திங்கள், ஜனவரி 12, 2009

மூச்சு முட்டும் நெரிசல்.

அது ஒரு காலை நேரம். குழந்தையை இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சாலையைக் கடக்க வேண்டியிருந்தது. ஹாரன் அடித்துவிட்டுக் கடந்தேன்.  பாதிதூரம் போயிருப்பேன். அப்போதுதான் அந்த ஆட்டோ வந்தது. வலதுபக்கத்திலிருந்து படு வேகமாக, வந்தது. நான் சட்டென்று பிரேக்கைப் போட்டு என் வண்டியை நிறுத்திவிட்டேன். நல்லவேளையாக அந்த ஆட்டோவும் நின்றுவிட்டது. அந்த ஆட்டோவுக்குள் பள்ளிக் குழந்தைகள் இருந்தார்கள்.  எப்படியும் பத்து குழந்தைகளாவது இருப்பார்கள். 
‘ஏம்பா! ஆட்டோல குழந்தைகள வைச்சுகிட்டு இவ்வளவு வேகமா வர்றியே! கொஞ்சம் மெதுவாக வரக்கூடாதா?’ என்று ஆட்டோ ஒட்டுநரிடம் கேட்டேன்.
‘உனக்கென்னய்யா தெரியும்? இன்னும் ரெண்டு டிரிப் அடிக்கணும். உன் வேலைய பாத்துகிட்டு  போய்யா!’ என்று சொல்லிவிட்டு ஆட்டோவை ‘விருட்’டென்று எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் அந்த ஆட்டோ நண்பர். அவருடைய குரலில் எரிச்சல் விரவிக்கிடந்தது. நான் அந்த ஆட்டோ டிரைவரைக் குறை சொல்லவில்லை. சாலைகள் குறிக்கிடும்போது, குறைந்தபட்சம் ஹாரனை ஒலிக்கவேண்டும் என்கிற அடிப்படைகூடத் தெரியாதவரா அந்த ஆட்டோக்காரர்? இல்லை. ஆனால், அவசரம். காலில் சக்கரம் முளைத்த மாதிரியான அவசரம். அதுதான் அவரை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.
தினமும் காலை 7 மணி முதல் 9,30 மணி வரைக்குமான நேரம் பரபரப்பான நேரம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் அனைவரும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வீட்டில் மட்டும் இல்லாமல்,  சாலைகளிலும் அந்தப் பரபரப்புத் தெரியும். 
கிடைக்கிற சிறிய இடைவெளியிலும் மூக்கை நுழைத்துச் செல்ல முயலும் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள். தனக்கும், தன் காருக்கும் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில் கார் ஒட்டுநர்கள். வேகமாக வந்து பயமுறுத்தும் தனியார் வேன்கள். குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வேன்கள், பேருந்துகள். இப்படி விதவிதமான வாகனங்களை இந்தநேரத்தில் பார்க்கலாம்.
இரு சக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுகொண்டிருப்பார். அவரைத் தவிர முன்னால் ஒரு குழந்தை, பின்னால் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள்.  கூடவே குழந்தைகளின் பள்ளிக்கூடப் பைகளும்  சாப்பாட்டுக் கூடையும் இருபக்கமும் தொங்கிக்கொண்டிருக்கும். 
குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவில் எட்டுக் குழந்தைகளாவது இருப்பார்கள்.  ஆட்டோவின் இரு புறங்களிலும் பிதுங்கி வழிகிற மாதிரி அவர்களுடைய பைகள் நீட்டிக்கொண்டிருக்கும். இது தவிர படு வேகமாகக் குழந்தைகளை ஏற்றி வரும் கார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் மெதுவாக வருகின்றனவா  என்றால்  அதுதான் இல்லை. குழந்தைகளை ஏற்றிச் செல்கிறோமே என்கிற பொறுப்பில்லாமல்தான் பல வாகனங்கள் சாலைகளில் தலைதெறிக்க விரைகின்றன.
குழந்தைகளை சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான். ஆனால், அதற்காக சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவது நமக்கும் நல்லதல்ல, நம் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.
‘சென்னை முழுவதும் இந்த நேரத்தில் வாகன நெரிச்சல் ஏற்படுகிறது’ என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அதுவும் தென்சென்னையில் இந்த நெரிசல் மிக அதிகம். அதற்குக் காரணம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி பகுதிகளில்  சுமார் 50 மேற்பட்ட பள்ளிகள் இருப்பதுதான். 
குறிப்பாக மயிலாப்பூர் சாயிபாபா கோவிலைச் சுற்றி நிறைய பள்ளிகள் இருக்கின்றன. அர்ச்சுனனுக்கு கிளியின் கழுத்து மட்டுமே குறியாக தெரிந்ததுபோல, இந்தப் பள்ளிக்கு வரும் வாகன ஒட்டிகளுக்கு பள்ளியில் குழந்தைகளை எப்படியாவது விட்டுவிட வேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் இருக்கிறது. அதற்காக இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுகிறார்கள். முறையில்லாமல், இண்டு இடுக்குகளில்கூட நுழைந்து விடுகிறார்கள். அதனாலேயே இங்கு தினமும் வாகன நெரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.   
ஒவ்வொரு வாகனமும் மற்ற வாகனத்தை முந்திக்கொண்டு முதலில் செல்லவேண்டும் என்ற எண்ணத்துடனேயே செல்கின்றனவே தவிர, எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும் என்ற எண்ணம் எதற்கும் இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். பள்ளி காவலாளி சொல்லச் சொல்ல கேட்காமல், பள்ளியின் கேட்டுக்கு அருகிலேயே கார்களை நிறுத்திவிட்டு போகின்றவர்களும் இருக்கிறார்கள். பள்ளி நிர்வாகம் எதற்கு வாயிலில் காவலாளிகளை ஒன்றுக்கு இரண்டாக நியமித்து அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கிறது? நம் குழந்தைகளை பாதுகாக்கத்தானே? அதற்கு நாமே ஒத்துழைக்க மறுத்தால் எப்படி?  கார்களை இப்படி வாசலை அடைத்தபடி நிறுத்திவிட்டுப் போகிறவர்கள் இதை யோசித்துப் பார்க்கவேண்டும். 
இது மட்டுமல்ல. தண்ணீர் கேன் கொண்டு செல்லும் வாகனங்கள் காலை நேரத்தில்தான் தண்ணீர் கேன்களை எடுத்துச்செல்லவும்,  காலியான தண்ணீர் கேன்களை இறக்கி வைக்கவும் வந்து நிற்கும். அவர்களிடம் ‘ஏம்பா, ஸ்கூல் நேரத்துல இப்படி வந்து நிக்கிறீங்களே?’ என்று யாராவது கேட்க முடியுமா? கேட்டால், வேன் ஒட்டுபவர் பதில் எதுவும் சொல்ல மாட்டார். அந்தக் கேள்வி கேட்பவரை முறைத்துப் பார்ப்பார். கேள்வி கேட்டவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல், வாய்மூடி  புலம்பிக் கொண்டே போக வேண்டியதுதான். 
பள்ளிக்குச் செல்லும் சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் ஆட்டோக்கள் விரையும்போது நெரிசல் வரத்தான் செய்யும். சில சமயங்களில் நெரிசல் ஏற்படும்போது, ஆட்டோ ஒட்டும் நண்பர்களும் சில பொது மக்களும் அதனை சீர்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம். இந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். 
இந்த நெரிசல் பிரச்னையை எப்படித் தீர்ப்பது. நாளுக்கு நாள் வாகங்னகளீன் எண்ணிக்கை அதிகமாகிவரும் இன்றையச் சூழலில் நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், நெரிசலைக் குறைக்க நம்மால் முடிந்ததைச் செய்யலாம். எப்படி? 
அதற்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் முறையாக சாலைவிதிகளைக் கடைபிடிக்கவேண்டும். முடிந்தவரை குழந்தைகளை பள்ளிகளுக்கு சீக்கிரமே அழைத்துச் செல்லவேண்டும். பள்ளியில் குழநதைகளை விட்டுவிட்டு வரும்போது, பள்ளிக்குச் செல்லும் மற்ற வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடவேண்டும். சாலைகளில் முறைத்துக்கொண்டு நிற்காமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். இவற்றை நாம் கடைபிடித்தாலே காலைப்பொழுது நன்றாக இருக்கும். கூடுமானவரைக்கும் நெரிசலில் இருந்து தப்பிக்க வழியும் பிறக்கும்.  எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைகளை சுமந்து செல்கிறோம் என்கிற எண்ணம் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் அழுத்தமாக மனத்தில் பதிய வேண்டும். 

(18.12.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: