சனி, ஜூலை 11, 2009

என்ன கொடுமை சார்?

4 கருத்துகள்














கோபக்காரன்

ராபர்ட்.

அதிகாலையிலேயே எழுந்துவிடுவான்.

என்றும்போல அன்றும் எழுந்துவிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை. அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

உம்மென்று இருந்தான்.

கொஞ்சம் சத்தம்போட்டு பார்த்தான் அப்போதும் யாரும் அவனைக் கவனிக்கவில்லை. கோபம் அதிகமானது.

டட்... டட்... டட்...

பக்கத்திலிருந்த கதவைப் பிடித்து தள்ளினான். கதவு சத்தம் கேட்டும் யாரும் அவனைக் கவனிப்பதாக இல்லை. கோபம்
இன்னும் அதிகமானது.

கீழே கிடந்த கால்மிதியடியில் தன் கோபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தான்.

கால்மிதியடி அவனிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டது. கடைசியில் அதை துண்டு துண்டாக கிழித்தே விட்டான்.
அப்படியும் யாரும் கவனிக்காததால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா மணியை தற்செயலாகப் பார்த்தார். அவருக்கும் கோபம் வந்தது. ‘டேய்... டேய் என்னடா பண்ணுற ராஸ்கல். ஏய் மங்களம். முதல்ல இங்க வா. இங்க வந்து இவன முதல்ல கவனி அப்பதான் இவன் சும்மா இருப்பான். இல்லன்னா கத்திக்கிட்டேயிருப்பான். சீக்கிரம் வா.’

அப்பாவின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து அம்மா, ‘இதோ வந்துட்டேன். அவனுக்காகத்தான் தயார் பண்ணிட்டிருந்தேன். அதுக்குள்ளே அவனுக்கு அவசரம். நான் என்ன பண்ணுறது? டேய்... அம்மா வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்? ஏன் இப்படி ரகளை பண்ணுற? ஒருநாளைக்கு பொறுத்துக்க மாட்டியா என்ன?’

சத்தம் போட்டுக் கொண்டே வந்த அம்மாவைப் பார்த்ததும் செல்லமாய் சிணுங்கிக்கொண்டே படுத்தான் ராபர்ட்.

அம்மா பாலை ஊற்றினாள். ராபர்ட் அதை மடக் மடக்கென்று வாலை ஆட்டிக்கொண்டே நக்கி சாப்பிட ஆரம்பித்தான்.

மங்களம் அந்த வாயில்லா ஜீவனை தடவிக்கொடுத்தாள்.