திங்கள், பிப்ரவரி 16, 2009

விளையாட்டு மைதானங்கள் தேவை

சிறுவர்களிடம் சென்று சென்னையிலேயே பெரிய மைதானம் எது? என்று கேட்டு பாருங்கள். அனைவரும் ஒருமித்த குரலில் ‘மெரீனா பீச்’ என்று சொல்வார்கள்.

காரணம்? சென்னையில் மைதானங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதுதான்.

ஒருசமயம் நண்பர் அவரது வீட்டிற்கு என்னை பைக்கில் அழைத்துச் சென்றார். நாங்கள் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு பையன் குறுக்கே வந்துவிட்டான். சட்டென்று நண்பர் பிரேக்கை பிடித்துவிட்டார். நல்லவேளையாக அந்தப் பையனுக்கும் எங்களுக்கும் அடியேதுவுமில்லை.

பையனைத் தூக்கிவிட்டபடி ‘ஏம்ப்பா, ரோட்டுல விளையாடுறீங்களே! எங்கயாவது கிரவுண்ட்ல போய் விளையாட வேண்டியதுதானே?’ என்றேன்.

‘எங்க அங்கிள் கிரவுண்ட் இருக்கு. சொல்லுங்க?’ என்றான் பையன்.

நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். பையன் சொல்வதும் உண்மைதானே?

இன்றைக்கு உங்க ஏரியாவில எங்கே விளையாட்டு மைதானம் இருக்கிறது? என்று யாரையாவது கேட்டுப் பாருங்களேன். அப்போது தெரியும் பையன் சரியா? தவறா? என்று.

நான் பள்ளியில் படிக்கும்போதெல்லாம் சக பள்ளி மாணவர்கள் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு வந்து கிரிக்கெட் பேட்டையோ, கால்பந்தையோ எடுத்துக்கொண்டு விளையாட கிளம்பிவிடுவார்கள். 

‘எங்கடாப் போற?’ என்ற அம்மாவுக்கு.

‘கிரவுண்டுக்கும்மா’ என்றபடி மைதானத்திற்குச் சென்றுவிடுவார்கள். 

விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் ஒருபுறம், புட்பால் ஒருபுறம், பூப்பந்து ஒருபுறம், கில்லி, கோலி, கபடி, முதுகுப்பந்து, ஏழு கல், பம்பரம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவார்கள். 

அதோடு மட்டுமல்லாது இந்த வாரம் இந்த மைதானத்தில் போட்டி, அடுத்த வாரம் அந்த மைதானத்தில் போட்டி என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மைதானத்தில் போட்டிகளை வைத்து விளையாடுவார்கள். அவர்கள் செல்லும்போது ஆளுக்கொரு சைக்கிளில் செல்வார்கள்.  அந்த ஏரியாவிலுள்ள எத்தனை மைதானங்கள் உள்ளதோ அத்தனை மைதானங்களிலும் அவர்கள் கால்பதித்திருப்பார்கள். இப்படி விளையாட்டு விளையாட்டு என்று ஒருபுறம் விளையாடினாலும் படிப்பிலும் கெட்டிக்காரர்களாய் இருந்தார்கள்.
  
ஆனால் இன்றைய மாணவர்களுக்கோ இந்த விளையாட்டுக்களில் சில விளையாட்டுகள் தெரியாமல் இருக்கிறது. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசிக்கலாமா?

எனக்கு தெரிந்தவரை மந்தவெளியில் ஒரு பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் வந்து விடுவார்கள். ஆனால் இன்று அந்த மைதானம் அங்கில்லை. அது பள்ளியாக மாறிவிட்டது.

சரி வீட்டிலே விளையாடலாம் என்றால் அதுவும் முடியாது. முன்பெல்லாம் ஒரு வீட்டிற்கு முன்னும், பின்னும், அவ்வளவு ஏன் வீட்டைச் சுற்றி கூட இடம் இருக்கும். ஆனால் இப்போது வீட்டைச் சுற்றி இருக்கும் இடத்தினை சேர்த்து ஒரு அறையைக் கட்டிவிடுகின்றனர்.  வீட்டிற்கும் அடுத்தவீட்டிற்கும் இடைவெளியில்லாமல் வீட்டை கட்டுகின்றனர். காற்று போகக்கூட வாய்பில்லாமல் கட்டிவிடுகின்றனர். 
அதனால் வீட்டிற்குள்ளே அவர்களுக்கு விளையாட வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. 

சிலர் சிறுவர்கள் டென்னிஸ், கிரிக்கெட், செஸ் வகுப்புகளுக்கு சென்று விடுகிறார்கள். இன்டோர் கேம்ஸ் எனப்படும் வீட்டினுள்ளே விளையாடும் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இப்படி வீட்டினுள்ளே இருந்து விளையாடுவதினால் அவர்களின் மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுவதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் கூட விளையாட இடமில்லாத சிறுவர்கள் வீதிகளில் விளையாடுகின்றனர். இப்படி வீதிகளில் விளையாடுவதால் அவர்களின் கவனம் முழுவதும் விளையாட்டிலேயே இருப்பதால் வீதிகளில் வரும் வாகனத்தின் மேல் செல்வதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

சரி சிறுவர்கள்தான் இப்படி. சிறுமிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா? 

பள்ளி முடித்து வந்து பரதநாட்டியம், பாட்டு என்று சென்றுவிடுகின்றனர். இதனால் அவர்களும் விளையாடும் வாய்ப்பினை இழக்கிறார்கள். அன்றைய காலத்தில் சிறுமிகள் விளையாடிய பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், விடுகதை கூறுதல் போன்ற இன்றைய சிறுமிகளில் பலருக்கும் தெரியாது. இந்த விளையாட்டை யாராவது விளையாடுவதைப் பார்த்தால் அதியமாக பார்க்கின்றனர்.

இதையெல்லாம் பார்த்து வந்த சில அமைப்புகள் இன்றைய சிறுமிகளுக்கு இந்த விளையாட்டுகளைத் தெரியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போட்டிகள் வைத்து இந்த விளையாட்டுகளுக்கு புத்துணர்வு ஊட்டுகிறார்கள்.

பள்ளிகளில் கூட விளையாட்டு மைதானங்கள் என்று ஒன்று பார்ப்பதே அரிதாகி விட்டன. சில பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கு இடமே இருப்பதில்லை. ஆனால் விளையாட்டு பிரியர்டு ஒன்று வைத்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

விளையாட்டு மைதானங்கள் உள்ள சில பள்ளிகள் மைதானத்தின் அளவை குறைத்து அங்கும் வகுப்பறைகள் கட்டிவிடுகின்றனர். இப்படி மைதானங்கள் எல்லாம் பள்ளிக்கூடங்களாக மாறினால் அங்கு படிக்கும் மாணவர்களும் அந்தப் பகுதியில் வாழும் சிறுவர்களும் எங்கு சென்று விளையாடுவார்கள்.

விளையாட்டு மைதானங்கள் உள்ள பள்ளிகள் தங்களது மைதானங்களை கிரிக்கெட் கிளப், டென்னிஸ் கிளப் என்று கிளப்களுக்கு விட்டுவிடுவதால் கிளப்புகள் அந்த மைதானத்தை பராமரிக்கின்றனர். இதனால் அந்த கிளப்புகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அந்த மைதானத்தில் விளையாட அனுமதி கிடைக்கின்றது. மற்றவர்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் மைதானத்தில் ஒரு பகுதியில் தான் இடம் கிடைக்கிறது.

சென்னையில் மட்டும் சுமார் 42 லட்சம் மாணவர்களுக்கும் மேல் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் விளையாடுவதற்கு நூற்றுக்கும் குறைவான மைதானங்களே இருக்கின்றன. அந்த மைதானங்களில் சில குண்டும் குழியுமாக இருக்கின்றன. சில மைதானங்களில் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள் உலாவுகின்றனர். மைதானங்களின் ஓரங்களின் குப்பைகள் தேங்கிகிடக்கின்றன. ஒரு சிலர் மைதானத்தில் துணிகளை உலர்த்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.  சிலசமயம் அந்தப் பகுதியில் ஏதேனும் சாலை போடுவதாக இருந்தால், சாலைப் போடுவதற்கான பொருள்களை வைப்பதற்காகவும் மைதானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியிருந்தால் சிறுவர்கள் எப்படி விளையாட முடியும்?

இதனைப் போக்க சென்னை மாநராட்சி உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஆங்காங்கே புதிய புதிய பூங்காக்களை அமைப்பதுபோல, புதிய மைதானங்களையும் மாநகராட்சி உருவாக்கினால் சிறுவர்களும், வருங்கால சந்ததியினர் விளையாடுவதற்கும் எதுவாக இருக்கும். 

விளையாட்டு மைதானங்கள் உருவாகும் வரை நாம் காத்திருப்போம்.

(16.02.2009ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: