வியாழன், ஜூன் 04, 2009

‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’

















பைத்தியக்கார உலகம்


யாராவது உங்களைப் பார்த்து பைத்தியம் என்றால் உங்களுக்குக் கோபம் வருமா? வராதா?

அப்ப வராதா? என்று கேட்காதீர்கள். கண்டிப்பாக வர வேண்டும். அப்படி கோபம் வரும் என்றால் இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

உலகில் எங்காவது ஓர் மூலையில் யாராவது ஒருவர் பைத்தியக்காரத்தனமானச் செயல்களைச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு முன்னரும் இருந்திருக்கிறார்கள். உலகப் புகழ் பெற்றவர்களும் அடங்குவர்.

உலகின் மகா கிறுக்கன்கள் சிலரைப் பற்றி பார்ப்போமா?

நாம் எதைச் சாப்பிட்டாலும் நான்கைந்து முறை மென்றுவிட்டு உணவை முழுங்கிவிடுவோம். ஆனால், ஒருவர் சாப்பிடும்போது வாய்க்கு உணவு போனவுடன் ஒரு பல்லுக்கு முறையென 32 முறை மென்றபிறகே முழுங்குவாராம். இப்படி ஒரு வாய் உணவிற்கு மட்டும் இந்தச் செயலைச் செய்ய மாட்டாராம். ஒவ்வொரு வாய் உணவிற்கும் அவரின் செய்கை இருக்குமாம். அவர் யார் தெரியுமா? இங்கிலாந்தில் நான்கு முறை பிரதம மந்திரியாக இருந்த வில்லியம் கிளாடுஸ்டோன் என்பவருக்கு தான் இந்த விநோதமாக பழக்கம் இருந்திருக்கிறது.

நியுயார்க்கிலுள்ள ஓர் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்தவர் ஆதர்ஸ்ட் பெல்மார். இவருக்கு சிறுவயதிலிருந்தே குதிரை பைத்தியம். குதிரை என்றால் போதும் உலகையே மறந்துவிடுவாராம். தனது பிள்ளைகளைக் காட்டிலும் குதிரையின் மேல் அன்பை அதிகம் பொழிந்தாராம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எப்படி? குதிரைகள் தூங்குவதற்காக வீட்டுக்குள்ளேயே படுப்பதற்கு மெத்தை, நான்கு கால்களுக்கு தலையணை என சகல வசதிகளையும் குதிரைகளுக்கு செய்து கொடுத்திருக்கின்றார்.

பென்ரோஸ் ஒரு அமெரிக்கப் பெண்மணி. இவர் எப்படியென்றால் நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி போல எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு சமயம் அமெரிக்காவில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல் என பயங்கரமான மழையில் இவரது வீடு பலத்த சேதமுற்றது. பென்ரோஸுக்கு பயங்கரமான கோபம் வந்தது. மழை நின்றவுடன் நீதிமன்றத்திற்கு நேராகச் சென்று திட்டமிட்டே தனது வீட்டை சேதப்படுத்தியதாக கடவுள்மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். நஷ்ட ஈடாக ஒரு லட்சம் டாலரும் கேட்டிருந்தார். 1969ம் வருடம் போடப்பட்ட இந்த கேஸ் தள்ளுபடியானது.

உலகப் புகழ் பெற்ற ஓவியர் சல்வடார் டாலி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். லண்டனில் ஒரு ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைக்க வேண்டுமென்று கண்காட்சியை நடத்துபவர்கள் இவரிடம் கேட்டிருந்தனர். இவரும் வருகிறேன் என்றார். விழா நாளும் வந்தது. கண்காட்சியை நடத்துபவர்கள் இவரை வரவேற்க வாயிலில் காத்திருந்தனர். கார் வந்தவுடன் விழாக் குழுவினர் காரினருகே வந்து வரவேற்க தயாரானார்கள். கார் கதவு திறக்கப்பட்டு, டாலி நீச்சல் உடையில் வந்திறங்கினார். எல்லோருக்கும் அதிர்ச்சியடைந்தார்கள். அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத டாலி “இந்த உலகம் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும்என்று சொன்னாராம்.

இதுபோல் உலகில் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு துறைகளிலும், பல்வேறு விதமான பைத்தியங்கள் இருந்திருக்கிறார்கள். ‘பைத்தியக்கார உலகமடா’ என்பது சரியாகத்தான் இருக்கிறது.

சரி. இனிமேலாவது, ‘போடா லூசு’, ‘லூசுத்தனமாப் பேசாத’, ‘லூசாட்டம் பண்ணாத’ என்று யாராவது சொன்னால் யோசித்துக் கோபப்படுங்கள்.


2 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

கொப்புரான நல்லாருக்கு...! ம்ம் நிறைய எழுதுங்க!

கீழ்ப்பாக்கம் கிருஷ் சொன்னது…

ஹஹ ஹ்ஹஹஹ்ஹா ஹிஹி ஹூஹூஹூ ஹேஹேஹேஹெஹே... அய்யோ அய்யோ!