உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி இரண்டாவதுஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்ற நாள். (30.03.2011)
அன்றுதான் நண்பர் பாலு சத்யா சாகித்ய அகாதெமி நடத்தும் கவியரங்கத்தில் கவிதை வாசித்தார். எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் கவியரங்கத்திற்கு நான் அங்கு சென்றபோது, நண்பர் பாலு சத்யா, கவிஞர் நா.வே. அருளிடம் பேசிக்கொண்டிருந்தார். உடன் உமா சம்பத்.
கவியரங்கம் ஆரம்பமானது. ஒவ்வொரு கவிஞராக மேடைக்குச் சென்றனர். ஒவ்வொரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பாலு சத்யாவையும் அறிமுகப்படுத்தினார்கள்.
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நான்கு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டவர். தினமணி சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றவர். ஆனந்த விகடன், குங்குமம், கல்கி, அம்ருதா, பெண்ணே நீ போன்ற பல இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பவர். கிழக்குப் பதிப்பகத்தில் துணை ஆசிரியர்கள் குழுவில் இருப்பவர். பல வரலாற்று நூல்களை எழுதியிருப்பவர்.
பாலு சத்யா கவிதை வாசிக்க வந்தார். அவர் கவிதைகளில் தெருக்களில் விளையாடும் சிறுவர்களின் அவலம் குறித்து இறுதி ஆட்டம் என்ற தலைப்பிலும், ரயிலில் பயணிக்கும் பயணியின் நிலை குறித்து இரயில் சிநேகம் என்ற தலைப்பிலும், பிராமணப் பெண் ஒருத்தி, தன் வீட்டில் நடக்கும் விசேஷத்தில் அவள் படும் கஷ்டத்தினை உணர்த்தும் வகையில் கண்ணாடி இலை என்ற தலைப்பிலும், ஒண்டுக் குடித்தனத்தில் வசிக்கும் இளம் பெண் வீட்டிலும் அலுவலகத்திலும் படும் அவஸ்தைகளின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் அவள் என்ற தலைப்பிலும் கவிதைகளை வாசித்தார். கவிதைகளையும் கவியரங்கத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் ரசித்து, கைத்தட்டி பாராட்டினார்கள்.
நடுவராய் வந்திருந்தவர் ஆர். நடராசன், பாலு சத்யாவைப் பாராட்டும்போது, குறிப்பாக அவள் என்ற கவிதையைப் பாராட்டி, இப்படி ஒரு கவிதையினை ஒரு பெண்ணால்கூட படைத்திருக்க முடியாது என்று பாலுசத்யாவின் கவிதை ஆழத்தைப் புரிந்து பாராட்டினார்.
அவர் வாசித்த கவிதைகளிலிருந்து இரண்டு கவிதைகள்...
கண்ணாடி இலை
மூன்று மணிக்கு எழுந்து
மடி ஆசாரத்துக்கு மாசில்லாமல்
மாமனார் திவசத்துக்காக
உயிர் கரைய வேலை.
என்ன கோபமோ
மாமனார் காகமாக
வந்து பிண்டத்தைக்
கொத்தித் தின்ன
அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
‘சமையல் பிரமாதம்!’
சம்பாவணை வாங்கிய பிராமணர்
வெற்றிலைச் சிவப்புத் தெறிக்க
வாய்நிறையச் சொன்னார்.
பிராமணாளுக்குப் பிறகு
ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் போஜனம்.
பரிமாறும்போது இடுப்பில் பிடித்துக்கொள்ள
பல்லைக் கடித்து சமாளிப்பு.
சாப்பிட்ட இடத்தை
நீர் தெளித்து மெழுகி
மதியம் மூன்றரை மணிக்கு
கடைசியாகச் சாப்பிட அமர்ந்தால்
உணவைப் பார்த்தாலே உமட்டல்.
காலையிலிருந்து காபிகூட
பல்லில் படாதது நினைவுக்கு வர
கொஞ்சமாக உணவு கொறிப்பு.
சாப்பிட்ட இலைகளை
கூடையில் போட்டு
அடுத்த தெரு
பசுமாட்டுக்குக் கொடுக்கும்போது
மாமி கேட்டாள்:
‘கோமதி! யாருக்கு திவசம்?’
‘எனக்குத்தான்.’
•
அவள்
கிளிகளைக் கூட்டமாய்ப் பார்த்து
வெகு நாளாகிறது.
அவை கதறியபடி
சீட்டுகளைப் பொறுக்கமட்டும்
வெளியே வருகின்றன.
கிளிகளுக்கு ஒரு கூண்டு
அவளுக்கு இரண்டு.
வீடு - அலுவலகம்.
வீடு பரவாயில்லை.
தெருவில் இறங்கினால்
மார்பகங்களை வெறிக்கும்
ஆண்களின் பார்வை -
பேருந்துப் பயணத்தில்
வியர்வைக் கசகசப்போடு
அசிங்கமான உரசல்-
இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசும்
வயதான சூப்பர்வைசரின் நாக்கு -
முகத்தைப் பார்க்காமல்
எங்கெங்கோ அலைபாயும்
மேலாளரின் கண்கள் -
இப்படி...
அவளைக் காமப்பண்டமாய்
உணரவைத்துக் குறுக வைக்கும்
அசிங்கத் தொந்தரவுகள்
அதிகம் இல்லை வீட்டில்.
எட்டுவீடுகள் கொண்ட
தொகுப்புக் குடியிருப்பில்
பொதுக் கழிவறையும்
பொதுக் குளியலறையும்
பெருந்தொல்லை அவளுக்கு.
காக்காய் குளியலைக்கூட
நிறுத்தி நிதானமாகச்
செய்ய முடியாது.
அலுவலகம் செல்லும்
அவசரத்திலும்
குளியலறைக் கதவுக்கு வெளியே
காத்திருக்கும் ஆண்களின்
எக்ஸ்ரே பார்வை
அவளை தகித்தபடிதான் இருக்கிறது.
கழிவறைக்கு வெளியேயிருந்து
‘சுசீலா! இன்னுமா முடியலை?’
குரல் கேட்கும்போதெல்லாம்
புழுவாய் உணர்வாள்.
ஒவ்வொரு நாளும்
ஆடை மாற்றும் தருணங்களில்
ப்ளஸ்டூ படிக்கும் தம்பியையும்
ஆஸ்துமா வந்த அப்பாவையும்
வெளியே அனுப்பி
கதவைச் சாத்தவேண்டியிருக்கிறது.
ஒற்றை அறைதான்
அவளையும் சேர்த்து
நான்குபேருக்கான முழுவீடு.
இரவில் - அடுத்த வீட்டுத்
தொலைக்காட்சிப் பெட்டியின்
இரைச்சலைத் தாங்கியபடி
சுவரோடு ஒட்டிக்கொண்டு
அவள் உறங்கும்போது
கனவில் வருபவர்கள்
ராஜகுமாரர்கள் அல்ல.
சுகமான ஆற்றுநீர்க்
குளியல் -
வேப்பம் பூக்கள்
உதிர்ந்து கிடக்க
சுற்றிலும் மரங்கள் படர்ந்த வீடு -
சுதந்தரமாய் சுற்றிவர
சின்னதாய் ஒரு
மாந்தோப்பு -
இனிய தோழிகள் -
கண்களை மட்டும்
நேருக்கு நேராய்ப்
பார்த்துப் பேசும்
கண்ணியமான ஆண்மக்கள் -
இவைதான் நித்திய கனவு
எப்போதும்.
அவள் ஒருத்தியில்லை
ஆயிரம் லட்சம் கோடியாய்
வசிக்கிறாள்
இந்திய நகரங்களில்.
ஐந்து கவிதைகளையும் அழகிய உச்சரிப்புடன், வார்த்தைகளுக்கேற்ப குரலை மாற்றி, உணர்ச்சிகரமாகவும் உணர்வுபூர்வமாகவும் கவிதைகளை வழங்கியதில், பாலுமகேந்திராவின் மாணவன் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டினார் என்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக