திங்கள், ஜனவரி 12, 2009

தேவை பராமரிப்பு

நண்பர் ஒருவரை தினமும், மாலையில் திருமயிலை ரயில் நிலையத்தில் என் பைக்கில் கொண்டு விடுவது வழக்கம். அன்றும் அப்படிதான் அவரை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு விட்டு, ஓர் ஓரமாக நின்று பேசிக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வந்த ஒரு டியூப் லைட் எங்களுக்கு அருகில் விழுந்து உடைந்தது. அது என் நண்பரின் முகத்தைப் பதம் பார்க்க வேண்டியது. கொஞ்சம் தள்ளி விழுந்தததால் நண்பர் தப்பித்தார்.
டியூப் லைட் வந்த திசையைப் பார்த்தோம். ரயில் நிலையத்தின் அருகில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக டியூப் லைட்டை கால்வாயில் வீச முற்பட, அது தவறி ரயில் நிலைய படிக்கட்டுகளுக்கு அருகில் விழுந்திருந்தது.
1997ம் ஆண்டு, அக்டோபர் மாதம், திருமயிலை ரயில் நிலையம் திறக்கப்பட்டு, திருமயிலையிலிருந்து கலங்கரை விளக்கம், திருவல்லிகேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, பூங்கா, கோட்டை வழியாக மின்சார ரயில் கடற்கரை நிலையத்தைச் சென்று அடைகிறது.இப்பொழுது மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரைக்கும் சென்று திரும்புகிறது. பீச் ஸ்டேஷன், வேளச்சேரி இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கும் மையமாக விளங்குகிறது திருமயிலை ரயில் நிலையம். தினமும் சுமார் 100 தடவைக்கும் மேல் திருமயிலை ரயிலை நிலையத்தைக் கடந்து செல்கின்றன ரயில்கள்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல், அதனால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள், இதனைக் கருத்தில் கொண்டு, பறக்கும் ரயில் திட்டம், செயல்படுத்தப்பட்டது. மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்குப்  பேருந்தில் சென்றால் குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஆகும். அதேபோல் வேளச்சேரிக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு மணிநேரம் ஆகும். வேளச்சேரியிலிருந்து பாரிமுனைக்கு செல்வதென்றால் சுமார் ஒண்ணரை மணி நேரமாவது ஆகும். இந்த நேர கணிப்புகளெல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாதபோதுதான் சாத்தியம். பறக்கும் ரயில் மூலம் மயிலாப்பூரிலிருந்து பாரிமுனைக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரிக்கு 15 நிமிடங்களிலும், வேளச்சேரியிலிருந்து கடற்கரைக்கு அரைமணி நேரத்திலும் செல்ல முடியும். இதனால் மக்களுக்கு நேரமும் மிச்சமாகிறது.
திருமயிலை ரயில் நிலையத்திலிருந்து முன்புறமாக இறங்கி சென்றால் வலதுபுறம் கபாலீஸ்வரர் கோயிலுக்கும், இடது புறம் லஸ் கார்னருக்கும் செல்லலாம். பின்புறமாகச் சென்றால் சாயிபாபா கோவிலுக்குச் செல்லலாம்.
இவ்வளவு வசதிகளை அள்ளித்தரும் , பொது மக்களுக்குப் பயன்தரும் திருமயிலை ரயில் நிலையம் சரியான பராமரிப்பினால் இருப்பதுதான் சற்று சங்கடத்தைத் தருகிறது.
ரயில்கள் நின்று செல்லும் நடைபாதைகள் இரண்டாவது மாடியில் இருக்கின்றன.  அதிகாலை நான்கரை மணியிலிருந்து நள்ளிரவு வரை ரயில்கள் வந்தும் போய்க் கொண்டுமிருக்கும்.
ரயில் நிலையக் கட்டடத்தின் முதல் மாடியில் முன்பதிவு அலுவலகமும், ஆர்.வி.என்.எல். என்ற ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
தரைத் தளத்தில் காவல் நிலையமும், துணை மின்நிலையமும் இருக்கின்றன. லிப்ட்டுகளும், நகரும் மின் ஏணிகளும் இருக்கின்றன.
நிலையத்தின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பயணச் சீட்டுக் கொடுக்கும் கவுண்ட்டர்கள் இருந்தாலும் தற்போது முன்புறத்திலுள்ள கவுண்ட்டர் மட்டுமே இயங்குகிறது. பின்புறத்தில் செயல்படவில்லை. ‘பீக் ஹவர்ஸ்’ என்று சொல்லப்படுகிற பரபரப்பான காலை, மாலை வேளைகளில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது பயணிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. முன்புறத்தில் இருக்கும் கவுண்ட்டரில் இந்த நேரத்திலாவது இரண்டு கவுண்ட்டர்கள் செயல்பட்டால் பயணிகள் பயனடைவார்கள்.
இங்கே, தானியங்கி பயணச் சீட்டு இயந்திரம் ஒன்று இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் அதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. அதுபோல ப்ரீ பெய்டு கார்டு இயந்திரம் இரண்டு இருக்கின்றன.  அதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவுதான்.
பல கோடி ரூபாய்களில் தயாரான மயிலாப்பூர் ரயில் நிலையம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என வேதனை அடைகின்றனர் மயிலாப்பூர்வாசிகள். ரயில் நிலையத்தின் முன்புறமும், பின்புறமும் 24 மணி நேரமும் யாராவது சிலர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையத்தின் பின்பகுதியைக் கொல்லைப்புறம் என்றே சொல்லலாம். ஆடு, நாய் போன்றவைகள் படிக்கட்டுகளில் ஏறி அசுத்தம் செய்கின்றன. பின்புறத்தில் சாயிபாபா கோயில் வரைக்கும் உள்ள பிரம்மாண்டமான தூண்கள் இரவானால், விளக்கு இல்லாத காரணத்தினால் கழிப்பிடமாக மாறுகின்றன. இரவு நேரத்தில் இந்தப் பக்கம் வருவதற்கே பயப்படுகிறார்கள் பொதுமக்கள்.
வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாயிபாபா கோயிலுக்கு வரும் கார்கள் நிறுத்துமிடமாக இந்த இடம் உருமாறுகிறது. 
ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடுவதால், கட்டடத்தின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்த நிலையில் இருக்கின்றன. ஆங்காங்கே செடிகள் முளைத்திருக்கின்றன. அவ்வபோது தேன்கூடுகூடத் தென்படும்.
ரயில் நிலையத்தை உரிய முறையில் பராமரித்து, பின்புறத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்றைத் திறந்து செயல்பட வைக்கலாம். இருட்டான பகுதிகளில் நன்கு வெளிச்சம் தரக்கூடிய விளக்குகளை பொருத்தினால் அந்த இடத்தைப் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க முடியும். முன்புறமும், பின்புறமும் சிலர் தூங்குவதை தடுப்பதற்கு இரண்டு பக்கமும் எப்போதும் காவலைத் துரிதப்படுத்தலாம். அவ்வபோது கட்டடத்தில் குவிகிற குப்பைகளையும், முளைக்கின்ற செடிகளையும் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்யலாம்.
சென்னையின் புராதனமான நகர்ப் பகுதி திருமயிலை.
உரிய முறையில் பராமரிக்கப்பட்டால், ‘திருமயிலை ரயில் நிலையம்’ அந்தப் பகுதிக்கே பெருமை சேர்க்கும்.

(19.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: