Monday, April 19, 2010

ஏமாற்றாதே ஏமாறாதே

முட்டாள்கள் தினம்

ஏப்ரல் ஒன்று. இந்த தினத்தை நினைத்ததுமே நாம் ஏமாந்துபோன, முட்டாள்களான பல சம்பவங்கள் நம் நினைவுக்கு வரும். படிக்கிற காலத்தில், சக தோழர்கள், நம் சட்டையில் இங்க் தெளித்திருப்பார்கள். ‘உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்கண்ணா!’ என்று தம்பியோ, தங்கையோ சொல்ல, எழுந்து போய்ப் பார்த்து யாரும் இல்லாமல், ஏமாந்துபோய்த் திரும்பி வந்திருப்போம். இது போல பல சம்பவங்கள் நம் எல்லோருக்குமே நிகழ்ந்திருக்கும். இன்றைக்கும், குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரைக்கும், ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மற்றவரை எப்படி முட்டாளாக்குவது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சரி. முதலில், ஏப்ரல் 1-ஆம் தேதியை ஏன் முட்டாள்கள் தினமாக உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள் என்று பார்த்துவிடுவோம்.

ஆரம்பத்தில், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகத்தான் கொண்டாடியிருக்கின்றன. போப்பாண்டவரான 13-ஆம் கிரகோரி பழைய ஜூலியன் ஆண்டு கணிப்பு முறையை மாற்றி, கிரகோரியன் ஆண்டு கணிப்பு முறையைக் கொண்டுவந்தார். அதனால், அவர் பெயரிலேயே இந்த கேலண்டர் முறை அழைக்கப்பட்டது. கிரகோரியன் கேலண்டரின் அடிப்படையில்தான் நாம் ஜனவரி 1-ஆம் தேதியைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

உலகமெங்கும் கிரகோரியன் கேலண்டர் முறை அமுலுக்கு வந்த பின்னும்கூட, சில நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஜனவரி 1-ஆம் தேதியை புத்தாண்டு தினமாகக் கொண்டாடாமல், பழைய முறைப்படி ஏப்ரல் 1-ஆம் தேதியைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள். அப்படிப் பழைய புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ‘முட்டாள்கள்’ என்று மற்றவர்கள் அழைத்தனர். அன்றைக்கு ஆரம்பித்தது ‘முட்டாள்கள் தினம்.’ அதனால்தான், இன்றுவரைக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள் தினமாக எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. காலப்போக்கில், இந்த தினம் ஒருவரை முட்டாளாக்குவதற்கு அல்லது ஏமாற்றுவதற்கு என்று மாறிப் போனது.

இந்த நாளில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது. இந்த ஏப்ரல் 1ஆம் தேதி மட்டும்தான் முட்டாள்கள் தினமா? நிச்சயமாக இல்லை. ஏமாறுபவர்களுக்கு, ஒவ்வொரு தினமுமே முட்டாள்கள் தினம்தான். நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில், தினமும், யாராவது ஒருவரால் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது சரி என்றுகூடத் தோன்றும்.

ஒரு வங்கிக்குச் செல்கிறோம். யாரோ ஒருவர், ‘சார் உங்க பேனாவைக் கொஞ்சம் குடுங்க சார்!’ என்று கேட்கிறார். நாமும் கொடுத்துவிடுகிறோம். அதற்குள் கவுண்ட்டரில் நமக்கு அழைப்பு வர, நம் வங்கி வேலையை முடித்துவிட்டு அப்படியே வீட்டுக்குத் திரும்பிவிடுகிறோம். வீட்டுக்கு வந்ததற்குப் பிறகுதான் பேனாவை வாங்காமல் வந்தது நினைவுக்கு வரும். அப்படியானால், நாம் முட்டாளாகிவிட்டோம், ஒருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை. இதற்குப் பெயர் மறதி. சில சமயங்களில் மறதிகூட நம்மை ‘முட்டாள்’ என்கிற நிலைக்குக் கொண்டுபோய்த் தள்ளிவிடுகிறது.

அதே போல பேருந்தில் டிக்கெட் எடுத்தபிறகு, கண்டக்டர் சில்லறை இல்லை என்பார். நம் நிறுத்தம் வந்ததும் சில்லறை வாங்காமல் இறங்கிவிடுவோம். இதற்கு கண்டக்டர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்று பொருளா? நிச்சயமாக இல்லை. இதுவும் நம் மறதியால் வந்த இழப்புத்தான். எனவே, எப்போதும் மறதியை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

சிலபேர் வேறொரு ரகம். வீட்டில் இருந்துகொண்டே, மனைவியிடம் ‘இல்லை’ என்று சொல்லச் சொல்வார்கள். செல்ஃபோனில் அழைப்பு வரும் எண்ணைப் பார்த்தே ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். இதெல்லாம்கூட சில்லறைத்தனமான ஏமாற்றுகள். சம்பந்தப்பட்ட நபரின் குண இயல்பைப் புரிந்துகொண்டால், நாம் எளிதாக அவரிடம் இருந்து கழன்றுகொள்ளலாம். ஆனால், நிஜத்தில் நம்மை ஏமாற்றுகிறவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதுதான் நமக்கு மிக, மிக அவசியம்.

எத்தனை நாளிதழ்களில் பார்க்கிறோம்! ‘முதியவரை ஏமாற்றிக் கொள்ளை’, ‘இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர்’, ‘வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு’, ‘அதிக பணம் தருவதாகச் சொல்லி பொதுமக்களை மோசடி செய்த நிதி நிறுவனம்’, இப்படிப் பல செய்திகள் தினமும் வந்தபடிதான் இருக்கின்றன. ஆனாலும், மக்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? ஏமாற்றுபவர்கள் இல்லை. நாம்தான் காரணம். நாம் ஏமாறத் தயாராக இருப்பதால்தானே, ஏமாற்றுபவர்களின் வலையில் விழுகிறோம்? கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தால் போதும். நம்மை முட்டாளாக்க யாராலும் முடியாது.

தமிழக காவல்துறை மோசடிப் பேர்வழிகளைப் பற்றி எத்தனையோ எச்சரிக்கைகளை அவ்வப்போது செய்துகொண்டுதான் இருக்கிறது. அதே போல், பல அரசு அமைப்புகளும், தனியார் தொண்டு நிறுவனங்களும் ‘விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து போகாதீர்கள்! சந்தேகப்படும்படியான நபர்களை அண்டவிடாதீர்கள்! அது ஆபத்து!’ என்றெல்லாம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும், நம்மில் பெரும்பாலானோர் அந்தக் குரல்களுக்கு செவி சாய்ப்பதில்லை. கவனக்குறைவாக, அசட்டையாக இருந்துவிடுகிறோம். விளம்பர வசீகரத்தில் மயங்கி, அல்லது பொய் வார்த்தை ஜாலங்களால் ஈர்க்கப்பட்டு ஏமாந்துவிடுகிறோம். இப்படி பல பேர் முட்டாள்கள் ஆவதற்கு அடிப்படைக் காரணம், ஆசை. அதைவிட, எளிதில் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களைக்கூட நம்பிவிடுகிற நம் சுபாவம். இதை நிச்சயம் ஒவ்வொருவரும் மாற்றிக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாம் ஒன்றை கடுமையாகப் பின்பற்றுவது என்பதை உறுதி செய்துகொள்வோம். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது. விளம்பர வார்த்தைகளுக்கோ, நம்மை மயக்கி குழியில் தள்ளப்பாக்கும் வார்த்தை ஜாலங்களுக்கோ மயங்காமல் இருப்பது. இதைக் கடைப்பிடித்தாலே போதும். ஏப்ரல் ஒன்றாம் தேதி மட்டும் இல்லை. எந்த நாளுமே நம் ஒவ்வொருவருக்கும் முட்டாள்கள் தினமாக இருக்காது.

(01.04.2010 ல் ஆல் இண்டியா ரேடியாவில் வாசிக்கப்பட்டது.)

0 கருத்துரைகள்: