தியாகமா இது?
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த முத்துக்குமார் மரணத்தை தியாகம் என்று சொல்லும் பத்திரிகைககளுக்கு நடுவில் ‘தினமணி’ நாளிதழின் தலையங்கம் இதோ. அதுவே என் கருத்தும்...
இது தொடரக்கூடாது!
பத்திரிகையாளர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சம்பவம் மனிதாபிமானமும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையுமுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கிறது. இலங்கைப் பிரச்னையில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தீக்குளித்து இறப்பதுதான் வழி என்கிற அளவுக்கு முத்துக்குமாரைப் போன்ற இளைஞர்களிடையில் விரக்தி ஏற்படுத்தும் அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்தப் பிரச்னையில் நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம் என்கிற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாமல் போனது துரதிர்ஷ்டமே.
அதேநேரத்தில், தீக்குளிப்பது, உயிரை மாய்த்துக் கொள்வது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது என்று உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதை மக்களாட்சியில் நம்பிக்கையுடைய எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துக்குமாரின் மரணம், அவர் மீது அனுதாப உணர்வைத் தூண்டுமே தவிர இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடுமா என்ன? பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவில் மிருகங்களைப்போல அலைந்துகொண்டிருப்பதைப் பற்றியே கவலைப்படாத இலங்கை அரசு, முத்துக்குமார் தீக்குளித்துவிட்டார் என்பதற்காக தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா போகிறது?
பொறுப்புள்ள பத்திரிகையாளராக முத்துக்குமார் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏனைய இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அல்லவா காட்டியிருக்கிறார். ஒற்றுமையுடன் பிரச்னைகளுக்காகப் போராடாதவர்கள் என்ற ஏளனக் குரலுக்கு இதுநாள் வரை உள்ளாகியிருந்த தமிழகம், இப்போது துணிவுடன் போராடத் தெரியாத கோழைகளின் பூமி என்கிற அவமானத்தையும் அல்லவா சுமக்க நேரிடுகிறது.
தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பது என்கிற நோய், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அறிமுகமானது. அப்படி இறந்தவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்று கௌரவம் வழங்கப்பட்டதுமுதல் தீக்குளித்து இறப்பது பெரிய தியாகம் என்பதுபோலவும், ஆட்சியாளர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் சரியான வழி என்பதுபோலவும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மத்தியில் அது ஏற்படுத்தியது.
சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள் அடக்குமுறை ஆட்சியாளர்களின் பெருங்கொடுமைச் சிறையையும், தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்டு போராடினார்களே தவிர, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்குப் பெயர்தான் தியாகமே தவிர, ஒருங்கிணைந்து போராடுவதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக்கொண்டு இறப்பதற்குப் பெயரா தியாகம்?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை மட்டும் தியாகிகளாகக் கருதாமல், தீக்குளித்து இறந்தவர்களையும் தியாகிகளாக வர்ணித்ததன் விளைவுதான் இன்றுவரை உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் தீக்குளிப்பதை ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துச் செயல்படுகின்றனர்.
எல்லா திராவிட பாரம்பரியக் கட்சிகளுமே வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற தீக்குளிப்புகளை ஆதரித்தன என்பதுதான் கசப்பான உண்மை. இப்படித் தீக்குளித்து இறப்பவர்களின் குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பது என்கிற கலாசாரமும் தொடங்கப்பட்ட பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் தீக்குளிப்பதன் மூலம் தங்களது குடும்பத்தின் வறுமையைப் போக்க முயன்ற சம்பவங்களும் உண்டு.
அதைவிட உண்மை, நமது தலைவர்களும் சரி, தங்களுக்காக இன்னின்னார் தீக்குளித்தார்கள் என்கிற செய்தி வெளிவருவதை விரும்புகிறார்கள் என்பதுதான். தீக்குளித்து இறப்பவர்களிடம் எங்களுக்கு அனுதாபம் கிடையாது என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு நமது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் திட்டவட்டமாகச் சொன்னால் ஒழிய இந்த முட்டாள்தனமான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது.
முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம் "பகுத்தறிவு'ள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்' என்கிற முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.
இந்தத் தவறு முத்துக்குமாருடன் முடிந்துவிடட்டும். இனிமேலும் இது தொடரக்கூடாது!
நன்றி - தினமணி
1 கருத்து:
மிக அருமையான கட்டுரை அளித்தமைக்கு நன்றி.
சரியாக சொல்லி இருக்கிறார்கள். இது போல் ஒரு சம்பவம் மீண்டும் ஒருமுறை நடந்து விடக் கூடதென்ற ஆதங்கத்தில் எழுதி இருக்கிறார்கள்.
முத்துக்குமாரின் கொள்கையில் உறுதியுடன், உயிருடன் போராடி இருந்தால் இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டிருக்குமோ என்று தெரியவில்லை.
ஆனாலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் நானும் மிக உறுதியுடன் இருக்கிறேன்.
இளைஞர்கள் மன உறுதியுடனும், சீறிய சிந்தனையுடனும்,உயர்ந்த நோக்கங்களுடன், தொலை நோக்க பார்வையுடனும் அமைதி வழியில், அறவழியில் கட்டுப்பாட்டுடன் பொது சொத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் எதிர்ப்பை காட்ட வேண்டும், போராட வேண்டும்.
அந்தப் போராட்டமே இரும்புள்ளம் கொண்ட ஆட்சியாளர்களின் மனக் கதவை திறக்கும்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராட்டத்திற்கு ஆதரவு பெருகும், அதனால் போராட்டத்தின் தன்மை வலிமை பெருவதோடு மட்டுமல்லாமல் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கருத்துரையிடுக