை நடனம் ஆடினாலும், யோகாசனம் செய்தாலும், ஜிம்னாடிக்ஸ் போன்ற கடினமான வித்தைகளை செய்து காட்டினாலும், பார்க்கிற ஒவ்வொருவருடைய கைகளும் தானாகக் கரவொலி எழுப்பும். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இப்படி குழந்தைகள் நடத்தப்படுவது தவறு என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்குக் காரணம், அவர்கள் நிகழ்ச்சி நன்றாக நடைபெறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, வருகிறவர்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

மாணவர்களோ, குழந்தைகளோ வந்து அமர்ந்த சிறிது நேரத்தில், அவர்களுக்கு பிஸ்கட், பழம் போன்றவற்றை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். இதற்கும் சேர்த்து, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டியது மிக அவசியம். அதே போல, குழந்தைகள் ஒவ்வொருவரும் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தவுடன், குளிர்பானமோ, அல்லது சூடான பானமோ தரவேண்டும். நிகழ்ச்சி நான்கு மணி நேரத்தையும் தாண்டிப் போகிறது என்றால் சிற்றுண்டி தரவேண்டும்.

இதன்மூலம் குழந்தைகளும் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அனுப்பும் பெற்றோர்களும் கவலையின்றி காத்திருப்பார்கள். அதே போல ஒரு பள்ளி, வெளி நிகழ்ச்சிகளுக்குப் பள்ளிக் குழந்தைகளை அனுப்பும்போது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சரியாக கவனிக்கிறார்களா என்று சோதிக்கவேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ‘உங்கள் குழந்தை இங்கே நடனமாடுகிறது‘ என்று சொல்லிவிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக சில பள்ளிகள் நினைக்கின்றன. அது தவறு.

குழந்தைகளின் திறமை வளர்ப்பது முக்கியம்தான். அதேசமயம் மணிக்கணக்காக, அவர்கள் காத்திருக்கும்போது, அந்தப் பிஞ்சு உள்ளங்கள் வாடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.


(29.03.2010 ல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

புதன், ஏப்ரல் 07, 2010

உதவி தேவை

0 கருத்துகள்

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு, அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம். அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்.

வெள்ளி, மார்ச் 19, 2010

மீண்டும் கலைஞருக்கு வெற்றி...

0 கருத்துகள்
எதிர்ப்பு என்றாலே கலைஞர் கருணாநிதிக்கு வெற்றி என்றாகிவிட்டது.

இன்று புதிய சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூடுகின்ற நேரம்.

பேரவைத் தலைவர் வந்ததும், வழக்கம் போல் திருக்குறளுடன் அவைத் தொடங்கியது. நிதி அறிக்கை நிதி அமைச்சர் அன்பழகன் வாசிக்க எழுந்தார்.

கூச்சல், சத்தம் வந்தது.

அதிமுக வினர் கருப்பு உடையில் வந்திருந்தார்கள்.

யாரையோ ராஜினாமா செய் ராஜினாமா செய் என்று முழக்கமிட்டார்கள்.

புதிய சட்டப்பேரவையில் முதல் நிகழ்ச்சியே இப்படி எதிர்ப்பாக அமைந்தது.

எத்தனையோ எதிர்ப்புகளை எல்லாம் மீறி வெற்றிக் கண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மீண்டும் இப்படியொரு வெற்றியைத் தந்துவிட்டார்கள் அதிமுகவினர்.

புதிய மன்றத்தில் செயலாற்ற பகையுணர்வை காட்டாமல் நட்புணர்வைக் காட்டி நாட்டுக்கு நல்லது செய்யும் உறுப்பினர்களை இனியாவது நாம் தேர்ந்தெடுக்க முயல்வோம்.

வியாழன், மார்ச் 04, 2010

‘ஓ’ போடுங்கள் நித்யாவுக்கு....

0 கருத்துகள்
நித்தியானந்தர் செய்தது தப்பு.

ரஞ்சிதா செய்தது தப்பு.

அந்த அசிங்கத்தை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது சன் நியூஸ் தப்பு.

அந்த அசிங்கத்தின் சிடியை நக்கீரன் விலைக்கு வேண்டுமா? என்று கேட்டது தப்பு.

அந்த வீடியோ காட்சிகளை மறுபடி மறுபடி பார்த்தது தப்பு.

அந்தக் காட்சி முழு வடிவை இணையத் தளத்தில் தேடியது தப்பு.

புகைப்படங்களை உற்று உற்று நோக்கியது தப்பு.

இணையத் தளத்தில் அன்றைய நாள் முழுதும் மற்ற வேலைகளை விட்டு, இதையே வேலையாகச் செய்துகொண்டிருந்து தப்பு.

சிடியைத் தேடி பர்மா பஜார் போன்ற இடங்களில் தேடி அலைந்தது தப்பு.

ஒரு தப்பிலிருந்து எத்தனையோ தப்புகள்.

தப்புகளில் நித்தியானந்தர் செய்தது பெரிய தப்புதான். இருந்தாலும் அவருக்கு ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் ‘ஓ’ போட வேண்டும். எதற்கு?

என்றும் இணையாத, என்றும் சேராத இரு துருவங்களாகவே இருந்து வந்த திராவிட கழகத்தையும் ஆர்எஸ்எஸ்., இந்து மக்கள் கட்சிகளையும் இந்த விஷயத்தில் கைகோர்க்க வைத்தது நல்ல விஷயம்தானே.

அதற்காகத்தான் ‘ஓ’ போட சொன்னேன்.