புதன், பிப்ரவரி 25, 2009

சென்னையில் மெட்ரோ ரயில்

சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே வருகிறது என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆங்காங்கே அரசும், மாநகராட்சியும் இணைந்து பாலங்கள் பல கட்டியிருந்தாலும், பெரும்பாலான பாலங்கள் இருப்பதென்னவோ தென்சென்னையில் தான். தென்சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களால் ஒரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது என்று தென்சென்னைவாசிகள் கூறுகின்றனர். 

ஆனால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது தினமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. சைக்கிள், ரிக்ஷா, மீன்பாடி வண்டி, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கார்கள், கால் டாக்சிகள், வேன்கள், டெம்போ, லாரிகள், பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள் எனப் பலவிதமான வாகனங்கள் தினமும் வந்து போகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

அவசர சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லும்போது, ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதற்குகூட இடமில்லாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

போக்குவரத்து நெரிசலால் ஒருவருக்கு அதிக நேரச் செலவு, பெட்ரோல் விரயம், டென்ஷன், அலைச்சல், உடல் வலி போன்றவை ஏற்படுகின்றது.

‘வடசென்னையில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு எப்போதுதான் விடிவு?’ என்று அங்கலாய்க்காதவர்களே இருக்கவே முடியாது. இந்தப் பிரச்னைக்கு ஒரு திட்டத்தின் மூலமாகக் கூடிய விரைவில் முடிவு ஏற்படப் போகிறது. 

அந்தத் திட்டத்தின் பெயர் சென்னை மெட்ரோ ரயில் திட்டம். 

2006-ம் ஆண்டு தமிழக அமைச்சரவைக் கூடி சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என முடிவெடுத்தது. இதற்கான அறிக்கையை தயார் செய்யும் பணி டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கையும் தயாரானது. சில நாட்களுக்கு முன்புதான் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. சென்னை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க இத்திட்டம் ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம்.

இந்தத் திட்டத்திற்காகும் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஜப்பான் இண்டர்நேஷன் கார்ப்பரேஷன் ஏஜென்சி நிதியுதவியாக வழங்க இருக்கிறது. இதற்கான ஓப்பந்தத்தில் மத்திய அரசும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன. மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் கொடுக்கின்றன.

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சென்னையில் முதலில் இரண்டு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. சுரங்கப் பாதையாகவும்,  தற்போது இருக்கும் பறக்கும் ரயிலைப் போன்ற இன்னொரு பாதையாகவும் அமைய உள்ள இந்த வழித்தடங்களின் மொத்த நீளம் 45 கி.மீ. இதில் 24 கி.மீ. சுரங்கப் பாதை. 21 கி.மீ. மேலே செல்லும் பாதையாக இருக்கும்.

முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையில் ஆரம்பித்து சென்னைத் துறைமுகம், எழும்பூர், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி சாலை, கிண்டி, மீனம்பாக்கம் வழியாக சென்னை விமான நிலையம் வரை அமைக்கப்படும். இதன் மொத்த நீளம் 23.1 கி.மீ. ஆகும்.

இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் ஆரம்பித்து வேப்பேரி, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, கே.கே. நகர், சிட்கோ, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை அமைக்கப்படும். இதன் மொத்த நீளம் 22 கி.மீ. ஆகும்.

இந்தத் திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு,  2015ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் இருப்பது போலவே, மத்திய அரசும் மாநில அரசும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சம பங்கு வகிக்கும்.

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 10 ஏக்கம் நிலம் தேவைப் படுகிறது. திட்டத்தின் செலவு சுமார் 14,600 கோடி ரூபாய்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சாலை போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் 20 சதவீதம் மட்டுமே இருந்தால் போதுமானதாக இருக்கும். 

மேலும் இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல், அதிக நேரச் செலவு போன்றவைகளைத் தவிர்ப்பதோடு, வாகனத்திலிருந்து வரும் புகைகளினால் ஏற்படும் மாசு குறையவும் வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழலும் பாதுகாப்பாக இருக்கும். சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மற்றும் தனியார் பேருந்துகள், புறநகர் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட இந்தத் திட்டத்தில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் வசதிக்கேற்ப எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

பயண நேரமும் மிகவும் குறையும். சென்னை சென்ட்ரலில் இருந்து அண்ணா நகருக்கு 14 நிமிஷங்களிலும், மண்ணடியில் இருந்து விமான நிலையத்துக்கு 44 நிமிஷங்களிலும் செல்ல முடியும்.

6 பெட்டிகள் கொண்ட ஓரு மெட்ரோ ரயில், நெரிசல் நேரத்தில் 16 பஸ்கள், 300 கார்கள், 600 இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக அமையும்.

முக்கிய இடங்களில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டு, நகரும் பாதை, லிப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தி.நகர் வழியாக திருவான்மியூர் வரையிலும், போரூரிலிருந்து காமராஜர் சாலை வரையிலும், ரிங் ரோடு, ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வழியாக என்.எச். 5 வரையிலும் என வருங்காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டமும் இருக்கிறது.

நீண்ட நாட்களாகவே சென்னை மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் சென்னை நகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நீண்டகாலத் தீர்வாக அமையும் என நம்பலாம்.

0
(12.02.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

1 கருத்து:

வடுவூர் குமார் சொன்னது…

சரியான தொழிற்நுட்பத்தை உபயோகப்படுத்தி விரைவில் முடித்தால் மக்கள் வரிப்பணம் விரயப்படாமல் தவிர்க்கலாம்,இன்னொரு கத்திப்பாரா பாலமாக ஆகாமல் இருந்தால் சரி.