வெள்ளி, பிப்ரவரி 27, 2009

கண்காணிப்புக் கேமராக்கள் உஷார்!

என் நண்பர் ஒருவருக்கு சிறு விபத்து நடந்திருந்தது. அவரைப் போய்ப் பார்த்த நான், பொதுவாக சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ‘என்னங்க ஆச்சு?’ என்று கேட்டேன்.

‘வண்டில போய்க்கிட்டு இருந்தேன். சிக்னல்ல சிவப்பு விளக்கு எரியறதைப் பாத்ததும் வண்டியை நிறுத்திட்டேன். பின்னால வேகமா வந்த ஒரு வண்டிக்காரர் என்னை இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டார்.’ என்றார் நண்பர்.

பாவம் என் நண்பர். காலில் அடிபட்டு இருபது நாட்களாக அலுவலகத்துக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்.

சென்னை நகரைப் பொறுத்தவரை, சாலைவிதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கைக் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் சிக்னல்களில் நடக்கிற அத்துமீறல்களைக் கேட்கவே வேண்டாம்.

சிக்னலில், சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்த வேண்டுமென்பதும், மஞ்சள் விளக்கு எரிந்தால் வாகனம் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் தயாராக வேண்டும் என்பதும், பச்சை விளக்கு எரிந்தால் வாகனம் செல்லலாம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் இதனை மதிப்பவர்கள் எத்தனை பேர்?

நான் ஒரு நாள் ஆழ்வார்ப்பேட்டை சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் வேகமாக வந்துகொண்டிருந்தன. அந்த வாகனங்களை நிற்கச் சொல்லும் மஞ்சள் விளக்கு சிக்னலில் எரிந்தது. ஆனால் யாரும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அதே சமயம் எனக்கு பின்னால் இருந்த பேருந்து ஒட்டுநர் என் காது செவிடாகும்படி ஹாரனை அடித்துக்கொண்டிருந்தார். அவர் அழுத்திப்பிடித்த ஆக்ஸிலேட்டரில் பேருந்து உறுமியபடி நகர ஆரம்பித்திருந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். ‘போ, போ!’ என சைகை செய்தபடி என் வாகனத்தை இடிப்பதுபோல பேருந்தை ஓட்டினார் அந்த ஓட்டுனர். நான் சுதாரித்துக்கொண்டு என் வாகனத்தை விரட்டவேண்டியதாயிற்று.

பெரும்பாலும் பேருந்துகளும், ஆட்டோக்களும் சிக்னலில் அத்து மீறுகின்றன என்பது என் கருத்து. எல்லைகோட்டை தாண்டி நிற்பதை ஒரு ஸ்டைலாக நினைக்கிறார்கள் சிலர். சைக்கிள் ஒட்டுபவர்கள் இவை எல்லாவற்றையும்விட ஒரு படி அதிகம். அவர்கள் சிக்னல் என்பதை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு சிக்னலைக் கடந்துவிடுகின்றனர்.

அதே போல அதிகாலையிலும், இரவு நேரத்திலும் சிக்னல் என்ற ஒன்று இருப்பதை எல்லா வாகன ஒட்டுநர்களும் மறந்தே போய்விடுகிறார்கள். தப்பிதவறி யாராவது ஒருவர் போக்குவரத்து விதிகளை மதித்து, சிக்னலில் நின்றால், அவரைக் கடந்து செல்பவர்கள் ஒருமாதிரியாக பார்த்துவிட்டுச் செல்வார்கள். ஒரு சிலர் பக்கத்தில் வந்து ‘போயேன்யா’ என்று திட்டிவிட்டுப் போவதும் நடக்கும்.

இரவு பத்து மணியிலிருந்து மறுநாள் காலை ஆறு மணி வரைக்கும் சில சிக்னல்களில் சிவப்பு விளக்கும், சில சிக்னல்களில் மஞ்சள் விளக்கும் மின்னிக் கொண்டேயிருக்கும். ஆனால் அதனை யாரும் பொருட்டுபடுத்துவதே இல்லை. ஒரு முறை நானும் எனது நண்பரும் ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கருகில் ஒரு பைக் வந்து நின்றது. அதில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். குடிபோதையில் வேறு இருந்தனர். அவர்களில் ஒருவன் எனது நண்பர் அணிந்திருந்த ஹெல்மெட்டை தட்டி, ‘என்ன சந்திர மண்டலத்துக்கா போற?’ என்று கிண்டல் செய்து சிரித்தனர்.

சிக்னல் இருக்கும் இடங்களில் டிராபிக் போலீஸ்காரர் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், சிக்னலை மதித்து வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு சிக்னலுக்கும் ஒரு போலீஸ்காரர் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

தற்போது போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்தவதற்காகவும் கண்டுபிடிப்பதற்காகவும் சென்னையில் கூடுதலாக 20 புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவிருக்கின்றன.

ஏற்கெனவே, சென்னையில் 14 இடங்களில் போக்குவரத்து விதிகள் மீறலை தடுப்பதற்காக, சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதற்காக காவல்துறை நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

போர் நினைவு சின்னம், தலைமை செயலக வெளி-வாயில், வீல்ஸ் இந்தியா, வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலை, பெரியார் சிலை, எஸ்.என்.செட்டி சாலை, கத்திப்பாரா சந்திப்பு, மத்திய கைலாஷ், ஆல்டா, ராஜ்பவன், வடபழனி நூறடிசாலை, போரூர் ரவுண்டானா, அண்ணாநகர் ரவுண்டானா, விமான நிலையம், கிரீன்வேஸ் சாலை, அசோக் பில்லர் போன்ற 20 இடங்களில் உள்ள சாலை சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதுதவிர குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைக் கண்டு பிடிப்பதற்காக போக்குவரத்து போலீசாருக்கு நவீன கருவிகள் தரப்பட்டு உள்ளன.

விபத்து அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, விபத்துடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட-விருக்கிறது.

அதிக அளவிலான வாகனங்கள் ஒடுவதால், சில சிக்னல் காட்டும் கருவிகள் மீது அழுக்குப் படிந்து விடுகின்றன. இதனால் வயதானவர்கள் வாகனம் ஒட்டும்போது என்ன விளக்கு எரிகிறதென்றே தெரிவதில்லை. அவ்வபோது சிக்னல்களை சுத்தம் செய்தால் விளக்குகளும் பளிச்சென்று எரியும். வாகனம் ஒட்டுபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

சாலை விதி என்பது பாதுகாப்பான ஒன்று. அதைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம். சாலைவிதிகளை கடைபிடித்தால் நாம் விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நம் வாழ்க்கையில், நமக்காக ஒரு விதியைக் கடைபிடித்து வாழும் நாம் சாலை விதிகளையும் சற்று கடைபிடிப்பது நல்லது.
நகரின் முக்கிய சாலைகளில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதால், சாலை விதிகளை மீறுபவர்கள் இனிமேல் சரியாகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

(13.02.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை: