வெள்ளி, ஏப்ரல் 03, 2009

யானை, பூனை வளர்க்கலாம் வாங்க

பிராணிகளைத் தத்தெடுக்கலாம் வாங்க

எனது அலுவலகத்தின் மேலதிகாரியின் வீட்டுக்கு ஒருநாள் சென்றிருந்தேன். அப்போது அவர் தான் வளர்க்கும் நாயுடன் அன்பாக பேசிக்கொண்டிருந்தார். என் மனதில் ‘என்னடா இவரு நாய்கூடவெல்லாம் பேசுறாருன்னு’ கேள்வி எழுந்தது. அதை அவரிடமே கேட்டும் விட்டேன்.

‘என்ன சார் நாயோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?’ 

‘சார், பப்பின்னு சொல்லுங்க. நாய்ன்னு சொல்லாதீங்க.  ப்ளீஸ். இந்த பப்பியும் எங்க வீட்டுல ஒரு மெம்பர்தான்’ என்றார்.

இப்படி நம்மில் சிலர் வீட்டு விலங்குகளிடம் மிகவும் அன்பாக பழகிக்கொண்டு தானிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு நாய் பிடிக்கும். ஒரு சிலருக்கு பூனை பிடிக்கும். வேறு சிலருக்கு இவைகளை விட்டு கிளி, லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

நாய், பூனை வளர்ப்பவர்கள் அதனை விலங்குகளாக பார்ப்பதில்லை. தன் வீட்டுப் பிள்ளையாகத்தான் பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரே பூனைக் கூட்டமாகதான் இருக்கும். எந்நேரமும் அந்த வீட்டிலிருந்து ‘மியாவ்’ சத்தம்தான் அதிகம் வரும். அந்த வீட்டுப் பெண்மணிக்கு பூனையென்றால் அவ்வளவு ஆசையாம்.

ஒரு சிலர் இதற்கும் மேலே போய்விடுவதும் உண்டு.  போட்டோ ஸ்டூடியோவில் ஒருவர் நாயின் சின்னப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ‘சார், இத தயவு செய்து பெரிசு பண்ணி தாங்க. எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. போட்டோவ பெரிசாக்கித்தாங்க. இத நாய்ன்னு நெனைக்காதீங்க. எம்புள்ள சார்.’ என்றபடி அழுதுவிட்டார்.

நம் நாட்டில் செல்லப் பிராணிகளாக கருதப்படுபவை நாய், பூனை, கிளி, புறா, முயல் போன்றவை. குதிரையை வியாபாரத்திற்காக  சிலர் வளர்த்து வருகிறார்கள். பசுவை நாம் தெய்வமாக எண்ணி சில வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். கோயில்களில் பசுக்களையும், வளர்க்கிறார்கள். சில கோயில்களில் யானைகளும் சேர்த்து வளர்ப்பார்கள்.

வெளிநாடுகளில் சிலர் காட்டு வாழும் விலங்குகளை தன் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவதையும், அவைகளுக்கு வீட்டிலேயே தனி அறையை ஒதுக்கி, சகலவசதியும் கொடுத்திருப்பதையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். இதனைப் பார்க்கும்போது நாமும் இதுபோல் காட்டு மிருகங்களை வளர்க்க முடியாதா? என்ற ஏக்கம் நமக்கு தோன்றும். 

கடவுளாக விலங்குகளை நாம் வழிபட்டாலும், நம்மால் வீட்டில் வனவிலங்குகளை வளர்க்க முடியாது. ஏனென்றால் நம் நாட்டு (இந்தியா) சட்டம் அதற்கு இடம் தராது. 

ஆனால் நம்முடைய ஏக்கம் நீண்ட நாள் நீடிக்காமல், நமது ஆசையை நிறைவேற்ற போகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா. எப்படி? இந்தப் பூங்காவில் இருந்துதான் நாம் மிருகங்களை தத்து எடுத்து வளர்க்கப் போகிறோம். 

ஏற்கெனவே மைசூர் உள்ளிட்ட சில உயிரியல் பூங்காக்களில் விலங்குகளை பொதுமக்கள் தத்து வளர்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இப்போது, வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் மிருகங்களைத் தத்து எடுப்பதற்கு அனுமதியளிக்க இப்பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

1855ல் தேற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். சென்னையிலிருந்து 30 கீ.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்காவில் 170க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளது. இந்தத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என நிர்வாகம் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது இத்திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை தனிப்பட்ட ஒருவருக்கு எத்தனை நாள்களுக்கு தத்து கொடுப்பது என்பது பற்றி ஓர் முடிவுக்கு வந்துள்ளது பூங்கா நிர்வாகம்.

இந்த புதிய திட்டத்தின்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை ஒருவர் ஓராண்டு வரை தத்து எடுத்துக்கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் விலங்குக்கு ஆகும் செலவுக்கு அவர் பொறுப்பு ஏற்கலாம். அதிகபட்சமாக ஓராண்டும், குறைவாகக் கூட மாதக்கணக்கிலோ, நாள்கணக்கிலோ கூட தத்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான கட்டணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. 

இதுபோன்ற திட்டம் ஒன்று புளூகிராஸ் நிறுவனத்தில் தற்போதும் நடைமுறையில் இருக்கின்றது. நம் வீட்டில் நாய், பூனை, கிளி போன்றவை வளர்க்க ஆசைப்பட்டு, அது வளர்ந்த பின்னர் ஏதோ ஒரு சூழ்நிலையில் வளர்க்க முடியாமல் போனால், புளூகிராஸ் நிறுவனத்தில் நாம்வளர்த்த பிராணியை வளர்ப்பதற்கு, பராமரிப்பதற்கு வசதிகள் இருக்கின்றது. அவர்கள் அந்தப் பிராணியை பராமரிப்பதோடு, அது எப்படி இருக்கிறது என்பதையும் நமக்குத் தெரிவிப்பார்கள்.

ஆனால் இந்தத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நாம் நம்பலாம்.

மிருகங்களைத் தத்து எடுக்கும் அமுலுக்கு வந்தவுடனே நாம் ஆளுக்கொரு மிருகத்தைத் தத்து எடுக்கலாம். அதனைப் பெருமையாகவும் சொல்லிக் கொள்ளலாம். நான் நாய் வளர்க்கிறேன். பூனை வளர்க்கிறேன். கிளி வளர்க்கிறேன் என்பதுபோல நான் சிங்கம் வளர்க்கிறேன், புலி வளர்க்கிறேன் என்றும் நாம் சொல்லிக்கொள்ளலாம்.

யானைக் கட்டிப் போரடிக்க முடியுமா? என்று எண்ணியிருந்த காலம் போய் இந்தத் திட்டத்தால் நாம் பூனையும் வளர்க்கலாம், யானையும் வளர்க்கலாம்.

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க? வண்டலூருக்கா?


(30.03.2009இல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

1 கருத்து:

பிரதிபலிப்பான் சொன்னது…

கிளம்பிவிட்டோம் வண்டலூருக்கு........