புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - நேர்மையான தலையங்கம்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி பலர் பலவிதமாய் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில் இன்றைய தினமணியில் (23.06.2010) தலையங்கத்தைப் படித்தேன். அருமையாக இருந்தது. அத்தலையங்கம் உங்களுக்காக.


தலையங்கம்: ஊர் கூடித் தமிழ்த் தேர்!

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உலகெங்கும் இருந்து தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி,​​ கோவையில் இன்று முதல் தமிழ்ச் செம்மொழி மாநாடு காண இருக்கிறோம்.

உலகத் தமிழ் மாநாடு கூட்டப்படுகிறது என்கிற அறிவிப்பு வந்தவுடன் 'உலகளாவிய உவகை' என்று தலையங்கம் தீட்டி நமது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தோம்.​ அறிவிப்பே உலகளாவிய உவகையைத் தருமானால்,​​ மாநாடு எத்தகைய இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை விவரிக்க வேண்டுமா,​​ என்ன?

ஈழத் தமிழர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு மாநாடு தேவைதானா என்றும்,​​ அரசியல் ரீதியாகத் தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சியால் கூட்டப்படும் மாநாடுதானே இது என்றும் கேள்விகளை எழுப்பி எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக்கப்படுவது வேதனைக்குரிய விஷயம்.

வீட்டில் ஒரு திருஷ்டி விழுந்துவிட்டது என்பதற்காக,​​ குழந்தை பிறந்தால் பெயரிடாமலா இருந்து விடுகிறோம்?​ இப்படி ஒரு மாநாடு கூட்டித் தமிழர்கள் ஓரணியில் நிற்பதன் மூலம்தானே உலகுக்குத் தமிழர்தம் ஒற்றுமை உணர்வையும்,​​ பலத்தையும் எடுத்துரைக்க முடியும்!

கடந்த 20 ஆண்டுகளாக,​​ குறிப்பாக,​​ பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் முன்னுரிமை பெற்றது முதல்,​​ தமிழினுடைய முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.​ எல்லா தளங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது,​​ இல்லையென்றால்,​​ பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

படித்தாலும், ​​ ஏன்,​​ பேசினாலும்கூட மரியாதை இல்லை என்கிற வசை தமிழுக்கு எய்திடலாமோ?​ நடைமுறையில் அதுதானே உண்மை நிலை.​ தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே.​ வீடுகளில் பெற்றோர் தங்கள் செல்வங்கள் ஆங்கிலத்தில் மழலைமொழி பேசுவதைக் கேட்டு குதூகலிக்க விரும்புகிறார்களே தவிர அவர்களுக்கு ஆத்திசூடியும்,​​ கொன்றைவேந்தனும்,​​ திருக்குறளும்,​​ நாலடியாரும் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்த காலம் மலையேறிவிட்டதே...

தமிழனுக்கு அடிக்கடி தமிழின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.​ அதுமட்டுமல்ல.​ பன்னாட்டு அறிஞர்கள் தங்களது ஆய்வுகளைப் பதிவு செய்யக் களம் ஒதுக்கித் தரவேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.​ உலகளாவிய அளவில் இதுபோலத் தமிழ் மாநாடு கூட்டப்பட்டால்,​​ சாமானியனுக்குத் தமிழின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த மாதிரியும் இருக்கும்.​ தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வழிகோலுவதால்,​​ மொழியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியதாகவும் இருக்கும்.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேளையில்,​​ அங்கிங்கெனாதபடி எங்கும் தமிழ்ச் சிந்தனை மட்டுமே பரவிக் கிடக்கும் சூழலில்,​​ தமிழ்ச் சகோதரர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

நமக்குள்ளே,​​ உற்றார் உறவினரோடு,​​ நண்பர்களோடு பேசும்போது இயன்றவரை தமிழில் மட்டுமே பேசுவது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்களேன்.​ நம் வீடுகளில் குழந்தைகள் 'டாடி,​​ மம்மி' என்று பெற்றோரை அழைப்பதற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன்.

அரசியல் கலப்பு என்பது இன்றைய இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாதது.​ ஆனால்,​​ என்ன அதிசயம்?...​ செம்மொழி மாநாட்டுக்காக விழாக் கோலம் பூண்டிருக்கும் கோவை மாநகரில் பார்வைபடும் இடம் எல்லாம் பட்டொளி வீசிப் பறப்பது மாநாட்டின் இலச்சினை தாங்கிய வண்ணக் கொடிகளே தவிர,​​ பெயருக்குக் கூட ஒரு கட்சிக் கொடி கிடையாது.​ ​

குறைந்தபட்சம் எங்காவது முதல்வரின் படமோ,​​ துணை முதல்வரின் படமோ ​ காணப்படுகிறதா என்றால்,​​ ஊஹும்.​ ஆளும் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டியில் வந்து குவிந்துவிடுவர் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம்.

ஆய்வரங்க நிகழ்ச்சியில்,​​ அமைச்சர் பெருமக்களும்,​​ ஆளும் கட்சிப் பிரமுகர்களும் ​ முன்னுரிமை பெற்றிருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.

எள்ளளவும் அரசியல் கலவாத,​​ தரத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள் மட்டுமே இடம்பெறுகின்றன.​ சமயம் புறக்கணிக்கப்படும் என்று பயந்தவர்கள் இப்போது அரசியல் முற்றிலுமாக ஆய்வரங்கங்களில் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

நாங்கள் முறையாக அழைக்கப்படவில்லை என்று சிலருக்கு மனக்குமுறல்.​ எங்களுக்கு போதிய வசதி செய்யப்படவில்லை என்று இன்னும் சிலரின் முணுமுணுப்புகள்.​ எனக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்று மேலும் சிலருக்கு ஆதங்கம்.​ தமிழின் பெயரால் நடத்தப்படும் ஒரு கோலாகலத் திருவிழாவில் நமது பங்களிப்பு என்ன என்று யோசித்துச் செயல்பட வேண்டியவர்கள்,​​ மரியாதையை எதிர்பார்த்துக் காத்திருப்பது அவர்களது தமிழ்ப் பற்றை சந்தேகிக்க வைக்கிறது.

இத்தனை பண விரயத்தில் எதற்காக இப்படி ஒரு செம்மொழி மாநாடு என்று கேட்பவர்கள்,​​ தமிழகத்தின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்கிறதே அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும்தான் என்ன என்று ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கூட்டப்படும் இந்த வேளையில்,​​ தமிழின் சிறப்பையும்,​​ தமிழர் தம் மேன்மையையும் நமக்கு நாமே மீண்டும் உயர்த்திக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.​ பட்டி தொட்டியெல்லாம்,​​ தமிழ்,​​ தமிழ் மாநாடு என்கிற முழக்கத்தால்,​​ உறங்கிக் கிடக்கும் தமிழ் உணர்வு தட்டி எழுப்பப்படும் என்று நம்பலாம்.

மனமாச்சரியங்களைக் களைந்து,​​ குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது.​ குறுகிய அரசியல் கண்ணோட்டத்தினால்,​​ தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் இந்த கோலாகல விழாவைப் புறக்கணிப்பதன் மூலம் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பது,​​ சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தும் முயற்சியாகத்தான் முடியும்!

இதற்கு முன்னால் நடந்த மூன்று உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து கொண்டவர்களின் மனசாட்சி சொல்லும் இதுபோல அரசியல் கலவாத மாநாடு நடந்ததில்லை என்று.​ அதைச் சாதித்துக் காட்டிய முதல்வரின் சாதனைக்குத் தலைவணங்குகிறோம்!

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றும்,​​ 'தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்றும் முழங்கிய மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் விதத்தில் கூட்டப்படும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்!

நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை: