புதன், டிசம்பர் 31, 2008

மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள்!

சென்னையில் சில சமயம் சாலையில் நடக்கும்போது, மனிதர்களைவிட வாகனங்கள் அதிகமோ என்று எண்ணத் தோன்றும். எங்குப் பார்த்தாலும் வாகனங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறிச் சென்றபடி இருக்கின்றனர். ஒரு நாள் நான் அண்ணாசாலையில் போய்க் கொண்டிருந்தபோது வாகன நெரிசல். தலையை உயர்த்திப் பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள். அதுவும் ஜெமினி மேம்பாலத்தில் இருந்து பார்த்தபோது, ஆயிரக்கணக்கான வாகனங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தன. நடந்துசெல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத் தெரிந்தது.
இப்போது ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். 1981ம் ஆண்டில் சென்னையில் இருந்தவர்களில் 100 நபர்களில் 4 பேரிடம் வாகனம் இருந்ததாம். 1991ம் ஆண்டில் 14 பேரிடம் வாகனம் இருந்ததாம். அதுவே 2001ம் ஆண்டில் 30 பேரிடம் வாகனம் இருந்ததாம். இந்தப் புள்ளி விவரத்தைக் கொடுத்திருப்பது ஒரு தனியார் நிறுவனம். இது ஒவ்வொரு வருடமும் சென்னையில் இயங்கும் வாகனங்களைக் கணக்கெடுத்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் 2003ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்னையில் மட்டும் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதாவது நாளொன்றுக்கு 500 பேர் புதிதாக வாகனங்கள் வாங்குகிறார்கள். அப்படியென்றால், ஐந்து வருடங்கள் கழிந்தபிறகு வாகனங்களின் எண்ணிக்கை எப்படி இருக்கும்? உத்தேசமாக, 100 நபர்களில் 80 பேர் வாகனங்களை வைத்திருப்பார்கள். 
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்கட்டும். அந்த வாகனங்களையெல்லாம் எங்கே நிறுத்தப்போகிறோம்?  நிறுத்துவதற்கான இடம் மிகவும் அவசியமல்லவா? இன்றைக்கும் சென்னையில் வாகனம் வைத்திருப்பவர்களில் நிறையபேர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். பெரும்பாலான அலுவலகங்களின் வாசலில், அலுவலக நேரம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை வாகனங்கள் நிற்பதைப் பார்க்கலாம். அலுவலகம் மட்டும் அல்ல; பெரும்பாலான இடங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாதவர்கள் சாலையோரத்தில் நிறுத்திவிட்டுப் போய்விடுகின்றனர். இது அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்வு.
தியாகராய நகரில் கடையில் துணிகளை வாங்கக் குடும்பத்துடன் வரும் ஒருவர் குடும்பத்தினரைக் கடையின் முன் இறக்கிவிடுவார். ‘வண்டியை நிறுத்திட்டு வந்துடறேன்’  என்று சொல்லிவிட்டு போவார். அவர் வாகனத்தை நிறுத்த இடம் தேடி, கண்டுபிடித்து, நிறுத்திவிட்டு வருதற்குக்குள் அவருடைய குடும்பத்தினர் துணிமணிகளை வாங்கியே முடித்திருப்பார்கள். அந்தளவிற்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது, சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக 13,000 இடங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், தற்பொழுது 5,100 வாகனங்களை நிறுத்துமிடங்கள்தான் இருக்கின்றன. தற்போது சென்னை மாநகராட்சி இந்தக் குறைகளைக் களைய ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதற்காக, 161 இடங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.  
அதற்காக, ‘மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்களைக் கட்டும்  திட்டம்’ என்று அந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது.  
முதலில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாலஸ் கார்டன் பகுதியில் இந்தக் கட்டடத்தைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.  இந்த மல்டி லெவல் பார்க்கிங் கட்டடத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்துவதற்கு வசதியாக இந்தக் கட்டடம் கட்டப்பட இருக்கிறது. இந்தக் கட்டடத்தில் வாகனங்களை நிறுத்த ஒவ்வொருவருக்கும் சுமார் 3 நிமிடங்கள்தான் ஆகுமாம். கட்டடத்துக்கு உள்ளே வரும் வாகனங்களையும், வெளியில் செல்லும் வாகனங்களையும் கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்க முடியுமாம். ஒரு வாகனத்தை நிறுத்த ஒருமணி நேரத்திற்கு 10 ரூபாயும், அதற்குமேல் ஆகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  கூடுதலாக 10 ரூபாயும், அதிகபட்சமாக ஐந்து மணி நேரத்திற்கு 50 ரூபாயும் வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  
மக்களுக்குப் பயன் தரும் இந்தத் திட்டத்தில் பின்னடைவு இருக்காதென்றும், மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் இத்திட்டம் செயல்பட்டுவரும்போது சென்னையில் ஏன் முடியாது என்கிற கருத்தும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. 
இப்படி அதிக வாகனங்கள் வந்து செல்லும் பிராட்வே, தியாகராய நகர் போன்ற சில இடங்களை தேர்ந்தெடுத்து மல்டி லெவல் பார்க்கிங் கட்டடங்கள் அமைப்பதற்கு மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
தியாகராய நகரில் இருக்கும் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாகன நிறுத்துவதற்காக தங்களது சொந்த செலவில் இடங்களை வாங்கி, அதில் வாடிக்கையாளர்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ள நிலையில் சென்னை மாநகராட்சியால் இது முடியாமல் போகுமா என்ன?
இன்னும் சில வருடங்களில் சென்னையில் வாகன நிறுத்துவதற்கான கட்டடங்கள் அதிகப்படுத்தப்பட்டு, சென்னை சாலையோரங்களில் வாகனங்களே நிறுத்துவது இல்லை என்று சொல்லும்படி திகழப் போவது உண்மை. இத்திட்டத்தினால் சென்னை மக்கள் பயன் பெறப்போகும் நாட்களை எண்ணிக் கொண்டேயிருப்போம்.

(24.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: