கல்யாண போதை
கல்யாணப் பத்திரிகை கொடுப்பதென்பது சுகமான அனுபவம் என்பதை மணமகன், மணமகளிடம் கேட்டால் தான் தெரியும்.
‘இன்னும் இத்தனை சொந்தக்காரங்களுக்குக் கொடுக்க ணும் நேரம் வேற இல்லை’ என்று பெற்றோர்கள்கூட அங்கலாய்த்துக் கொள்ளுவார்கள்.
ஆனால், மணப்பெண்ணோ, மணமகனோ சிறிதும் சலிக்காமல் நேரம் காலம் பார்க்காமல், நெருங்கிய நண்பர்கள், இந்நாள், முந்நாள் அலுவலக நண்பர்கள், நண்பர்கள் மூலம் அறிமுகமான நண்பர்கள், தனக்குத் தெரிந்த அத்தனைப் பேருக்கும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுபோல திருமண அழைப்பிதழை கொடுப்பார்கள்.
‘எனக்கு கல்யாணம்’ (‘சின்னத்தம்பி’ ஞாபகம்கூட வரும்.) என்று அழைப்பிதழைக் கொடுக்கும்போது அவர்களிடம் தோன்றும் வெட்கம், ஒருவித அசட்டு சிரிப்பு, சிறு புன்னகை என எல்லாவற்றையும் ரசிக்கத்தான் தோன்றும். சிலர் எல்லைமீறி அட்வைஸ் என்ற பேரில் அறுத்துத்தள்ளுவர். அதனையும் இவர்கள் கேட்டுத்தான் தீரவேண்டும். வேறு வழியில்லை. சிலர் என்ன கேள்விகேட்டாலும் இவர்களுக்கு காதிலேயே விழாது. சிந்தனையெல்லாம் அவளை சுற்றியும், அவனை சுற்றியும் இருக்கும்.
முன்பெல்லாம் மணப்பெண்ணும், மணமகனும் பார்த்துக் கொள்ளமாட்டார்கள். பேசிக்கொள்ளமாட்டார்கள். சந்தர்ப்பமில்லை. ஆனால் இப்போது செல்போன் ஒன்றுபோதும். செல்போனை எடுத்தால் கீழே வைக்கவே மனம் வராது. செல்போன் சார்ஜே தீர்ந்துபோய்விடும். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவார்களும் இருக்கிறார்கள். சிலர் சார்ஜரைத் தேடி அலைவார்கள். அப்படி அவர்கள் அலையும்போது போதைப்பொருளுக்கு அலைபவர்களை நினைவூட்டும்.
கல்யாணம் என்பதும் ஒருவித போதை தானே? அதைப் போகப் போக புரிந்துகொள்வார்கள். புது மணப்பெண்ணும், மணமகனும். என்ன நான் சொல்வது?
1 கருத்து:
Stupid comment
கருத்துரையிடுக