சனி, ஏப்ரல் 10, 2010

குழந்தைகளுக்கு முதலிடம் தாருங்கள்...

எத்தனையோ விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் போயிருப்போம். குறிப்பாகக் குழந்தைகள் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குழந்தையின் நிலையிலிருந்து, குழந்தைக்கேயான இயல்பான சிக்கல்களை நாம் பார்த்திருக்கிறோமா என்பதை இப்போது நினைத்துப் பார்க்கவேண்டியது மிக அவசியமாக இருக்கிறது. இந்த விஷயத்துக்குள் ஆழமாகப் போவதற்கு முன்னால் ஒரு சிறு சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.

சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆடிட்டோரியங்களில் ஒன்று அது. அங்கே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்த விழாவில் பல பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருந்தன. விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று சொல்லியிருந்தார்கள். இரண்டரை மணிக்கே பள்ளி மாணவர்கள் எல்லாம் வந்திருந்து வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். வந்திருந்த மாணவர்களில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் நிறையபேர் இருந்தார்கள். கூடவே, அவர்களுடைய பெற்றோர்களும் வந்திருந்தார்கள். என்னென்னவோ காரணங்களால், மூன்றரை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சித் தொடங்குவதற்கு முன்பாக, மேடையில் பேசப் போகிறோமே, பாடப் போகிறோமே, ஆடப் போகிறோமே என்கிற பயம் கொஞ்சம்கூட இல்லாமல் அந்த மாணவர்கள், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் அம்மாவின் மடியைவிட்டு இறங்காமல் உட்கார்ந்திருந்தார்கள். சில குழந்தைகள் பக்கத்தில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மூன்றரை மணிக்கு அறிவிப்பாளர் வந்தார். முதல் நிகழ்ச்சியாக குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடைபெறும், அதன்பின் முக்கிய விருந்தினர்கள் பேசுவார்கள், இறுதியாக பாராட்டு விழாவும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று சொன்னார். அவர் கூறியபடியே குழந்தைகளின் கலைநிகழ்ச்சி முதலில் தொடங்கியது. அது முடிந்ததும் குழந்தைகள் மேடைக்கு அருகிலேயே அமர வைக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு, முக்கிய விருந்தினர்களும் விழா அமைப்பாளர்களும் மாறி மாறிப் பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்குத் தங்கள் பேச்சைக் கேட்க எதிரே ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்கிறதே என்கிற உற்சாகம். குழந்தைகளால் எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல், ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி பேச்சில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றோர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமை இழந்துகொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் வந்திருந்தவர்களுக்கு ஒரு கப் டீ கூட கொடுக்கவில்லை நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.

எல்லோரும் பேசி முடித்தபோது மணி ஐந்தரை. அதற்குப் பிறகு முக்கிய விருந்தினர்களை அமைப்பாளர்கள் பாராட்டி, விருதுகளும் பரிசுகளும் கொடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஒரு குழந்தையின் தந்தை விழா அறிவிப்பாளரிடம் போனார்.

‘சார், குழந்தைகளெல்லாம் ஒரு மணிக்கு சாப்பிட்டுட்டு வந்தாங்க. இப்போ மணி அஞ்சரைக்கும் மேல ஆகுது. முதல்ல அவங்களுக்கு பரிசைக் குடுத்து அனுப்புங்க. அதுக்கப்புறம் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துங்களேன்!’ என்று சொல்லிப் பார்த்தார்.

‘அதெல்லாம் முடியாது சார். எல்லா நிகழ்ச்சிகளும் முடிஞ்சபிறகுதான் குடுக்க முடியும். இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா, உங்க குழந்தையைக் கூட்டிட்டுப் போங்க!’ என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட்டார். எங்கே, எல்லாக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் போய்விட்டால், கூட்டம் குறைந்துவிடுமே என்கிற பயம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு.

அறிவிப்பாளரிடம் பேசியவருக்குக் கோபம் வந்துவிட்டது. சட்டென்று தன் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போனார். அவரைத் தொடர்ந்து நிறையபேர், தங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே போக ஆரம்பித்தார்கள்.

இது மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. பொதுவாகவே கலை நிகழ்ச்சி என்றாலே எல்லோரும் ரசிக்கிற ஒன்று என்று அர்த்தம். அதிலும் குழந்தைகள் பங்கேற்கிற கலை நிகழ்ச்சி என்றால் சொல்லவே வேண்டாம். பங்கேற்கும் குழந்தைகளின் குடும்பத்திலுள்ள எல்லோருமே ஆர்வத்தோடு நிகழ்ச்சியைக் காண வந்துவிடுவார்கள். சம்பந்தப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் மட்டுமல்ல; எந்தக் குழந்தை நடனம் ஆடினாலும், யோகாசனம் செய்தாலும், ஜிம்னாடிக்ஸ் போன்ற கடினமான வித்தைகளை செய்து காட்டினாலும், பார்க்கிற ஒவ்வொருவருடைய கைகளும் தானாகக் கரவொலி எழுப்பும். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இப்படி குழந்தைகள் நடத்தப்படுவது தவறு என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்குக் காரணம், அவர்கள் நிகழ்ச்சி நன்றாக நடைபெறவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, வருகிறவர்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. குழந்தைகள் பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

மாணவர்களோ, குழந்தைகளோ வந்து அமர்ந்த சிறிது நேரத்தில், அவர்களுக்கு பிஸ்கட், பழம் போன்றவற்றை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். இதற்கும் சேர்த்து, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டியது மிக அவசியம். அதே போல, குழந்தைகள் ஒவ்வொருவரும் கலைநிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்தவுடன், குளிர்பானமோ, அல்லது சூடான பானமோ தரவேண்டும். நிகழ்ச்சி நான்கு மணி நேரத்தையும் தாண்டிப் போகிறது என்றால் சிற்றுண்டி தரவேண்டும்.

இதன்மூலம் குழந்தைகளும் மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அனுப்பும் பெற்றோர்களும் கவலையின்றி காத்திருப்பார்கள். அதே போல ஒரு பள்ளி, வெளி நிகழ்ச்சிகளுக்குப் பள்ளிக் குழந்தைகளை அனுப்பும்போது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சரியாக கவனிக்கிறார்களா என்று சோதிக்கவேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ‘உங்கள் குழந்தை இங்கே நடனமாடுகிறது‘ என்று சொல்லிவிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக சில பள்ளிகள் நினைக்கின்றன. அது தவறு.

குழந்தைகளின் திறமை வளர்ப்பது முக்கியம்தான். அதேசமயம் மணிக்கணக்காக, அவர்கள் காத்திருக்கும்போது, அந்தப் பிஞ்சு உள்ளங்கள் வாடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம்.


(29.03.2010 ல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

3 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

very useful post.. bt none wl find it so.... any how ... congrats for ur efforts... write more over society conflicts....

பெயரில்லா சொன்னது…

முத்துகணேஷ்,

மிகவும் மோசமான நிகழ்ச்சி. ஆனால் இது எங்கோ ஓர் இடத்தில் நடப்பது அல்ல. பெரும்பாலும் பள்ளி விழாக்களில் கூட இதுபோன்ற நிகழ்ச்சிகள் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்லதொரு பதிவு.

ஆடல்பாடல்மட்டும்தான் பிள்ளைகளின் திறமை என்று சிறுவயதிலே அவர்களின் மற்றதிறமைகள் முடக்கபடுவது வேதனைகுறிய விச[ய]மே