மார்கழியும் மாணவர்களும்
‘பையன் படிக்கச் சொன்னா, மாட்டேங்கிறான். என்ன செய்யுறதுன்னே தெரியலை. உங்ககிட்டதான் நல்லா பேசுவானே. கொஞ்சம் என்னான்னு கேளுங்களேன் சார்’ என்று புலம்பினார் பக்கத்து வீட்டு நண்பர்.
பக்கத்து வீட்டுப் பையன் படிப்பில் கெட்டிக்காரன். வகுப்பிலேயே, ஏன் பள்ளியிலேயே அவன்தான் முதல் மதிப்பெண் வாங்குபவன். அவனைப் பற்றி அவனுடைய தந்தையே இப்படிப் புகார் சொன்னதும் அதிர்ந்துபோனேன்.
அன்று மாலை - அந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘என்னப்பா! நீ நல்லா படிக்கிற பையனாச்சே! படிக்க சொன்னா மாட்டேங்குறியாமே! என்ன பிரச்னை?’ என்று மெதுவாகக் கேட்டேன்.
அந்த பையனுக்கு என்மீது அன்பும் மதிப்பும் உண்டு அதனால் நான் சொல்வதைக் கேட்டு அவனுக்குக் கோபம் வரவில்லை, அங்கிள், நானும் காலையில எந்திரிச்சு படிக்கணும்தான் உக்கார்றேன். ஆனா, நான் படிக்க உட்காரும்போது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ன்னு பக்கத்துலருக்குற கோயில்ல இருந்து லவுட் ஸ்பீக்கர் அலற ஆரம்பிச்சுடுது. அந்த சத்தத்துல என்னால படிக்க முடியல. என்ன செய்யறது? நீங்க சொல்லுங்க’ என்றான்.
ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து சபரிமலைக்கும் போகத் தயாராகும் காலம். ஆண்டுக்கு ஆண்டு இந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கண்டிப்பாக அருகிலிருக்கிற வீடுகளிலோ, சிறு கோயில்களிலோ மாலையில் பஜனை இருக்கும். அதற்கு முன்னோட்டமாக காலையில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதுதான் அந்தப் பையன் விஷயத்திலும் நடந்திருந்தது.
அவன் கூறுவது சரிதான். இது டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் நாம் அதிகம் கேட்கக் கூடியதாக வார்த்தைகள் ‘சாமி! ஐயப்பா’வாகத் தான் இருக்கும். கூடவே மார்கழி பிறந்துவிட்டால் எல்லாக் கோயில்களிலும் அதிகாலை நான்கு மணிக்கே ஸ்பீக்கர்கள் வழியாக, பக்திப் பாடல்கள் வீதிகளுக்குள் உலாவர ஆரம்பித்துவிடும்.
பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் காலம் இது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் தேர்வுக்கு படிக்கின்ற முக்கியமான நேரம் அதிகாலை நேரம்.
அதுவும் பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இது முக்கியமான மாதமாகும். இந்த மாதத்தில் இருந்துதான் இதுவரை படித்த மாணவர்களும், படிக்காத மாணவர், மாணவிகளும் போட்டி போட்டுக்கொண்டு படிப்பார்கள். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களின் ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற அக்கறையோடு அதிகாலையில் எழுந்து படிக்க ஆரம்பித்தால், இரவு படுக்கும்வரை படிப்பு, படிப்பு, படிப்பு என அதிலேயே மூழ்கிப் போவார்கள். கண்ணும் கருத்துமாக படித்து பாடங்களின் விவரங்களை அத்தனையையும் கைவிரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
அதிகாலையில் படிப்பு, பள்ளியில் சென்று படிப்பு, மாலையில் கோச்சிங் கிளாஸில் படிப்பு, திரும்ப வீட்டுக்கு வந்ததும் படிப்பு, இரவு 12 மணிவரை படிப்பு என இருபத்தினான்கு மணிநேரமும் படிப்பைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை என்பதுபோல் படிக்கிறார்கள் மாணவர்கள். உண்மையில் இந்த மாணவர்களின் படிப்புக்குச் சற்று சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது இப்படி ஒலிபெருக்கி வழியாக வரும் இசைப்பாடல்கள்.
மாணவர்களுக்கு இன்னும் சில நாளில் தேர்வுகள் தொடங்கிவிடும். அரையாண்டுத் தேர்வுகள், ரிவிஷன் டெஸ்டுகள், ஆண்டு இறுதித் தேர்வு என தேர்வு மயமாக இருக்கும்.
ஏற்கெனவே வடகிழக்குப் பருவ மழை அதிகம் பெய்த காரணத்தினால் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. சில மாணவர்களின் பாடப் புத்தகங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற பரிதாபமும் நமக்குத் தெரியும்.
அவர்களுக்கு எல்லாம் இப்பொழுதுதான் அரசு பாடப்புத்தகங்களைக் கொடுத்து கொண்டிருக்கிறது. இனிமேல்தான் அவர்கள் படிக்க வேண்டும். எழுதிவைத்த நோட்டுகள் எல்லாம் போனதினால் தற்போது அவர்கள் முதலில் இருந்து மீண்டும் படிக்க வேண்டிய சூழ்நிலை. மாணவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் இவர்களுக்குமேகூட இப்படி ஒலிபெருக்கிகள் வழியாக சத்தமாக ஒலிக்கும் பாடல்கள் சற்றுத் தொந்தரவானவைதான்.
மாணவர்களாவது பள்ளிக்கு சென்று அல்லது கோச்சிங் கிளாசில் படித்துவிடுவார்கள். ஆனால் வயதானவர்களும், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், குழந்தைகளும் எங்கு செல்வார்கள்?
சில இடங்களில் பூஜை செய்வதோடு நில்லாமல் அன்னதானமும் செய்கிறார்கள். அன்னதானம் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் அன்னதானம் முடிந்தபின் எச்சில் இலைகளை சாலையில் ஏதோ ஒரு மூலையில் வீசுவிடுகிறார்கள்.
சாலையோரத்தில் இதுபோன்ற எச்சில் இலைகளை கொட்டுதால் சுகாதாரம் கெடுகிறது.
எச்சில் இலைகளை மொய்க்கின்ற ஈ, கொசுக்கள் கடித்தால் பல்வேறு நோய் பரவும்.
நம் உடல் நலம்தான் பாதிக்கும்.
இதனையெல்லாம் தவிர்ப்பதற்கு என்ன வழி?
ஐயப்பனுக்கு பூஜை செய்கிறவர்கள் தங்களின் வீட்டுக்குள்ளே பூஜை செய்து, ஐயப்பனின் பக்திப் பாடல்களை தங்களுக்கு மட்டுமே கேக்கும்படி சத்தத்தை வைத்துக் கேட்டால் யாருக்கும் தொந்தரவு இருக்காது. இப்படி செய்தால் அவர்களுக்கும் பூஜை செய்த மாதிரி இருக்கும். பள்ளி மாணவர்களுக்கும் இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்.
அதுபோல தங்களின் வீட்டிற்குள்ளே அனைவரையும் அழைத்து அன்னதானம் செய்து இலைகளை ஒரு ஓரமாகப் போட்டால், மறுநாள் குப்பை லாரிகள் வந்து அள்ளி செல்வதற்கு வசதியாக இருக்கும். நமது சுற்றுப்புற சுகாதாரம் கெடாது. நாமும் நலமாக இருக்கலாம்.
இவையெல்லாவற்றையும் விட மார்கழி மாதத்தில், அதிகலையில் கோயில்களில் இருந்து கிளம்பும், பக்திப் பாடல்களை பெரிய ஒலிபெருக்கிக் குழாய்கள் மூலமாக ஒலிபரப்பாமல், சிறிய அடக்கமான ஸ்பீக்கரில் கோயிலுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ஒலிபரப்பினால் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். செய்வார்களா?
(20.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)