செவ்வாய், மார்ச் 31, 2009

மரமண்டைகள்

சாலையோர மரங்களைச் சீர் செய்வோம்!

சென்னையில் சில சாலைகளில் திரும்ப திரும்ப போக தூண்டும். நம்மில் சிலர் அந்தச் சாலைகளில் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி செல்வதற்கும் ஏதுவாக இருக்கும். அமைதியாகவும், காற்றோட்டமாகவும், நல்ல மன ஒட்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அந்த சாலைகள் இருக்கும். அது எந்த மாதிரியான சாலை தெரியுமா? அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள்தான் அவை.

சென்னையில் மயிலாப்பூர், போர்ட் கிளப் சாலை, போயஸ் கார்டன், மந்தவெளி, அடையாறு, பெசண்ட் நகர், கே.கே. நகர், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் இப்படி அடர்ந்த மரங்கள் நிறைந்த சாலைகள் அதிகம் காணப்படுகிறது. அமைதியான சாலையாகவும், காற்றோட்டமான சாலையாகவும், அடிக்கடி பறவைகள் கூவுகின்ற ஒலிகளும் இங்கு கேட்பதால் இந்த ரம்மியமான சாலையில் செல்ல அனைவரும் விருப்பப்படுவார்கள்.

இந்தப் பகுதிகளிலெல்லாம் எப்பொழுது இந்த மரங்கள் நடப்பட்டன என்றால் அந்தப் பகுதி மக்களுக்குக் கூட தெரியாது என்று சொல்லலாம். அத்தனை வருடங்கள் இந்த மரங்கள் அந்தப் பகுதி மக்கள் வெயிலில் வாடாமல் காத்து வருகிறது. சொல்லப்போனால் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகிறது என்று கூறலாம்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் மரத்தை நட்டார் என்று படித்திருக்கிறோமே தவிர அந்தப் பருவத்தில் மரத்தின் பயன்கள் பற்றி அறிய வாய்ப்பு குறைவு. அதன் பயன் இப்போது புரிகிறது. மரங்கள் வெயில் காலங்களில் நல்ல நிழல், குளிர்ந்த காற்று கிடைக்கிறது என்றாலும் சில இடைஞ்சல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒருநாள் நான் பைக்கில் சென்று கொண்டிருந்தேன். திடீரென்று என் தலையில் ஏதோ விழுந்தது. என்னவென்று பார்த்தேன். காய்ந்த சிறிய மரக்கிளை. நல்லவேளை ஹெல்மெட் அணிந்திருந்தேன். தலைக்கு வந்தது ஹெல்மேட்டோடு போச்சு. எதனால் இப்படி?

சமீப காலத்தில் நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மிகவும் குறைவுதான். மரங்களெல்லாம் நடப்பட்டு, வளர்ந்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டதால், மரங்களுக்கும் வயதாகி விட்டது.

நீண்டு, நெடிய மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சாலையிருக்கும் விளக்குகளின் வெளிச்சம் சாலையில் சரிவர தெரிய மறுக்கின்றது. அதேசமயம் மரங்களின் மேல்தான் கேபிள் ஓயர்கள் அதிகம் செல்கின்றன.

மழைக் காலங்களில் சில மரங்கள் வேரோடும் சாய்ந்து விடுகின்றன. சில இடங்களில் மரங்களின் கிளைகளும் ஓடிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, ஆமை வேகத்தில் வாகனங்கள் செல்வது வாடிக்கை. அன்றைய தினம் அந்த வழியாகச் செல்லும் அத்தனை பேரும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.

இலையுதிர் காலத்தில் மரங்களிலுள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து, சருகாகி சாலையில் விழுந்து குப்பையாகி, வீதிகளைக் குப்பையாக்குவதோடு நில்லாமல் காற்றில் பறந்து அந்தப் பகுதியையும் அந்த பகுதியிலுள்ள வீடுகளும் குப்பையாகின்றன. உதிர்ந்த சருகுகளால் கால்வாய்களும் அடைத்துக் கொள்கின்றன. இதனால் சாக்கடையில் நீர் போக வழியில்லாமல் நிரம்பி வழிவதோடு, கொசுக்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மழைக் காலங்களில் வேகமாக அடிக்கின்ற காற்றில் முதிர்ந்த மரங்கள் வேரோடு கீழே சாய்கின்றன. அப்படி சாயும்போது மரத்திற்கு அருகிலிருக்கும் வீடுகள், கடைகள், வாகனங்கள் போன்றவை சேதமுறுகின்றன. மரங்கள் சாய்ந்து விழும்போது, கேபிள் ஓயர்களும், டெலிபோன் ஓயர்களும், சில சமயம் மின்சார கம்பியும் அறுந்து கீழே விழுகின்றன. ஓயர்கள் அறுந்துகிடப்பதை அறியாத ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் மின்õசரத்துக்கு பழியாக நேரிடுகின்றன. சில சமயங்களில் மனிதர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

என் நண்பர் ஒருவர் வீட்டுக் காம்பவுண்ட் சுவருக்கு அருகில் இரண்டு மரங்கள் இருக்கின்றன. ஒரு மரத்தின் கிளை அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அருகில் செல்கிறது. இதனால் சமூக விரோதிகள் மரத்தின் வழியாக நுழைந்து விடுவார்களோ? என்று பயப்படுகிறார். அவர் பயப்படுவதும் நியாயம் தானே?

இன்னொரு நண்பரின் புலம்பல் வேறுவிதமாக உள்ளது. ‘தண்ணி வரலேன்னு கொஞ்சம் கொஞ்சம் அதிக ஆழத்தில் ஃபோர் போட்டிருக்கேன். இப்பப் பாத்தா வெளியில இருக்கிற மரத்தோட வேர் குறுக்கே போகுது. என்ன பண்ணுறது?’ என்கிறார்.

சில சாலைகளில் மரங்கள் வளைந்தும் நெளிந்தும் வளர்ந்திருக்கின்றனர். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் தலை மரத்தில் மோதுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே வளைந்து நெளிந்து செல்லும் மரங்களை சீர்படுத்தினால் நன்றாக இருக்கும். சில சாலைகளில் மாநகர் பேருந்துகளே செல்வதற்குத் தடையாக இருக்கிறது மரங்கள்.

இவற்றையெல்லாம் சென்னை மாநகராட்சி கண்டறிந்து சீரமைப்பது அவசியமாகிறது. அதுபோல சில மரங்கள் இலைகளே இல்லாமல் பிரம்மாண்டமாக நிற்கின்றன. சில மரங்களில் இலைகள் இல்லாத கிளைகள் இருக்கின்றன. இவ்விரண்டையும் சரி செய்தால் ஓரளவு தீர்வு காணமுடியும்.

சில மாதங்களுக்கு முன் பாண்டி பஜார், பனகல் பார்க் போன்ற சில இடங்களில் சென்னை மாநராட்சி தேவையற்ற மரங்களை வெட்டி இருக்கிறார்கள். மரம் வெட்டுவதைக் கண்டவர்கள் ‘ஐயோ இப்படி மரங்கள வெட்டுகிறார்களே’ என்று கூறியவர்கள் அதிகம்தான்.

நாம் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தை பிறந்தவுடன், ஒரு மரத்தை நடவேண்டும் என்று அரசு கூறுகிறது. அதே சமயத்தில் தேவையற்ற மரங்களை அகற்றுவதை தவறு என்று சொல்ல முடியாது. சரி தேவையற்ற மரங்கள் என்றால் எவை? முதிர்ந்த மரங்கள், இலைகளே இல்லா மரங்கள், சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்து நிற்கும், கிளைகள் போன்றவைதான். இவைகளை அகற்றுவதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே நீண்ட காலமாக சாலையோரங்களில் இருக்கும் மரங்களை தேவையானால் அகற்றுவதும், சரியாக பராமரிக்க வேண்டியதும் இப்போதைய உடனடித் தேவை.
0
(26.03.2009 அன்று ஆல் இண்டியா ரேடியோ “நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை: