புதன், ஏப்ரல் 01, 2009

பொங்கியெழு வைகோ!




இன்னுமா யோசனை?

2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தது தேர்தல் கமிஷன். அதன்பின் எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற அமர்க்களம் முடிந்தது. தமிழ்நாட்டில் கூட்டணி காட்சியில் மிக சிறப்பாக பங்காற்றியவர்கள் விஜயகாந்தும், ராமதாஸும்தான். இவர்கள் இருவரும் பத்திரிகையாளர்களை இதோ, அதோ என்று போக்குக் காட்டியது திரைப்படத்தில் வரும் சேஸிங் சீனை விட விறுவிறுப்பாக இருந்தது என்றே சொல்லலாம்.

அடுத்து தொகுதி பங்கீடு.

விஜயகாந்த் தனித்துப் போட்டி என்பதால் பிரச்னையே இல்லை.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் மிகச் சுலபமாக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது.

பாஜக கூட்டணி என்று ஒன்று உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிமுக கூட்டணியில் டாக்டரண்ணனுக்கு லம்ப்பா 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கு தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதிமுகவே கதி என்றிருந்த மதிமுக எத்தனை தொகுதி? என இதுவரை இரண்டு கட்சிகளும் வெளிப்படையாக கூறவில்லை. ஜெயலலிதா மதிமுகவுக்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்? ஏழா? ஐந்தா? நான்கா? மூன்றா? இரண்டா? போதும் போதும் இதற்குமேல் என்ன சொல்ல.

‘பொறுத்தது போதும் பொங்கியெழு!’

கலைஞர் வசனம்தான் என்றாலும் தற்போது ‘வைகோ’வுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.

வைகோ சிறந்த பேச்சாளர், சிறந்த தொண்டன். ஆனால் சிறந்த தலைவரா என்றால் மறுப்பவர்கள் அதிகம்.

கட்சியைப் பொறுத்தவரையில் கட்சி நிர்வாகிகளை அனுசரித்து, அரவணைத்துச் செல்லும் திறமை வைகோவிடம் இல்லை. வைகோ பின்னால் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் வந்துவிட்டார்கள். ஒருத்தர் பின் ஒருத்தராக சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். கேட்டால் மதிமுக உடைக்க கலைஞர் சதி செய்கிறார் என்பார்?

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதில் எவ்வித உபயோகமும் இல்லை. ஆனால் வைகோ திரும்ப திரும்ப அரைத்துக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவருக்கு அரசியல் தெரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். வைகோ வாய் சொல்லில் வீரனாக மட்டுமே இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

நேற்று முளைத்த தேமுதிக தனித்து நிற்கிறது. சமக (சரத்குமார் கட்சி) புத்திசாலித்தனமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. எப்படியும் 15 தொகுதிகளில் நிற்கலாம் என தெரிகிறது. பிறந்து 15 மாதங்கள் ஆகாத கட்சிகள்கூட புத்திசாலித்தனமாக இருக்கிறது.

மதிமுக பிறந்து இந்த மே மாதம் வந்தால் 15 வயது பூர்த்தியாகப் போகிறது. ஆனால் ஆரம்பித்தபோது இருந்த நிலையைவிட தற்போது அதிக அளவு தேய்ந்து, தளர்ந்து காணப்படுகிறது.

மதிமுகவை காப்பாற்றுவாரா வைகோ?

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
butterfly Surya சொன்னது…

அண்ணாச்சி. ஏன் இப்படி.காமெடி பண்றீங்க..??

புதிய தமிழகம் பற்றி ஒண்ணும் சொல்ல வில்லையே..??

அடுத்த பதிவு அதுதானா..??

கோவில்பட்டி வீரலஷ்மி சொன்னது…

மக்களாட்சி படத்துல ‘சைகோ'ன்னு நடிச்சாரே லிவிஸ்டன் - அவரைக்கூட ரசிக்கலாம். நிஜ ‘வைகோ'வை சகிச்சுக்க முடியல.