புதன், டிசம்பர் 31, 2008

பக்கிங்ஹாம் கால்வாய் சுத்திகரிப்பு - ஒரு பார்வை

சென்ற மாதம் வரைக்கும் சென்னையில் அடித்துக் கொளுத்திய வெயிலுக்கு சலித்துக் கொள்ளாத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு  சென்னைவாசிகளை சுட்டெரித்துக்கொண்டிருந்தது வெயில் என்பது நிதர்சனமான உண்மை. வியர்வை மழை, கசகசப்பு, புழுக்கம் என்று படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள் சென்னைவாசிகள். இப்போது வடகிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அப்புறமென்ன! இனிமேல் நாள்முழுக்க மழைக் குளியல் என்று உற்சாகப்படலாமா? ஆனால், அதுவும் முடியாது. என்ன காரணம்? 
மழை பெய்தால் சென்னை முழுக்க மழைநீர் ஆறாக ஓடும். தெரு முழுக்க மழைநீர் தேங்கி நிற்கும். மழைநீரில் கலந்துகிடக்கும் குப்பை, கூளங்களில் கால்களை வைத்து நடக்க வேண்டியிருக்கும். இது சென்னையில் இருப்பவர்களைன் தற்போதைய கவலை. 
சரி, சாலைகளில் மழைநீர் ஏன் தேங்குகிறது? அதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதற்கு முக்கியக் காரணம் நாமாகத்தான் இருக்கிறோம். சென்னையில்  கால்வாய்களை ஒட்டி இருக்கும் பகுதிகளில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் வீட்டுக் குப்பைகளையும் கழிவுகளையும் அதற்கான குப்பைத் தொட்டிகளில் போடுவதில்லை. கால்வாயில் வீசி எறிந்துவிடுகிறார்கள். அதோடு, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளின் கழிவுகளாலும் கால்வாய்கள் மாசுபடுகின்றன. எல்லாக் குப்பைகளும் கால்வாய்களில் போய் அடைக்கலமாகின்றன. அடைத்துக்கொள்கின்றன. 
கடைசியில், கால்வாய்களிலிருந்து கழிவுநீர் போக வழியில்லாமல், மண் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக நீர் ஓடுவதற்கு வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அந்தத் தேக்கம் சாலை வரைக்கும் வந்து, அதனால் சாலைகளிலும் மழைநீர் தேங்குகிறது.
ஆனால், இந்த ஆண்டு இப்படி மழைநீர் தேங்குவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் முடிவு கட்டியிருக்கிறது நம் பொதுப் பணித்துறை. அதற்காகவே, சென்னை நகரிலுள்ள முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை படுவேகமாக முடுக்கி விட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் இருக்கும் ஒரு முக்கியமான கால்வாய் பக்கிங்ஹாம் கால்வாய்.
பக்கிங்காம் கால்வாயைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. உலகம் முழுக்க பிரபலமானது பக்கிங்ஹாம் கால்வாய். சென்னைக்குள் வருகிறவர்கள், இந்தக் கால்வாயைத் தாண்டித்தான் வரவேண்டும். 
1876ம் ஆண்டு சென்னையில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது அப்போது ஆளுநராக இருந்த பக்கிங்ஹாம்  என்பவர் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாறையும் கூவத்தையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் படகில் சென்று வர்த்தகம் செய்வதற்காக பயன்பட்டிருக்கிறது இந்தக் கால்வாய். 170 கிலோ மீட்டர் நீளம் கொண்டது இந்தக் கால்வாய். 1950ஆம் ஆண்டு வரைக்கும் இதில் படகுப் போக்குவரத்து நடந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் கழிவுநீரைத் தேக்கி வைக்கும் சாக்கடையாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது என்பது வேதனையளிக்கக் கூடிய விஷயம். முதல் வேலையாக இந்தக் கால்வாயைத்தான் சுத்தம் செய்ய இருக்கிறார்கள் பொதுப் பணித்துறையினர். அந்த வேலையைக்கூட பிரித்துவிட்டிருக்கிறார்கள். வடசென்னை பக்கிங்ஹாம், தென்சென்னை பங்கிங்ஹாம், மத்தியசென்னை பக்கிங்ஹாம் என மூன்று பிரிவுகளாக இந்தக் கால்வாயைப் பிரித்து சுத்தம் செய்ய இருக்கிறார்கள். 
எண்ணூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இருப்பதை வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், சேப்பாக்கம் முதல் கோட்டூர்புரம் வரை இருப்பதை மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் என்றும், கோட்டூர்புரம் முதல் திருவான்மியூர், சோழிங்கநல்லூர் வரை தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் என்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர ஓட்டேரி, வேளச்சேரி, ஒக்கியம் மடுவு, போரூர், அம்பத்தூர், அயப்பாக்கம் போன்ற ஏரிகளின் உபரி நீர் செல்லும் மதகுகளையும் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக அரசு 4.05 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியும் தனது பங்குக்கு ரூ. 61 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழையினால் சென்னையில் ஆங்காங்கே தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 86 மோட்டார் பம்புக்களையும், விவசாயத் துறையிடமிருந்து பெற்ற 35 ஹெக்டேர் திறன் கொண்ட 15 பம்புகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது மாநகராட்சி.
மாநகராட்சி சார்பில் இதுவரை 51 கோடி ரூபாய் செலவில் 104 கி.மீ. நீளம் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 கி.மீ. நீளத்துக்கு வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.
போர்க்கால அடிப்படையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் செய்வதற்காக ஊழியர்கள், அலுவலர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என முக்கியப் பணியிலுள்ளோரை மழைக் காலத்தில் விடுமுறையில் செல்ல வேண்டாமென மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், சென்னையில் எந்தப் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றாலும், அதைப்பற்றிக் கவலை கொள்ளாமல் சென்னை மக்கள் மாநகராட்சியின் அவசர உதவி எண் ‘1913’ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கப்படும் என்றும், இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

இனி, நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  சாலைகளில் மழைநீர் தேங்கிக்கிடப்பதைக் கண்டால் கண்டும் காணாமலும் போய்விடாமல் மாநகராட்சியின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். இப்படிச் செய்தால், மழையால் ஏற்படும் முகச் சுளிப்பிலிருந்து கொஞ்சமாவது சென்னைவாசிகள் தப்பிக்கலாம். 

(20.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: