
இறைவனே கூறு
புண்ணிய பூமியிது
புனித பூமியிது - இன்று
புண்ணியமும் இல்லை
புனிதமும் இல்லை
பாலில் தண்ணீர்
சர்க்கரையில் ரவை
அரிசியில் கல் - போலிகள்
களைபோல் வளர்ந்து
ஆல்போல் நிற்கிறது
தேன் கூட்டிற்கு நெருப்பாய்
மான் கூட்டத்தில் நரியாய்
சிவபூஜையில் கரடியாய்
இவர்கள் நுழைந்தார்களோ?
வார்த்தை ஜாலங்கள்
வண்ண வண்ண மலர்கள்
வசதியான ஆசனங்கள்
வசீகரமான பார்வைகள்
கடவுளின் சீடரென்றும்
கடவுளே தானென்றும் - இதில்
பொய்யில்லை யென்பார்
புரட்டுமில்லை யென்பார்
பொழுது சாய்கையிலோ
புரட்டி எடுத்திடுவார்
கன்னிப் பெண்களை
கடவுளின் பெயரால்
சிறியப் பெண்ணைப் பார்க்கையில்
சிங்காரமாய் சிரித்திடுவார்
மந்திரம் என்ற
தந்திரச் சொல்லைக் கூறி
மஞ்சத்தில் கிடத்தி
நெஞ்சத்தில் அணைத்திடுவார்
பெண்களே!
இறைவனின் பெயர் சொல்லி
அழைப்பவர்களிடம்
இதயத்தை பறிகொடுத்து
இரக்கமற்ற பாவிகளிடம்
இழந்துவிடாதீர்கள் கற்பை
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாறுவீர்கள் பெண்களே
இனியாவது விழித்திடுங்கள்
இறைவன் மனதில் இருக்கிறான்
மனதை ஆழப்படுத்திப் பார்
மகத்தான ஒளியில் தெரிவான்
இறைவனுக் கெதற்கு
ஏஜென்ட்?
இனியாவது
எச்சரிக்கையா யிருங்கள்
சாமியார்களிடம்
இவ்விஷயத்தில் மட்டும்
மதங்களின் ஒற்றுமை
ஏன்?
இறைவனே
பதில் கூறு