புதன், டிசம்பர் 31, 2008

சர்வதேசத் தரத்தில் சென்னை விமானநிலையம்

நம் இந்தியப் பொருளாதரத்தில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று அந்நியச் செலாவணி. அந்நிய முதலீடுகள், வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் ஆகியவற்றின் மூலமாக வரும் அந்நியச் செலாவணி நம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. இதை மனத்தில் ஓர் ஓரத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்டு, மேலே செல்வோம். 
இன்றைக்கு தரம் என்பது, அதிலும் உலகத்தரம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பேசப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. சாதாரண பேருந்து நிலையத்தில்கூட அடிப்படை வசதிகள் நவீனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற காலம் இது. 
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்தை முன் வைத்தது ‘இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம்.’ இதற்கு பொதுத்துறை முதலீட்டு வாரியமும் அனுமதி அளித்திருந்தது. அதன்பிறகு, பிரதமரின் தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை அளித்து, திட்டத்தை செயல்படுத்த 1808 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது. இன்றையச் சூழலில் சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்திற்கான தேவை இருக்கிறது என்பதுதான் உண்மை.   
இந்தியாவில் வெளிநாட்டுப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் விமான நிலையங்களில் ஒன்று சென்னை விமான நிலையம். மீனம்பாக்கம் என்றாலே, நமக்குச் சட்டென்று விமான நிலையமும் விமானங்களும்தான் நினைவுக்கு வரும். தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில் விரையும்போது, தலைக்கு மேல் பறக்கும் விமானங்களை இன்றைக்கும் குழந்தைகளைப் போல குதூகலமாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். 
சில நாட்களுக்கு முன்னால்கூட ஒரு கிராமத்திலிருந்து பேருந்தில் சென்னைக்கு வந்த கிராம மக்கள், பேருந்தின் மேல் தளத்தின் மேல் நின்றுகொண்டு, விமான நிலையத்தை வேடிக்கை பார்த்ததை ஒரு நாளேடு புகைப்படமாக வெளியிட்டிருந்தது. 
தற்போது சென்னை விமான நிலையம், ‘அண்ணா பன்னாட்டு விமான நிலையம்’, ‘காமராசர் உள்நாட்டு விமான நிலையம்’ என்று இரு பகுதிகளாக இயங்கி வருகிறது. இந்த இரு விமான நிலையங்களும்தான் தற்போது புதுப்பிக்கப்பட உள்ளன. சர்வதேச தரத்திற்கு சென்னை விமான நிலையம் உயரப்போகிறது.  
தற்போது சில ஆயிரம் சதுர அடிகளில்தான் இந்த விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரிவாக்கத்தின்படி, சுமார் 65000 சதுர அடியில் பன்னாட்டு விமான நிலையமும், சுமார் 75000 சதுர அடியில் உள்நாட்டு விமான நிலையமும் விரிவாக்கம் செய்யும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது.
இதன்படி விமான நிலையத்தின் ‘ரன்வே’ எனப்படும் இரண்டாவது ஓடு தளம், மேலும் 832 மீட்டர் தூரத்திற்கு அதிகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பிறகு, இரண்டாவது ஓடு தளத்தின் நீளம்  சுமார் 2917 மீட்டராக இருக்கும். இந்த ஓடு தளத்துக்கு இணையாக 150 கோடி ரூபாய் செலவில் ‘டாக்சி வே’ அமைக்கப்பட இருக்கிறது. இவை மட்டுமில்லாமல், கூடுதலாக பார்க்கிங் வசதிகளும், அதிக விமானங்களை நிறுத்தும் வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன.  
சென்னை விமான நிலையத்துக்கு தற்போது, ஒரு மணி நேரத்துக்கு 250 விமானங்களை இயக்கும் திறன் உள்ளது. அது விரிவாக்கத்துக்குப் பிறகு, 500 விமான இயக்கத் திறனாக அதிகரிக்கும். 
70களில் குறைந்த அளவே விமானங்கள் வந்து சென்ற சென்னை விமான நிலையத்தில் தற்பொழுது வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட விமானங்கள் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து செய்கின்றன என்பது நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமலுமிருக்கலாம். விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு எத்தனை விமானங்கள் வந்து செல்லும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கான Sitting Room, Waiting room  அதாவது அமரும் அறை, காத்திருக்கும் அறை ஆகியவை விமானநிலையத்தின் முதல் தளத்திலும், அதே போல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான அறை கீழ்த் தளத்திலும் அமையவிருக்கிறது. புதிய விமான நிலையத்தை இயற்கை வெளிச்சத்தில் அமையுமாறு அமைக்கவிருக்கிறார்கள். இது மின்சாரச் செலவை கட்டுப்படுத்தும். 
பயணிகளை வழி  அனுப்ப மற்றும் வரவேற்க வருவோரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 47000 சதுர அடியில் ‘மல்டிலெவல் கார் பார்கிங் வசதி’ தரைத் தளத்திலும், கீழ் தளத்திலுமாக அமைக்க, பணிமேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பார்க்கிங் வசதியால் 2000க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த இடம் இருக்கும் என்கிறார்கள்.
வருடத்திற்கு சுமார் 4 மில்லியனிலிருந்து 16 மில்லியன் வரை மக்கள் வந்து செல்ல வசதியாக விமான நிலையம் அமையும். சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட்டால், இயல்பாகவே சென்னைக்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது உண்மை. 
‘சென்னை விமான நிலையம் விரிவாக்கம்’ என்பது ஒரு திட்டம் மட்டும் அல்ல. இதன் மூலம் எத்தனையோபேர் பயனடைவதற்கான வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. பல வெளி நாட்டுப் பயணிகள், வசதிக்குறைவு என்கிற மன வருத்தம் இல்லாமல், சர்வதேச தரத்தில் அமைந்த வெளிநாட்டு விமான நிலையத்துக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். இதன் மூலம், இயல்பாகவே வெளிநாட்டு பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  
(21.10.2008ல் ஆல் இண்டியா ரேடியோவில் வாசிக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை: