இலக்கியம் படைப்பது என்பதே எளிதான விஷயமல்ல. அதிலும் குழந்தைகள் இலக்கியமென்றால் அப்பப்பா....! அதைப் படைப்பதற்கு தனி திறமைதான் வேண்டும்.
ஆம்! பெரியவர்களுக்கு நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதி விடலாம். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி எழுத முடியாது. நாளைய உலகத்தினைப் பற்றி தீர்மானிக்கப் போகிறவர்கள் அவர்கள். கதையானாலும் சரி, கட்டுரைகளானாலும் சரி, பாடல்களானாலும் சரி அவர்கள் மனத்துக்கு எளிதில் புரியும்படி, அவர்கள் ரசிக்கும்படி எழுத வேண்டும்.
அப்படி குழந்தைகள் மனத்தைக் கவரும்படி எழுதியவர்களை விரல் விட்டு எண்ணி
விடலாம். அதிலும் வெற்றி பெற்றவர்கள் மிக சிலர்தான். அவர்களில் மிக முக்கியமானவர் எனிட் பிளைட்டன். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பெண்மணி. இவர் குழந்தைகளுக்காகவே 600க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருக்கிறார்.
1897ம் ஆண்டு ஆகஸ்ட் 11ந் தேதி அன்று இங்கிலாந்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாகப் பிறந்தார் எனிட் பிளைட்டன். இவருக்கு 13 வயதிருக்கும்போது இவர்களை விட்டு இவரின் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். பிளைட்டன் தனது 13வயதில் பாடசாலை ஒன்றில் தங்கிக் கல்வி பயின்று, ஆசிரியர் பயிற்சி பெற்று, ஓராண்டு ஆசிரியராகவும், நான்காண்டு குழந்தைகளைப் பராமரிப்பவராகவும் பணியாற்றினார்.
அப்படி குழந்தைகளைப் பராமரிக்கும்போதுதான் மிகுந்த ஈடுபாட்டுடன் இவர் குழந்தைகளுக்காக தீவிரமாக எழுத ஆரம்பித்தார். எனிட் பிளைட்டன் அதற்கும் முன்பாக சிறுமியாக இருந்த போது தன்னுடைய 14 வயதிலேயே கவிதை எழுதியவர். அது சிறுவர்களுக்கான இதழ் ஒன்றில் வெளிவந்தது.
சைல்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) என்னும் இதழில் 1922 - ல் பிளைட்டனின் முதல் கவிதை பிரசுமானது. அதுமுதல் இவர் தொடர்ந்து குழந்தைகளுக்காக கவிதை, கதைகள் எழுதுவதில் தீவிரமானார்.
‘டீச்சர்ஸ் ஜெரால்டு’ என்ற பத்திரிகையில் சிறுவர், சிறுமிகளுக்காக தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவந்தார் பிளைட்டன். அதன்மூலம் குழந்தைகளிடம் இவரது செல்வாக்கும் மிகவும் அதிகமானது.
‘மாடர்ன் டீச்சிங்’, ‘பிராக்டிகல் சஜஷன்ஸ் ஃபார் ஜூனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்’- எனிட் பிளைட்டன் எழுதிய இந்த இரண்டு புத்தகங்களும் மிகவும் பிரபலமடைந்தன. அதன்பின்னர் குழந்தைகளுக்காகவே தொடங்கப்பட்ட சன்னி ஸ்டோரிஸ் (Sunny Stories) இதழில் ‘விஷ்ஷிங் சேர்’ என்ற தொடரைக் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வண்ணம் வீரதீரமாக எழுதத் தொடங்கினார் எனிட் பிளைட்டன். கதைகள் நல்ல நெறிகளைச் சொல்லக்கூடியனவாகவும் இருந்தன.
1950-ல் இங்கிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகள் தங்களது நூலகங்களுக்கு பிளைட்டனின் படைப்புகளை வாங்கமறுத்தனர். இதனால், இவரின் கதைகளை நூலகங்களில் ஆர்வத்துடன் எடுத்துப் படித்து வந்த குழந்தைகள் பெரிதும் கவலைப்பட்டனர். ஆனாலும் பிளைட்டனின் எழுதின்மீதும், கதைகளின்மீதும் கொண்ட ஆர்வத்தினால் ஆசையினால் சிறுவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
அவர்கள் தங்கள் பெற்றோர்கள் தங்களின் கைச்செலவிற்காக தந்த பணத்தினைக் கொண்டு புத்தகங்களை காசு கொடுத்துக் கடைகளில் வாங்க ஆரம்பித்தனர். பிளைட்டனின் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது.
எனிட் பிளைட்டனின் புக் ஆஃப் பேர்ஸ், மிஸ்டர் கெஸ்லியானோஸ் சர்க்கஸ், த நாட்டியஸ்ட் கேர்ள் இன் த ஸ்கூல், ஃபைன் ஆன் ஏ டிரஷர் ஐலண்ட், த சீக்ரெட் செவன் போன்ற புத்தகங்கள் உலகில் மிகவும் பிரபலமானவை.
‘த பேமஸ் ஃபைவ்’ என்ற புத்தகம் மட்டும் கோடிக்கணத்தில் விற்பனையானது. இதுதவிர இங்கிலாந்து மற்றும் உலகிலுள்ள நாற்பது பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தை அச்சிட்டு விற்பனை செய்தது என்பது அடுத்த ஆச்சரியமான விஷயம்.
தன்னிடம் சேர்ந்த பெரும் பணத்தைக் கொண்டு ‘கிரின் ஹெட்ஜஸ்’ என்ற மாளிகையைக் கட்டி குடிபெயர்ந்தார் எனிட் பிளைட்டன். அதில் காகம், புறா, ஆமை, சேவல், வாத்து, முள்ளம்பன்றி போன்ற பலவகையான மிருகங்களையும் பறவைகளையும் செல்லமாக வளர்த்து வந்த பிளைட்டன் தனது 71 வயதில் (28.11.1968) மறைந்தார்.
1922 முதல் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கிய எனிட் பிளைட்டன் படைத்த குழந்தை இலக்கியங்கள் இன்றும் உயிர்வாழ்க்கின்றன.
(ப்ராடிஜியின் ‘மேதை’ இதழில் வெளியானது.)
2 கருத்துகள்:
முகிலின் வலை மூலம் தங்கள் வலை அறிந்தேன்.
அருமையான பதிவு.
குழந்தை இலக்கியங்கள் மிகவும் முக்கியமானவை.
10- 15 வயதில் படித்து என்னை மெருகேற்றிய அம்புலிமாமா , பாலமித்ரா, தெனாலி ராமன் கதைகள், முத்து, ராணி மற்றும் லயன் காமிக்ஸ்" போன்ற புத்தகங்கள் இந்த தலைமுறைக்கு அந்நியமாகவே தோன்றுகிறது.
மற்றும் கதை புத்தகங்களை படிக்கும் ஆர்வம் மிகுதியாக இல்லாத இந்தியாவில் குழந்தைகளுக்கு என்று திரைப்படமே இல்லை என்பது மிகுந்த வேதனையான விஷயம். அதனால் தான் குழந்தைகளுக்கு மன அழுத்தமும் வீணான சிந்தனக்களும் வருகிறது என்பது உளவியலாளர்கள் கருத்து.
தமிழகத்தில் எல்லா குழந்தைகளும் அழுது வடியும் சீரியல்களையும் சினிமா, போட்டிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்களையும் அருவருக்கதக்க நிகழ்வுகளையும் நடு ஹாலில் உட்கார்ந்து மணிகணக்கில் பார்ப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.
பிஞ்சுகளின் மனதில் "மானாடவா மயிலாடவா ? என்று கனா காணும் காலத்திற்குள் மூழ்கி கிடக்கும்
வேளையில் பத்ரி & Team
முயற்ச்சிகள் பாராட்டுகுரியவை.
வாழ்த்துகள் தோழரே...
பி.கு: உலக சினிமா குறித்த எனது வலை பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.
Read quiet a few Enid Blyton books like " The famous five " etc. But my mum would have read all blyton books , I supose. :)
கருத்துரையிடுக